உயர்ந்த மனிதர்களின் நல்ல குணங்களும் பண்புகளும்.....!
ஏக இறைவனால் வழங்கப்பட்ட இந்த மனித வாழ்க்கை அழகானது., மிகவும் அற்புதமானது. அத்துடன் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது. மனித வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட குணங்கள், பண்புகள், திறமைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன. தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொண்டு, தன்னிடம் இருக்கும் குணங்களையும், பண்புகளையும் வெளிப்படுத்துகிறான் என்பதை வைத்து தான், அவனைக் குறித்தும், அவனுடைய வாழ்க்கைக் குறித்தும் மற்றவர்கள் எடைப் போட்டு பார்க்கிறார்கள்.
தன்னிடம் மறைந்துள்ள அழகான, அற்புதமான குணங்களையும் பண்புகளையும் மனிதன், மற்றவர்களிடம் வெளிப்படுத்தும்போது, அவனது வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள சிறந்த வாழ்க்கையாக அமைகிறது. தனது வாழ்க்கை குறித்தும், அதனுடைய நோக்கம் குறித்தும், நன்றாக புரிந்துகொண்டு, செயல்பட்டால், மனிதனிடம், நல்ல பண்புகள், குணங்கள் தானாக அமைந்துவிடும். இதற்கு மாறான சிந்தனை ஓட்டங்களில் மனம் பயணிக்க தொடங்கினால், வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதி இருக்காது.
சிறந்த மனிதனின் அடையாளங்கள்:
சிறந்த மனிதனின் அடையாளங்களில் முக்கியமானது, தனது சக மனிதனை நேசிப்பது, மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது, மற்றவர்களின் இன்ப, துன்பங்களில் கலந்துகொள்வது, உறவுகளை நேசிப்பது, ஏழை, எளிய மக்களிடம் அன்பாக நடந்துகொள்வது, சமுதாயத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ள நலிந்த பிரிவினரை நேசித்து, அவர்களின் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த தேவையான உதவிகளைச் செய்தல், கல்வி குறித்து மற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இப்படி ஏராளமான குணங்களையும் பண்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்பமும், துன்பமும், நிறைந்த வாழ்க்கையில், எத்தகைய சூழ்நிலையிலும், மனிதன் பொறுமையாக செயல்பட்டால், அவனை மற்றவர்கள் நேசிப்பார்கள். தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இப்படி, தங்களுடைய வாழ்க்கையில் நடந்துகொண்டவர்கள் உலகில் நிறைந்து இருக்கிறார்கள். நவீன உலகம் என்ற பேரில், உலகத்தில் தற்போது பல்வேறு நெருக்கடிகள் உருவாகி துன்பங்கள், துயரங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இத்தகையை சூழ்நிலையிலும், பலர் சிறந்த மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்தும் சென்று இருக்கிறார்கள். சிறந்த மனிதர்களின் குணங்களும், பண்புகளும் அவர்கள் மறைந்து பிறகும், மற்றவர்களிடம் எப்போதும் நினைப்படுத்திக் கொண்டே இருக்கும். சிறந்த மனிதர்களின் குணங்களையும், பண்புகளையும் அவர்கள் அடிக்கடி நினைத்து பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். மற்றவர்களிடம, அந்த உயர்ந்த மனிதர்கள் குறித்தும், அவர்களின் ஆளுமை, நல்ல குணங்கள், பண்புகள், அவர்கள் ஆற்றியச் சேவைகள் குறித்து பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திருப்தி அடைவார்கள்.
சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா:
சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகாவைப் பற்றி இஸ்லாமிய சமுதாயம் நன்கு அறிந்து இருக்கும். சமுதாயத்திற்காகவும், சமுதாய நலனுக்காகவும் அவர் ஆற்றிப் பணிகள், சேவைகள் ஏராளம். குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கும், மணிச்சுடர் நாளிதழ் சிறப்பான முறையில் வெளிவருவதற்கும் செய்த உதவிகள் ஏராளம். அத்துடன், அவருடைய கல்விச் சேவையை குறித்து நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்வியை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா, ஆலிம் முஹம்மது சாலேஹ் அறக்கட்டளையை தொடங்கி, அதன்மூலம் பல்வேறு கல்வி நிறுவங்களை நிறுவி, ஏழை, மற்றும் நடுத்தரப்பிரிவு மாணவ மாணவர்கள், நல்ல கல்வி பெற செய்த பணிகளை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது.
கல்வி என்பது சமுதாய முன்னேற்றத்திற்கான, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி என்று நூர்தீன் உறுதியாக நம்பினார். இதுவே, அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களின் அடிப்படைத் தத்துவமாக இருந்து வருகிறது. இந்த இலக்குடன் ஆலிம் முஹம்மது சாலேஹ் கல்வி நிறுவனங்கள், தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் சிறந்த கற்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சர்வதேச தரத்தின் உண்மையான நிபுணர்களை உருவாக்க உதவி செய்து வருகிறது. அறிவு மற்றும் திறன்களைப் பெற மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்கள் உதவுகின்றன.
கடந்த 1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆலிம் முஹம்மது சாலேஹ் அறக்கட்டளை, ஆர்வமுள்ள மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியில் அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து வருகிறது. நலிந்த சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் தனிக் கவனம் செலுத்துகிறது. பொருளாதார வசதி இல்லாதது ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர் கல்வியைப் பெறுவதற்கும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே தான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், இந்த கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
வியக்க வைத்த பண்புகள்:
இதுஒருபுறம் இருக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம், ஒருமுறை பேசிக் கொண்டு இருந்தபோது, சமுதாய புரவலர் எஸ்.எம். ஷேக் நூர்தீன் குறித்து, அவர் கூறிய செய்திகள், கருத்துகள் என்னை மிகவும் வியப்பு அடைந்து செய்தன. இப்படியும் உலகில் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. மனித வாழ்க்கையே பல்வேறு வியப்புகளை நிறைந்தது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது.
ஷேக் நூர்தீனின் கல்வியைச் சேவையை மட்டுமே நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் அவரது விருந்தோம்பல் குணத்தை நம்மில் பலர் அறிய வாய்ப்பு இல்லை. இதுகுறித்து கூறிய கே.எம்.கே., தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். தாம் ஒருமுறை துபாய் சென்றபோது, முதல்முறையாக ஷேக் நூர்தீனை சந்தித்ததாகவும் அப்போது, அவர் காட்டிய அன்பு, பாசம் ஆகியவை இப்போதும் தன் கண் முன் வந்து செல்வதாக கூறினார். அவரை முதல்முறையாக சந்தித்தபோதும், தாம் அவருடன் பல ஆண்டுகளாக பழகி வருவதை போன்று, நூர்தீன் பழகிய விதம், பொழிந்த பாசம், அன்பு ஆகியவை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்று பேராசிரியர் கூறி, அவரும் வியப்பு அடைந்து, என்னையும் வியப்பு அடையச் செய்தார்.
ஷேக் நூர்தீனின் பல பண்புகளை கூறிக் கொண்டே வந்த கே.எம்.கே., அவரது விருந்தோம்பல் குணம், யாரிடமும் இருக்காது பாய் என்று குறிப்பிட்டார். ஷேக் நூர்தீனை சந்திக்க செல்லும் யாரும், சாப்பிடாமல் வரவே முடியாது என்றும், சாப்பிட்டீர்களா என்ற கேள்வியே கேட்காமல், சாப்பிடுங்கள் என்று கூறியே, விதவிதமான உணவுகளை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் அவரை சந்தித்து, வெளியே வரும் வரை இது தொடரும் என்றும் பேராசிரியர் கூறினார்.
ரயில் பயணத்தில்:
ஒருமுறை ரயில் பயணத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் கே.எம்.கே. பகிர்ந்து வியப்பு அடைந்தார். தாம் பயணம் செய்த பெட்டியில், ஷேக் நூர்தீன் இருப்பதை அறிந்து அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது நூர்தீன், தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டு இருந்தாக கூறி பேச்சை சில வினாடிகள் நிறுத்திய பேராசிரியர், பின்னர் மீண்டும் தொடர்ந்தார். நூர்தீனுக்கு தாம் சலாம் சொல்லியபோது, உடனே மகிழ்ச்சி அடைந்து பதில் சலாம் சொன்ன நூர்தீன், உறக்கத்தில் இருந்து எழுந்ததும், தன்னிடம் இருந்த ஒரு உணவை கொடுத்து, இதை சாப்பிடுங்கள் என வழங்கியது இப்போதும் தன்னை வியப்பு அடையச் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
தனது பயணங்களின்போது, தன்னுடன் ஏகப்பட்ட உணவு வகைகளை எடுத்துச் செல்லும் நூர்தீன், அதை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடையும் பண்பையும், குணத்தையும் கொண்டு இருந்தார். இதுபோன்ற மனிதர்களை உலகில் பார்த்து மிகமிக அரிது என்றும் காதர் மொகிதீன் கூறி மகிழ்ச்சி அடைந்தார். நூர்தீன் காகாவைப் போன்றே அவரது சகோரர்தகள், எஸ்.எம்.உசேன் அப்துல் காதிரி, எஸ்.எம்.ஹமீது சம்சுதீன் ஆகிய இரண்டு பேரும் இருந்து வருவதாகவும் அதன் காரணமாகவே இவர்கள் மூன்று பேரும் அபூர்வ சகோதரர்கள் என அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமுதாய புரவலர் ஷேக் நூர்தீனின் குணங்கள், பண்புகள் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை குறித்து பேராசிரியர் கே.எம்.கே., கூறிதைக் கேட்டபோது, நூர்தீன் தொடர்பாக நிச்சயம் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவரது விருந்தோம்பல் குணத்தை எழுதியே ஆக வேண்டும் என மனம் விரும்பியது. எனவே கடந்த இரண்டு நாட்களாக எனக்கு அதே சிந்தனையே இருந்து வந்தது. அதே சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.
வியப்பு....வியப்பு...!
இதே சிந்தனையுடன் நான் அலுவலகம் சென்று, பகல் உணவு சாப்பிட, அங்குள்ள உணவகத்திற்கு சென்றேன். அங்கு இருக்கும் ஊழியர்கள் மிகப்பெரிய அளவுக்கு யாரையும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். நாம் வாங்கும் உணவை மட்டும் கொடுத்துவிட்டு, தங்களிடம் இருக்கும் விருந்தோம்பல் குணத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், ஷேக் நூர்தீன் குறித்து ஒரு கட்டுரை எழுத் வேண்டும் என்ற நினைப்புடன், எண்ணத்துடன், நான் கேன்டீன் சென்றபோது, அங்கு நான் கேட்காமலேயே இரண்டு உணவு வகைகளை ஊழியர் என்னுடையே மேஜைக்கு கொண்டு வந்து கொடுத்து, இதை சாப்பிடுங்கள் சார் என கூறியபோது, உண்மையிலேயே மனம் துள்ளி குதித்து மகிழ்ச்சி அடைந்தது.
ஷேக் நூர்தீனின் பண்பு குறித்து நான் எழுத வேண்டும் என்ற ஆசை காரணமாகவே நிகழ்ந்த சம்பவம் இது என உணர்ந்துகொண்டேன். ஷேக் நூர்தீனே எனக்கு விருந்தோம்பல் செய்தது போன்ற உணர்வை உணர்ந்தேன். மிகவும் வியப்பு அடைந்தேன். நல்ல மனிதர்கள் தங்களிடம் உள்ள நல்ல குணங்களையும் பண்புகளையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்துபோது அவர்கள் எப்போது வாழ்கிறார்கள். வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு ஷேக் நூர்தீன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment