மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் பாஜக....!
கடந்த 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பிடித்த பாஜக, 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சி குறித்து பல்வேறு தரப்பினரும் தற்போது தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில், 10 ஆண்டு கால பாஜக ஆட்சி, படுதோல்வி என விமர்சனம் செய்யப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாடு படுவேகமாக முன்னேறி வருவதாக பாஜகவினர் பெருமையுடன் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில் நிறுவன நிர்வாகிகள் என அனைத்து துறையினரும், பாஜக ஆட்சியின் சாதக, பாதகங்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். சரி, பாஜகவின் இந்த பத்தாண்டு கால ஆட்சி எப்படி இருந்தது என்பதை நாமும் கொஞ்சம் அறிந்துகொள்வோம்.
அனைத்திலும் படு தோல்வி:
பாஜக ஆட்சியில் விவசாயிகளை காக்கிறோம் என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருப்பதாகவும், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வேலையின்மை உயர்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப பாஜக ஆட்சியாளர்கள் மறுப்பதாகவும், பலவிதங்களிலும் பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டியலிட்டு குற்றம்சாட்டி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. விவாதங்களில் போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை. தொலைக்காட்சிகளில் எதிர்க்கட்சிகளை முக்கியப்படுத்தி காட்டுவதில்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும், அது தான் ஜனநாயகம் ஆகும். ஆனால் அப்படி பாஜக ஆட்சியாளர்கள் நடந்துகொள்வதில்லை. விவசாயிகள் போராட்டம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. இப்படி ஏராளமான குறைகள் பாஜக ஆட்சியில் நிறைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. அத்துடன், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மற்றும் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி குறித்தும் ஒப்பு நோக்கும் பணியும் சமூக ஆர்வலர்களிடையே நடைபெற்று வருகிறது. அது தொடர்பான விவாதங்கள் தொடங்கி, நாடு முழுவரும் வேகம் எடுத்துள்ளன.
வேலையின்மை அதிகரிப்பு:
கடந்த 2012- இல் வேலையில்லா திண்டாட்டம் ஒரு கோடியாக இருந்தது. அது இப்போது நான்கு கோடியாக உயர்ந்து இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டத்தின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு 75 லட்சம் கிடைத்தது. அது, இந்த பாஜக ஆட்சியில் 29 லட்சமாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் நிறுவனங்களில் ஒன்பது லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் 15 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. உத்திரவாதம், பாதுகாப்பு அற்ற ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் என அனைத்திலும் இந்த பாஜக தோல்வியடைந்து இருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டிற்குள் 40 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக பாஜகவினர் பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை என தற்போது புள்ளிவிவரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த டிசம்பர் 2023ஆம் ஆண்டு வரை 3 புள்ளி 5 சதவீதம் பேர் மட்டுமே இந்த திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 83 சதவீதம் பேர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. மேலும், 20 சதவீதம் பேர் பயிற்சியில் இருந்து பாதிலேயே வெளியேறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் திறன் பயிற்சி மையங்களில் சேருவது 94 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதன்மூலம், போலியான ஒரு திட்டத்தை தொடங்கி, இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு அழித்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மன்மோகன் சிங் - மோடி ஆட்சி ஒப்பீடு:
ஒன்றியத்தில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ஆட்சி குறித்து பல்வேறு தரப்பினரும் தற்போது சீர்தூக்கி பார்த்து வருகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்த இருந்ததாகவும், மோடியின் ஆட்சியில் அது பெறும் 76 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் ஆட்சியில், ஜிடிபி ஆண்டுக்கு 7 புள்ளி ஏழு நான்கு சதவீதமாகவும், மோடி ஆட்சியில் ஜிடிபி ஆண்டுக்கு 5 புள்ளி ஏழு, ஏழு சதவீதமாகவும் இருந்து வருகிறது.
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்புகள், மருத்துவமனைகள், அணுசக்தி, ஐ.டி. தொழில், ஆராய்ச்சி, வளர்ச்சி என்ற முழக்கங்கள் இருந்து வந்தன. அதன்மூலம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றங்கள் கிடைத்தன.
ஆனால், மோடி ஆட்சியில், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தொழுகை, பூஜை, கலாச்சாரம் என்ற முழக்கங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. இதன்மூலம் நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மக்கள் மத்தியில் பிளவை உருவாக்கி, பிரச்சினைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 122 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெறும், 6 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்து வருகிறது.
மதச்சார்பின்மை சீர்குலைப்பு:
சோஷலிசம், மதச்சார்பின்மை என்பதே இந்தியாவின் தனித்த அடையாளம். அதனை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொது சிவில் சட்ட மசோதாவை பாஜக கொண்டு வந்தது. இந்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு, நிறைந்த இந்திய நாட்டில், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ விரும்புகிறார்கள். ஆனால், மக்களின் இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வருமான வரி, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகின்றன. இந்தியாவின் தனித்த அடையாளமாக உள்ள மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் பாஜசுவின் அனைத்து நடவடிக்கைகளும் இருந்து வருகின்றன.
வாழும் உரிமை இல்லை:
இத்தகையை சூழ்நிலையில், மதச்சார்பின்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் கூறியுள்ள ஒரு கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது. "மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அரசு மத விவகாரத்தில் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் மதச்சார்பின்மை. அரசியலமைப்பின் அடிப்படை சாரமே மதச்சார்பின்மைதான். ஒரு அரசு அல்லது அரசியல் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுத்தால், அங்கு மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மதச்சார்பின்மை இல்லை என்றால், வாழ்வதற்கான அடிப்படை உரிமை இல்லாமல் போய்விடும்" இப்படி, நீதிபதி கே.எம்.ஜோசப் மதச்சார்பின்மை குறித்து மிக தெளிவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
மதர்ச்சார்பின்மை குறித்து நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒரே சிந்தனையுடன் இருந்து வரும் நிலையில், அதனை சீர்குலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாசிச இந்து அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. மக்களின் பிரச்சினைகளை திசை திருப்ப, அடிக்கடி மத ரீதியான பிரச்சினைகளை முன்வைக்கின்றன. இதனால் நாட்டில் அமைதி சீர்குலைக்கிறது. மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றன. சச்சரவுகள் அதிகரிக்கின்றன.
கவனமாக இருக்க வேண்டும்:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைக்க பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள் முயற்சிகளில் ஈடுபடும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவின் சதி திட்டங்களுக்கு பலியாகாமல், இருக்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, வரும் நாட்கள் மிகவும் சவால் நிறைந்தவையாக இருக்கும். எனவே, இந்திய நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைக் கொண்ட அனைவரும் மதச்சார்பின்மையை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையே நமது பலம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு, அமைதியான, பாதுகாப்பான, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை மக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அது தங்களின் கட்டாய உரிமை என்பதையும் நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment