நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்
மூன்று வைரங்கள் போட்டி.....!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மட்டுமல்லாமல், மாநில கட்சிகளும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன. ஒருசில கட்சிகள் பல தொகுதிகளில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துவிட்டன. இதனால், மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களில் இந்த தேர்தல் களம் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள்:
நாடு விடுதலை அடைந்தபிறகு, நாடாளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் செயல்பட தொடங்கியது. இப்படி, 1954ஆம் ஆண்டு நாடாளுமன்றம் செயல்பட தொடங்கிய நாள் முதல், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் கட்சிகள் இரண்டு மட்டும் தான் உள்ளன. காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்து தான், நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து பிரதிநிதிகள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய வரலாறு இருந்து வருகிறது. நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம், வளர்ச்சி, முன்னேற்றம், அமைதி ஆகியவற்றிற்காக பணியாற்றும் இயக்கம் இ.யூ.முஸ்லிம் லீக் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். பாஜகவை போன்று மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சுகளை, கருத்துகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் எப்போதும் பேசியதில்லை. பேசுவதும் இல்லை. நாடாளுமன்ற விவாதங்களில் கண்ணியமான முறையில் வாதங்களை எடுத்துவைப்பது தான் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகளின் நடைமுறையாக இருந்து வருகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் உள்ள 25 கோடி முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், , அனைத்து சிறுபான்மையின மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாடாளுமன்றத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
மூன்று வைரங்கள் அறிவிப்பு:
விரைவில் நடைபெற இருக்கும் 18வது நாடாளுமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள பொன்னானி தொகுதியில், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அப்துல் சமத் சமதானி போட்டியிடுகிறார். மலப்புரம் தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் இ.டி.முகமது பஷீர் களம் காணுகிறார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் தொகுதியில் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என இ.யூ.முஸ்லிம் லீக் மேலிடம் அறிவித்துள்ளது. இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேரும், நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்கள். மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்கள். இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்றவர்கள். தங்களின் சிறந்த பணிகள் மூலம், மக்கள் மத்தியில் மிக அழகிய வைரங்கள் என அன்பாக அழைக்கப்பட்டவர்கள். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் களம் காணும் இந்த மூன்று வைரங்கள் குறித்து கொஞ்சம் அறிந்துகொள்வோம். வாருங்கள்:
இ.டி.முஹம்மது பஷீர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு செயலாளராக உள்ள இ.டி.முஹம்மது பஷீர், தற்போது, பொன்னானி தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். 77 வயதான இ.டி.முஹம்மது பஷீர், கடந்த 2009, 2014, 2019 ஆகிய மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது நான்காவது முறையாக மலப்புரம் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்த முஹம்மது பஷீரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, மூன்று வைரங்களில் இவர் நல்ல, சிறந்த முதல் வைரம் என்று உறுதியாக கூறலாம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில் இவர் கண்டிப்பாக அவையில் இருந்து விவாதங்களில் கலந்துகொள்வதை எப்போதும் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்.
உத்தரகாண்டில் நிகழ்ந்த மஸ்ஜித், மதரஸா இடிப்பு சம்பவம், பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் பாஜக அரசின் போக்கு, சிறைகளில் விசாரணை கைதிகளாக உள்ளவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், முஹம்மது பஷீர் பேசி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்து வரும், முஹம்மது பஷீர், நாடாளுமன்றப் பணிகளுடன், சமூக நலனில் அக்கறை கொண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தனது சேவையை ஆற்றி வருகிறார். டெல்லியில் புகழ்பெற்ற சுனாஹரி மஸ்ஜித்தை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து இவர் எடுத்து வைத்த கருத்துகள், கண்டனங்கள் தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றன. அத்துடன் தனது தொகுதி மக்களுக்காக அவர் ஆற்றிவரும் பணிகள் ஏராளம் என்பதை தொகுதி மக்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள்.
அப்துல் சமத் சமதானி:
கேரளாவில் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக இருந்து வருபவர் அப்துல் சமத் சமதானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர். மதங்கள் இடையே மோதல்போக்கு இல்லாதவர். கடந்த 1959 ஜனவரி ஒன்றாம் தேதி கோட்டக்கல் அருகே குற்றிப்புறம் என்னும் ஊரில் பிறந்தவர் அப்துல் சமத் சமதானி. தந்தை எம்.பி.அப்துல் ஹமீது ஒரு மௌலவி. அன்னை ஒற்றகத்து ஸைனபா. கோழிக்கோடு ஃபாரூக் கல்லூரியில் எம்.ஏ பட்டம் பெற்ற அப்துல் சமத் சமதானி, முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான எம்.எஸ்.எஃப்பின் தலைவராகவும், பின்னர் யூத் லீக் பொருளாளராகவும் இருந்தார். இஸ்லாமியர் நலன் என்பது பிறசமூகங்களுடனான தொடர்பாலும் உரையாடலாலும் நிகழ்வதாகவே இருக்கமுடியும் என்பதை ஆணித்தரமாக முன்வைப்பவராக மேடைகளில் பேசி வருகிறார். கேரளத்தில் உருவாகி வந்த இஸ்லாமிய தனிமைப்படுத்தல் , தூய்மையாக்கல் போக்குகளுக்கு எதிரானவர் என்பதனால் மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த, சமதானி, தற்போது அகில இந்திய செயலராகப் பணியாற்றுகிறார். சமதானி உர்தூ மொழி வல்லுநர். கேரள இக்பால் கமிட்டியை நிறுவியவர். மதினாவுக்கான பாதை என்னும் இவரது பேருரைத்தொடர் கேரளப் பண்பாட்டின் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட அப்துல் சமத் சமதானி, நாடாளுமன்ற உறுப்பினராக தனது பணிகளில் எப்போதும் தோய்வு ஏற்படாமல் பார்த்துகொள்கிறார். ஒவ்வொரு விவாதங்களிலும் கலந்துகொண்டு, தனது ஆணித்தரமான கருத்துகள் மூலம், ஆளும் தரப்பினரை கதி கலங்க வைத்து வருகிறார். மூன்று வைரங்களில் இரண்டாவது வைரமான இவர், தற்போது, கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.நவாஸ் கனி:
இ.யூ.முஸ்லிம் லீக் அறிவித்துள்ள மூன்று வேட்பாளர்களின் மூன்றாவது வைரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.நவாஸ் கனி என்பது தமிழக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமையாகும். கடந்த 2019ஆம் ஆண்டு, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் முதல்முறையாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி பாஜக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தவர். இராமநாதபுரம் தொகுதியில் இவர் ஆற்றிய பணிகள், அந்த தொகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு, அழகிய தமிழில் பேசும் நவாஸ் கனி, தொகுதி பிரச்சினைகள் மட்டுமல்லாமல், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தனது வாதங்களை எடுத்து வைக்க தவறுவதில்லை. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி பட்டியலின மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் போக்கிற்கு கண்டனம், இராமநாதபுரத்தில் தென்னை பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்., சாயல்குடி பகுதியில் நவீன பனைசார் பொருட்கள் தொழிற்சாலை அமைக்க வேண்டும்., தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், நீட் தேர்வு முறையை இரத்து செய்ய வேண்டும்., உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தனது குரலை எழுப்பியுள்ளார்.
தமிழக மற்றும் தேசிய நலன் குறித்த பிரச்சினைகளிலும் நவாஸ் கனி தலையீட்டு முக்கிய தீர்வு கண்டு இருக்கிறார். அத்துடன் கொரோனா பேரிடர் காலத்தில் தனது தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்கள் அனைவருக்கும் இவர் ஆற்றிய சேவை, பணி ஆகியவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவசியம் தேர்வு செய்யப்பட வேண்டும்:
நாடாளுமன்றத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை போல் இல்லாமல், மிகச் சிறந்த முறையில் பணியாற்றிவரும் இந்த மூன்று வைரங்களும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கண்டிப்பாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அப்போது தான், சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றிய அரசின் முன்வைத்து தீர்வு காண முடியும்.
எனவே,
மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் இ.டி.முஹம்மது பஷீர், பொன்னானி தொகுதியில் போட்டியிடும்
அப்துல் சமத் சமதானி மற்றும் இராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் கே.நவாஸ் கனி ஆகிய
மூன்று பேரையும் அந்தந்த தொகுதி மக்கள் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும். அது அவர்கள்
தங்களுக்கும், தங்களது தொகுதிக்கும், நாட்டிற்கும் செய்யும் சேவை மற்றும் கடமை என்பதை
மறந்துவிடக் கூடாது. அப்படி செய்தால் மட்டுமே, இந்த மூன்று தொகுதிகளும் மிகச் சிறந்த
தொகுதிகளாக எப்போதும் இருக்கும். தொகுதி மக்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். நாட்டிற்கும்
பயன்கள் கிடைத்து வளர்ச்சியும், முன்னேற்றமும் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
-
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
No comments:
Post a Comment