Saturday, February 10, 2024

பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு

பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு  -  ஒரு சிறப்பு ரிப்போர்ட்.....!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சார்பில், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடையவதற்காக பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. முதல் நாளில் பங்கேற்று,  மாநாட்டை தொடங்கி வைத்த, தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இறுதிநாளின்  நிறைவு விழாவிலும் கலந்துகொண்டார். 

வியக்க வைத்த 40 அரங்குகள்:

தமிழக மக்களை மிகவும் வியப்பு அடையச் செய்த இந்த மாநாட்டில், மொழி தொழில் நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள், இலக்குகள், தமிழ் மொழியை நவீன யுகத்திற்கு ஏற்ப கொண்டு செல்லுதல் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த 40க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகளில், மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், மொழி தொழில்நுட்பங்கள் குறித்து அவர்கள் இதுவரை அறிந்துகொள்ள முடியாத, வியப்பு அளிக்கும்  பல அற்புதமான தகவல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானதாக மாறிவிட்டதால், எதிர்காலத்துக்கு தேவையான பெரும் தமிழ் தரவுகளைத் திரட்டுவது மிகவும் அவசியம். நவீன விஞ்ஞான யுகத்தில், எதிர்காலத்தில் மொழி முன்வரிசைக்கு செல்லும் என்பதால், தமிழ் மொழியை எப்படி பயன்படுத்துவது என்பதை விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இந்த பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு மிகப்பெரிய அளவுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்தது. 

தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு: 

மூன்று நாட்கள் மிகுவும் அற்புதமான முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ் அறிஞர்கள்,  தொழில்நுட்ப வல்லுநர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர், மொழியியலாளர்கள் என  50க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு, பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். குறிப்பாக, "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில், சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில் நாதன் ஆற்றிய உரையில், பல வியப்பு அளிக்கும் தகவல்கள் கிடைத்தன.  இதேபோன்று, கார்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மதன் கார்கி, "செயற்கை நுண்ணறிவும் கலைகளும்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு உரையை நிகழ்த்தினார். 

"தமிழ் பேசும் இயந்திரத்தை உருவாக்குவோம்" என்ற தலைப்பில், அமெரிக்க பேராசிரியர் டாக்டர் வாசு ரங்கநாதன் பேசியபோது, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் மொழிக்காக புதிய புதிய இயந்திரங்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினார். 

இதேபோன்று, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.என்.சி.வெங்கடரங்கன், ஆற்றிய உரையில் "செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சாட்-ஜிபிடியில் தமிழ்ப் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வது" தொடர்பான பல நல்ல தகவல்கள் கிடைத்தன.  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், டாக்டர் எம்.ராஜேந்திரன், "தமிழும் தொழில்நுட்பமும்" என்ற தலைப்பில் மிக அருமையான உரையை நிகழ்த்தினார். 

மலேசிய நாட்டைச் சேர்ந்த முத்து நெடுமாறன், "அழகியலை நோக்கித் தமிழ் எழுத்துருவியல்" என்ற தலைப்பிலும், கோவையைச் சேர்ந்த ராஜு கந்தசாமி, "செயற்கை நுண்ணறிவில் மரபுத்தமிழ்" என்ற தலைப்பிலும்,  சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பா.ராகவன், "டிஜிட்டல் உலகில் தமிழ் வாசிப்பு: நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பிலும், தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் 5 பேர், "விக்கிப்பீடியா கற்போம். இணைத்தமிழ் வளர்ப்போம்" என்ற தலைப்பில் பேசியபோது தமிழ் மக்களுக்கு பல அற்புதமான, அரிய, நல்ல தகவல்களை அளித்தனர். 

கருத்தரங்கங்கள் மற்றும் விவாதங்கள்:

இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக, 40க்கும் மேற்பட்ட குழு விவாதங்கள், ஏழு கருத்தரங்கங்கள், 35க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநாட்டில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முக்கிய தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ் மொழியை எப்படி பயன்படுத்துவது? நவீன யுக்திகளை எப்படி, கையாளுவது? போன்ற அரிய தகவல்களை அளிக்கும் வகையில் தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து இருந்தன. இந்த புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளை பார்வையிட்டபோது, தமிழ் மொழியை இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியும்? எப்படி அற்புதமாக கையாள முடியும்? என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 

பழந்தமிழ் இலக்கியத்தை உணர்ந்து கொள்வதற்கான அறிவியல் கருவிகள், ஓலைச்சுவடிகளை தமிழ் எழுத்தாக மாற்றி அமைக்க உதவும் கருவி போன்றை மாநாட்டின் சிறப்பம்சங்களாக இருந்தன. தமிழ் பேசும் இயந்திரம், காற்றில் தமிழில் எழுதும் புதுமையான வழிமுறை, கணினி தமிழுக்காக தமது அறிவையும், ஆற்றலையும் செலவிட்ட ஆளுமைகளான வா.செ.குழந்தைசாமி, நா.கோவிந்தசாமி, மு.ஆனந்த கிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் ஆகியோரின் பெயரில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு அரங்குகளில், அந்த அறிஞர்களின் கடுமையான உழைப்பு, பணி, தமிழ் ஆர்வம் தொடர்பான செய்திகள் இடம்பெற்று இருந்தன. இந்த அரிய தகவல்கள் நம்மை வியப்பு அடையச் செய்தன. 

இந்தியாவில் முதல்முறை:


செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநாடு நடத்தப்பட்டது தமிழ்நாடு அரசு தான் என்ற மிகப் பெரிய பெருமை, சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு மூலம் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது.  ஓலைச்சுவடிக் காலத்தில் இருந்து, இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரையிலும் அனைத்துத்துறைகளிலும், கோலோச்சி வரும் அற்புதமான மொழியாக தமிழ் மொழி இருந்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியின் நிலையைக் குறித்து ஆராய, புதிய சிந்தனைகளை உருவாக்க இளம் திறமையாளர்களை அடையாளம் காண நடத்தப்பட்ட இந்த மாநாடு, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ் மொழியை, கணினிக் காலத்துக்கு மட்டுமல்லாமல், அடுத்து வரும் மிகப்பெரிய சவால்கள் நிறைந்த காலத்துக்கும் நிலைநிறுத்தும் என்பது உறுதி. 

தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக் கொண்டு இருக்காமல், பழம்பெருமையைத் தக்க வைத்துக் கொண்டு,  நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழை, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது மிகவும் அவசியம். அந்த வகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி, மேம்பாடு, உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பெருமைகளை எடுத்துக் கூறுதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தமிழ் மொழியை கொண்டு சென்று சேர்க்கும் வகையில், பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாட்டை, தமிழக அரசின் சார்பில் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அனைவரும் பாராட்ட வேண்டும். தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு இதுபோன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாம் பங்கேற்று அற்புதமான தகவல்களை திரட்டியபோது, இத்தகைய விருப்பங்கள், ஆசைகள், எண்ணங்கள் நமக்கு பிறந்தன. "வாழ்க அன்னைத் தமிழ்". மேலும் மேலும், தமிழ் மொழி சிறப்பான வளர்ச்சியைப் பெற்று  மக்களின் உள்ளங்களில் இடம்பெற்று, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும். அதன்மூலம் தமிழ் மொழி இன்றும் எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: