Wednesday, February 28, 2024

வெறுப்பு பேச்சுகள் அதிகரிப்பு....!


நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 

தொடர்ந்து அதிகரிப்பு....!


மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடடிக்கைகள் என பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் சாமியார்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இந்த தீர்மானத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதன்மூலம், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நரேந்திர மோடி மறைமுகமாக ஆதரிக்கிறார் என நினைக்க தோன்றுகிறது.

முஸ்லிம்களின் கல்வி பறிப்பு:


இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நல்ல கல்வி பெறக் கூடாது என்ற மிகமிக கெட்ட எண்ணத்துடன் பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு நல்ல உதாரணமாக, அசாம் மாநில அரசு இருந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள பல அரபி மதரஸாக்களை அம்மாநில பாஜக அரசு மூட உத்தரவிட்டு, அதனை தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோன்று, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய பாஜக அரசு நிறுத்திவிட்டது. உயர்கல்வி பெற முயற்சி செய்யும் முஸ்லிம் மாணவர்களின் கனவுகளை பாஜக தொடர்ந்து சிதைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூடுவதற்கு சிறுபான்மை விவகார அமைச்சகம் சமீபத்தில் முடிவு எடுத்துள்ளது. விளிம்புநிலை முஸ்லிம் மாணவர்களின் கல்வியைத் தடுக்கும் பாஜக அரசின் முயற்சிகளுக்கு ஒரு அப்பட்டமான எடுத்துக்காட்டு இது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.  "சப் கா சாத், சப் கா விகாஸ்" -அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி- என்ற பாஜகவின் சொல்லாட்சியில் உள்ள வெளிப்படையான முரண்பாட்டையும் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

சமுதாயத்தில் கல்வியில் பின்தங்கிய பிரிவினரிடையே கல்வியை முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்ட மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை, இந்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முழு நிதியுதவியுடன் இயங்கி வருகிறது. ஜூலை 6, 1989 இல் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860இன் கீழ் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, கல்வி அதிகாரத்தை வளர்ப்பதில் அறக்கட்டளை முக்கியப் பங்காற்றுகிறது. இத்தகைய நல்ல கல்வி அறக்கட்டளையை, மூட நடடிவக்கை எடுத்து இருப்பதன் மூலம் பாஜக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் எதிரானது என்பது நன்கு தெரியவருகிறது.

வன்முறைகள்:

வட மாநிலங்களில் இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் மக்களை குறிவைத்து அடிக்கடி வன்முறைகளை நடத்தி வருகிறார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனை பிரதமர் மோடியோ, மத்திய அரசோ தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. வன்முறையில் ஈடுபடும் இந்துததுவ கும்பல்களுக்கு கண்டனங்களை தெரிவிக்க மறுக்கிறார்கள். மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் வன்முறைகள் குறைத்துவிட்டன என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பது நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

25 கோடி இந்திய முஸ்லிம்கள், நாட்டில் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களது பங்களிப்பை வழங்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களை அமைதியாக வாழ பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் விடுவதில்லை. அவர்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைக்கவே இந்துத்துவ அமைப்புகள் விரும்பி, அதன்படி தங்களுடைய செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

அதிகரிக்கும் வெறுப்பு பேச்சுகள்:


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களக்கு எதிராக குறைந்தபட்சம், இரண்டு வெறுப்பு பேச்சுகள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, "இந்தியா ஹேட் லேப்" (India Hate Lab) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் 75 சதவீதம் வெறுப்பு பேச்சுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 668 வெறுப்பு பேச்சுகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் நடத்தியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 104 வெறுப்பு பேச்சுகள் அரங்கேற்றப்பட்டு, முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்தன. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கடந்த 2023ஆம் ஆண்டு, 453 வெறுப்பு பேச்சுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புதுடெல்லியில் மட்டும், 37 வெறுப்பு பேச்சுகள் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.

ஆறுதல் அளிக்கும் தென்மாநிலங்கள்:


பாஜக ஆளும் மாநிலங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தென்மாநிலங்களில் மிகவும் அமைதியான மாநிலங்களாக இருந்து வருகின்றன. இந்த மாநிலங்களில் அனைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் இங்கு நடைபெறுவதில்லை. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில், பாஜக ஆளாத மாநிலங்களில், முஸ்லிம்களுக்கு எதிராக மொத்தம் 170 வெறுப்பு பேச்சுகள் அரங்கேறப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் மீது இந்து சகோதரர்கள் எப்போதும் அன்பாகவும் சகோதரத்துவ நேசத்துடன் பழகி வருகிறார்கள். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் சீர்வரிசை எடுத்து வந்து முஸ்லிம்களிடம் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இதேபோன்று, பேரிடர் காலங்களில் அனைத்து சமுதாய மக்களுக்கும் முஸ்லிம்கள் உதவி செய்வதும், பள்ளிவாசல்களில் அடைக்கலம் வழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை சீர்குலைக்க பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சி செய்தாலும், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்து வருகின்றன.

எச்சரிக்கை மிகவும் அவசியம்:

வரும் நாட்கள் மிகவும் சவால்கள் நிறைந்தவை என்பதை இந்திய முஸ்லிம்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் ஆகியவற்றை சரியான முறையில் அவர்கள் அணுக வேண்டும். அமைதியான வழியில், வெறுப்பு பேச்சுகளை தடுக்க வேண்டும். அன்பின் மூலம் வெறுப்பை அறுக்க வேண்டும். அதன்மூலம் நல்ல மாற்றம் நாட்டில் ஏற்படும். எனினும், முஸ்லிம்கள் எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அத்துடன், வெறுப்பு பேச்சுகளை நல்ல செயல்கள் மூலம் வெல்லும் வகையில் முஸ்லிம்கள் தங்களது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

-     எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: