Wednesday, February 7, 2024

ஒவ்வொரு நொடியும்....!

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளும்....!

குளிர் காலம் முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டும், கோடைக் காலம் மெல்ல மெல்ல தொடங்கிக் கொண்டும் இருந்த, ஒரு அதிகாலை நேரம் அது. தேநீர் அருந்த  வழக்கமாக நான் செல்லும்  நாயர் கடைக்கு சென்றுக் கொண்டிருந்தேன்.  அப்போது திடீரென  "ஹலோ" என என்னை யாரோ அழைத்தது போன்று உணர்ந்தேன். அங்கும் இங்கும் திரும்பி பார்த்தபோது, யாரும் இருக்கவில்லை. ஏதோ பிரமை என நினைத்தப்படி, நான் நடையை தொடர்ந்து கொண்டு இருந்தேன். மீண்டும் அந்த குரல் என்னை அழைத்தது. ஆனால், அழைத்த குரலின் பக்கம் திரும்பியபோது, அங்கு யாரும் இல்லை. 

பின்னர், நாயர் கடைக்கு சென்று அருமையான கேரள சுவையுடன் கூடிய தேநீர் அருந்திவிட்டு, மீண்டும் அறைக்கு திரும்பிக் கொண்டே இருந்தேன். மீண்டும் "ஹலோ, கொஞ்சம் என்னை திரும்பி பாருப்பா" என அந்த குரல் அழைத்தது. எனினும், அழைத்த குரலின் பக்கம் நான் திரும்பியபோது, வழக்கம் போல யாரும் அங்கு இல்லை. அப்போது தான் என் மனம், மூளைக்கு ஒரு சமிக்ஞை அனுப்பியது. அது அடிக்கடி என்னிடம் பேசும் எனது மனதின் குரல் என்பதை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 

"என்னப்பா நீண்ட நாட்களாக ஆளையே காணும்"  என நான் கேட்க, "உனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. அதனால் தான் வரவில்லை" என அந்த குரல் கூறிவிட்டு, தனது பேச்சைத் தொடர்ந்தது.  

ஒவ்வொரு நொடியும்: 

"ஒரு முக்கிய விஷயம் குறித்து இன்று உன்னிடம் பேச போகிறேன். கொஞ்சம் கவனமாக கேள்" என்று சொன்ன என் மனதின் குரல், தனது பேச்சைத் தொடர்ந்தது. என் மனம் பேசுவதை நான் கேட்டு ரசிப்பது வழக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல நண்பன் வந்து மீண்டும், என்னை தட்டி எழுப்பி பேசிக் கொண்டு இருப்பதால், அந்த பேச்சை மிகவும் ரசித்து கவனத்துடன் கேட்க ஆரம்பித்தேன். 

"நண்பா, ஏக இறைவன் மனிதனுக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அந்த வகையில் மனித பிறப்பே ஒரு மிகப்பெரிய அருட்கொடை. எனவே மனிதனுக்கு ஏக இறைவனால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளை நாம் மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். வீணடிக்கக் கூடாது. அதன்மூலம் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்" என்று சொல்விட்டு, தனது பேச்சு சிறிது நேரம் நிறுத்திய என் மனதின் குரல், சிறிது நேரத்திற்குப் பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தது. 

"வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நம்மில் பலர் சரியாக அறிந்துகொள்வது இல்லை. அப்படி அறிந்துகொண்டாலும், அதை சிறப்பாக, முறையாக பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக வாழ்க்கையில் சிக்கல்கள், நெருக்கடிகள், ஏற்பட்டு, வாழ்க்கையே நரக வாழ்க்கையாக மாறி விடுகிறது. எனவே, நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு மணியையும் நாம் சிறந்து முறையில் பயன்படுத்த வேண்டும். ஏக இறைவன் நமக்கு வழங்கிய அழகிய வாழ்க்கையை ரசித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அப்போது தான் வாழ்க்கை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

வேண்டாம் கவலை:


நமது தோழர்களில் பலர் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கவலை அடைந்து விடுகிறார்கள். தோல்வியை கண்டு பயந்து விடுகிறார்கள். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுகிறார்கள். கவலை என்பது மனித வாழ்க்கையை முடங்கி வைத்துவிடும். உடல்நலத்தை சீர்குலைத்துவிடும். எனவே, கவலை அடைவதை விட்டுவிட்டு, எப்போதும் உற்சாகமாக இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும். கவலை அடைவதால், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

தோல்விகளை கண்டு கவலை அடைந்தவர்கள் எப்போதும் சாதனைகளை நிகழ்த்தியது இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். உலகில் சாதனை புரிந்தவர்கள் அனைவரும், தங்களுடைய தோல்விகளுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து முயற்சி செய்ததன் மூலம் மட்டுமே வெற்றிக்கனியை பறித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் வெற்றி மிக எளிதாக கிடைத்து விடுவது இல்லை. கடின முயற்சிக்குப் பிறகு ஏற்படும் தோல்விக்கு பிறகும், நாம் செய்யும் தொடர் முயற்சிகள் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதேபோன்று, குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எத்தகைய வகையில் தீர்வு காண வேண்டும் என்பதை நன்கு யோசித்து நமது காரியங்களை நாம் அமைத்துக் கொண்டால், நிச்சயம் சிறப்பான தீர்வு கிடைக்கும். கவலையால், எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. எனவே வேண்டாம் கவலை என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்:


ஏக இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு இந்த வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கு இறைவன் அற்புதமான திறமைகளை வழங்கியுள்ளான். அந்த திறமைகளை நாம் அறிந்து, அதை நன்கு வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எப்போது மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டே இருந்தால், உடலில் ஒருவித தெம்பு கிடைத்துவிடும். சில நேரங்களில் நமக்கு சோர்வு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் பேச நேரத்தை ஒதுக்கி, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். மழலைகளின் பேச்சை, சேட்டையை, விளையாட்டை ரசிக்க வேண்டும். அதன்மூலம் மனத்தில் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். 

மேலும், குழந்தைகளின் அறிவைக் கண்டு வியப்பு அடைந்து அவர்களை பாராட்ட வேண்டும். அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டு வியப்பு அடைந்து, அதை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். ஒரு குழந்தையிடம் திருக்குர்ஆனை அழகிய முறையில் வாசிக்கக் கூடிய திறமை இருக்கும். ஒரு குழந்தையிடம், அழகு தமிழில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தக் கூடிய திறமை இருக்கும். ஒரு குழந்தைக்கு இசை மீது ஆர்வம் இருக்கும். ஒரு குழந்தை உர்தூ மொழியில் புலமை உள்ளதாக இருக்கும். இப்படி, ஒவ்வொரு குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டு, அவர்களை உற்சாகப்படுத்தினால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தானாகவே வந்துவிடும். ஒவ்வொரு நொடியையும் எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை அறிந்துகொண்டு, நீங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தால், நிச்சயம், வாழ்க்கை மிகவும் பயன் உள்ள வாழ்க்கையாக இருக்கும். 

உறவுகளை நேசித்தல்:

ஏக இறைவன் மனிதனை தனியாக படைத்தாலும், அவனுக்கு அழகிய உறவுகளை ஏற்படுத்தி தந்துள்ளான். ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சமே, உறவுகள் தான். அது தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், நமது குழந்தைகள் மற்றும் உறவினர்களாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். அலுவலக சக ஊழியர்களாக இருக்கலாம். ரயில் பயணத்தின்போது கிடைக்கும் சக பயணியாக இருக்காலம். இப்படி, நமக்கு கிடைக்கும் உறவுகளை நாம் நேசிக்க வேண்டும். அவர்கள் மீது எப்போதும் அன்பு செலுத்த வேண்டும். அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் இன்பம், துன்பம், நெருக்கடி போன்ற அனைத்து நிலைகளிலும் நாம் துணை நிற்க வேண்டும். 

உறவுகளை சிறப்பாக பேணுவதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று உறுதியாக கூறலாம். இதேபோன்று, சமூகத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் பலரை நாம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அழகிய முறையில் அவர்களிடம் பழக வேண்டும். உற்சாக வார்த்தைகளை சொல்லி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, நம்மால் முடிந்த அளவுக்கு வழிகளை காட்ட வேண்டும். இதன்மூலம் நமது வாழ்க்கை மிகவும் பயன் உள்ள வாழ்க்கையாக அமையும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. உறவுகளை நேசிக்க தவறினால், வாழ்க்கையில் அமைதி, நிம்மதி நிச்சயம் இருக்காது. அத்துடன், நாம் தனிமையில் விடப்படுவோம். அதன்மூலம் வாழ்க்கை மிகவும் நெருக்கடியான வகையில் நரக வாழ்க்கையாக அமைந்துவிடும்" 

யோசிக்க வைத்த ஆலோசனைகள்:

இப்படி சொல்லிய என் மனதின் குரல், கொஞ்ச நேரம் தனது பேச்சை நிறுத்திவிட்டு, என்னிடம் மீண்டும் பேச ஆரம்பித்தது. ஆனால், அந்த பேச்சே ஒரு கேள்வியில் ஆரம்பித்தது. "ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற எனது ஆலோசனை உனக்கு சரியாக தோன்றுகிறதா?" என்று அந்த குரல் என்னிடம் கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என எனக்கு உடனடியாக புரியவில்லை. அல்லது சொல்ல முடியவில்லை. 

ஆனால்,  வாழ்க்கை என்பது அழகிய வரம் என்பதால், அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்துகொண்டே இருக்கும். எனவே, "மனதின் குரலே, நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும், சொல்லிய ஒவ்வொரு ஆலோசனைகளும், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டது. இனி ஒருபோதும் ஏக இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கையை வீணாக்க மாட்டேன். அதை சிறப்புடன் ரசித்து அனுபவித்து, நல்ல முறையில் பயன்படுத்துவேன். அதன்மூலம் எனக்கும், எனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பலன் கிடைக்கும் வகையில் வாழ்க்கையின் பயணத்தை தொடருவேன். கவலை, பயம், சோம்பல், வெறுப்பு, போன்ற குணங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு, ஒதுக்கிவைத்துவிட்டு,  எப்போதும் உற்சாகமாக இருக்கும் வகையில் வாழ்க்கையை அமைத்துகொள்வேன்" என்று மனதிற்கு பதில் சொன்னேன். 

"மிக்க மகிழ்ச்சி தோழரே. நான் வந்த காரியம் முடிந்துவிட்டது. என்னுடைய பேச்சை காது கொடுத்து கேட்டது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் இனி சிறப்பாக பயன்படுத்துவேன் என நீ சொல்லியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. உன்னுடைய எண்ணங்கள், இலக்குகள், திட்டங்கள் சிறப்பாக நிறைவேற ஏக இறைவன் துணை நிற்பானாக. நான் வருகிறேன். மீண்டும் ஒருமுறை சந்திக்கலாம்" என்று சொல்லிவிட்டு அந்த குரல் காணாமல் போனது. நான் அறைக்கு திரும்பி, நீண்ட நேரம், என் மனதின் குரலை திரும்ப, திரும்ப அசை போட்டுக் கொண்டே இருந்தேன். அப்போது எனக்கே அறியாமல் ஒருவித புதிய உற்சாகம் என்னுள் ஏற்பட்டது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: