தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - ஒரு பார்வை....!
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது மூன்றாவது நிதிநிலை அறிக்கையை, அதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த இரண்டு முறை, நிதியமைச்சராக இருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்த தங்கம் தென்னரசு, தற்போது தனது முதல் பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆலோசனைகளை ஏற்று, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை போல, தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வரும் நிலையில், இந்த நிதிநிதி அறிக்கை நிதியை மையாக மட்டும் கொண்டு தயாரிக்கப்படாமல், சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை இந்த பட்ஜெட் உறுதி செய்துள்ளது.
மக்களை கவரும் அறிவிப்புகள்:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்களை கவரும் பல நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, குடிசை இல்லாத் தமிழ்நாடு, வறுமை ஒழிப்பு, பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், மாணவர்களுக்கு கல்விக் கடன், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், நீர்நிலைப் பாதுகாப்பு, கணினிமயமாக்கம், சாலைகள், குடிநீர்வசதிகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு, தொல்லியல், விண்வெளி என பல்வேறு அம்சங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்:
தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 2 மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி நிதி ஒதுக்கீடு. மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி நிதியுதவி. ‘தரணியெங்கும் தமிழ்’ என்பதன் கீழ் மொழிப்பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பெற 2 கோடி நிதி ஒதுக்கீடு. கீழடி திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி நிதி ஒதுக்கீடு.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. அடையாறு நதிச் சீரமைப்புக்கு ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கீரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் ‘தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்’ கொண்டுவரப்படும். 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்புக்கு 500 கோடி ஒதுக்கீடு என பல நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
கல்விக்கு முக்கியத்துவம்:
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மாற்று பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். 300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கீடு. தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.
ஒரு இலட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி கல்விக் கடன் தரப்படும். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்காக அத்திட்டத்திற்கு 360 கோடி நிதி ஒதுக்கப்படும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நமது பார்வையில் பட்ஜெட்:
நிதிமையச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில், கல்விக்கு 52 ஆயிரத்து 254 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசு கல்விக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டுமானால், அவருக்கு சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும். அந்த உயர்ந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கல்விக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, நகர்ப்புற வளர்ச்சிக்கு 41 ஆயிரத்து 733 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்விற்காக 20 ஆயிரத்து 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலனுக்கு 7 ஆயிரத்து 830 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் துறைக்கு 20 ஆயிரத்து 43 கோடி ரூபாயும் நீர்வளத்துறைக்கு 8 ஆயிரத்து 398 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, சேலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும். நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்., போன்ற அறிவிப்புகளை பாராட்டாமல் இருக்கவே முடியாது.
அனைத்து மக்களின் நலன்:
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டின் ஒவ்வொரு வரிகளையும் கவனமாக படித்து பார்த்தால், ஒரு உண்மை மிகத் தெளிவாக புரிகிறது. அது, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அத்துடன், இந்தியாவிலேயே தமிழகத்தை மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றவும், அனைத்து மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் நல்ல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நம்மை பொருத்தவரை, பள்ளிக்கல்விக்கு 44 ஆயிரத்து 042 கோடியும், உயர்கல்விக்கு 8 ஆயிரத்து 212 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதை கண்டு, தமிழக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அத்துடன், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், பள்ளிப்படிப்பை, கல்லூரி படிப்பை மற்றும் கல்வியை பாதியிலேயே கைவிடும் ஏழை மாணவர்களை தடுத்து நிறுத்தும் என்று உறுதியாக கூறலாம். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள், முழுமையாக செயல்வடிவில் வரும்போது, தமிழகத்தை பிற மாநில மக்கள், வியந்து பார்க்கும் நிலை நிச்சயம் ஏற்படும் என்று உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment