மக்களை வெகுவாகக் கவர்ந்த வேலூர் புத்தகத் திருவிழா....!
தமிழக மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை நல்ல அறிவுள்ள மக்களாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் புத்தகக் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த புத்தகக் கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
வேலூர் புத்தகத் திருவிழா:
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சி, வேலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. வரும் 27-ஆம் தேதி வரை என இந்த புத்தகத் திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சரி, இந்த புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது? கண்காட்சியில் உள்ள அரங்குகளில் எத்தகைய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன? போன்ற விவரங்களை அறிய நாம் விரும்பினோம். நமது மணிச்சுடர் நாளிதழின் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், புத்தகக் கண்காட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேலூர் புத்தகத் திருவிழா குறித்து மணிச்சுடர் நாளிதழ் வாசகர்களுக்கு அவர் தரும் ஒரு சிறப்பு ரிப்போர்ட் இதோ உங்கள் பார்வைக்கு:
நூறு அரங்குகள்:
வேலூர் புத்தகத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அரங்கிலும் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற நூல் வெளிட்டாளர்கள், தாங்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான நூல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.
அரிய தலைப்புகளில் வகை வகையான நூல்கள், ஒவ்வொரு அரங்கிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக, சுகாதாரம், மருத்துவம், இலக்கியம், ஆன்மீகம், பொதுத் தேர்வுக்கு எப்படி தயார் செய்வது? போட்டித் தேர்வுக்கு செய்ய வேண்டியது என்ன? குழந்தை இலக்கியம், கதை கட்டுரை, சுற்றுலா, கணினி தமிழ், நவீன விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது அதை கண்டிப்பாக வாங்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கண்காட்சிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்ததை நாம் நேரில் காண முடிந்தது.
மக்களிடையே ஆர்வம்:
தமிழக அரசின் இந்த புதிய முயற்சிக்கு வேலூர் மாவட்ட மக்கள் மத்தியில் ஆதரவும் ஆர்வமும் இருந்தது என்றே கூறலாம். பணி நாட்களில் குறைந்த அளவில் பார்வையாளர்கள் வந்தாலும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் புத்தகத் திருவிழாவிற்கு அதிகளவு மக்கள் வந்து, நூல்களை பார்த்து மகிழ்ந்து, அவற்றின் விலையை பொருட்படுத்தாமல், வாங்கிச் சென்றனர்.
பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ மாணவியர், கல்லூரி இளைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து, தங்களது பொன்னான நேரத்தை ஆக்கப்பூர்வமான வழியில், வாழ்க்கைக்கு பயன் அளிக்கும் வகையில் செலவிட்டனர்.
இஸ்லாமிய பெண்கள் ஆர்வம்:
மிகச்சிறந்த முறையில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவிற்கு இஸ்லாமிய பெண்கள் குறிப்பிட்டதக்க அளவுக்கு சென்றது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. நாம் புத்தகத் திருவிழாவிற்கு சென்ற நாளில், ஹிஜாப், புர்கா அணிந்து கொண்டு ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கண்காட்சிக்கு வந்து இருந்தனர். இவர்களில் பலர் கல்லூரி மாணவிகள், இஸ்லாமிய பெண் மருத்துவர்கள் என்பதும் தெரிய வந்தது.
கல்வி என்பது இஸ்லாத்தில் கட்டாயம் என்பதால், ஆண், பெண் ஆகிய இரண்டு பேரும் அவசியம் கல்வி பெற வேண்டும். அது அவர்களின் கடமை. பெற்றோர்களின் பொறுப்பு. அதன் காரணமாக தான் தற்போது இஸ்லாமிய பெண்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே தான் அவர்கள் உயர்கல்வியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதுபோன்ற புத்தகத் திருவிழாவிற்கு நேரில் சென்று, தங்களது அறிவுப் பசிக்கு தேவையான நல்ல நூல் தேடி தேடி வாங்கிச் செல்கிறார்கள். அதை வேலூர் புத்தகக் கண்காட்சியில் நாம் நேரில் பார்க்க முடிந்தது.
பட்டிமன்றம், கலாச்சார நிகழ்ச்சிகள்:
ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான நூல்களை காண புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களை மகிழ்விக்க, பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம், நூல் திறன் ஆய்வு, கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் நடத்துப்பட்டன. இதில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், நூல் ஆய்வாளர்கள், வரலாற்று பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். அவர்களின் பேச்சில் அறிய கருத்துகள், தமிழ் இலக்கிய வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த பேச்சுகள், உரைகள் புத்தகக் கண்காட்சியை காண வந்த மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தன என்பது தான் மறுக்க முடியாத உண்மை. மேலும் மக்களின் பசியை போக்க சிறிய அளவில் உணவகம் அமைக்கப்பட்டிருந்தது.
அரசுக்கு பாராட்டு:
தலைநகர் சென்னையில் மட்டும் புத்தகக் கண்காட்சியை நடத்தாமல், அதை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல முடிவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். மக்கள் மத்தியில் நூல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் வாசிப்பு திறன் மற்றும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அது இன்றை நவீன காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நன்கு செய்து வருகிறது. இதுபோன்ற புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து செல்ல வேண்டும். அதன்மூலம் மட்டுமே அரசின் உயர்ந்த நோக்கம் நிறைவேறும். தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment