காங்கிரசின் ஒரே நம்பிக்கை, மூன்று பேர் மட்டுமே....!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் அரசியல் களம் மின்னல் வேகம் எடுத்துள்ளது. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துகொள்ள துடிக்கும் பாஜக, தனது வழக்கமான அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய பிளவுகளை ஏற்படுத்தவும் திட்டங்கள் அரங்கேற்றி வருகின்றன. அக்கட்சியின் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் பாஜக இழுத்து வருகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் வலிமையில்லாத கட்சி என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, பாஜக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மிக வேகமாக அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது.
பிளவை ஏற்படுத்த முயற்சி:
அத்துடன், நாட்டின் முக்கிய பகுதிகளில் மக்கள் மத்தியில் கசப்பை உருவாக்கி, பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைய பாஜக திட்டமிட்டு, அத்தகைய செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறைகள் தொடங்கியுள்ளன. இந்த வன்முறைகளில் இந்துத்துவ அமைப்புகள் இறங்கி வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரு சமுதாய மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை உடைத்து, வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் ஊதுகுழல் ஊடகங்கள்:
அத்துடன், ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பாஜக நாட்டில் பொய்யான, பரபரப்பான தகவல்களை பரப்பி வருகிறது. பொய்யான, நம்ப முடியாத கருத்துக் கணிப்புகளை இப்போதே ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வருகிறது. அதன்மூலம், நாட்டை ஆள பாஜகவை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிகளை நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான ஊடகம், தற்போது தனது பணிகளை சுதந்திரமான முறையில், சரியாக செய்யவில்லை என்றே கூறலாம். குறிப்பாக, இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவின் ஊதுகுழலாக இருந்து வருகின்றன.
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து செய்திகள், கருத்துகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றை வெளியிடாமல், பாஜக தொடர்பான செய்திகளை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் பரப்பி வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பணிகளை, அவர்கள் குறித்து செய்திகளை ஊடகங்கள் புறக்கணித்து வருகின்றன. தற்போதைய நிலையில், ஜனநாயகத்தின் கருப்பு புள்ளியாக இந்திய ஊடகங்கள் இருந்து வருகின்றன என்பதே உண்மையாகும்.
காங்கிரசின் நம்பிக்கை:
இப்படி, மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து, மிகவும் மேசமான திசையை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும், ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு மக்கள் மத்தியில், ஒருவித வெறுப்பு இருப்பது உண்மையே. நல்ல ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஆசைப்படுகிறார்கள். அதற்காக சமூக நலனில் அக்கறை உள்ள நல்ல சிந்தனையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் இந்த விருப்பங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகள், பிரதமர் மோடி மீது, பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் வெறுப்பு ஆகியவையே தற்போது காங்கிரஸ் கட்சியின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதன்மூலம், பாஜகவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது.
முக்கிய மூன்று பேர்:
காங்கிரஸ் கட்சி நல்ல நம்பிக்கையுடன் இருந்ததாலும், எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கவுரவத்தை விட்டுக் கொடுத்து, நாட்டு நலனை கருத்தில் கொண்டு, தொகுதி பங்கீடு செய்ய இந்த கட்சிகள் முன்வரவில்லை. இதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகள், தனித்தனியாக போட்டிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி, அரசியல் களம் திசை மாறிப் பயணித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மூன்று பேர் மட்டுமே இருந்து வருகிறார்கள். இந்த மூன்று பேரின் பணிகள், தற்போதைய அரசியல் களத்தை சந்திக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள், நாட்டு நலனின் அக்கறையுடன் செயல்பட்டு, யார் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அந்த மூன்று பேரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என உறுதியாக கூற முடியும்.
மு.க.ஸ்டாலின்:
காங்கிரசின் மிகப்பெரிய நம்பிக்கை பெற்ற மூன்று பேரில், முதலாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். ஒன்றியத்தில் மீண்டும் பாஜக தலைமையிலான பாசிச ஆட்சி வரக்கூடாது என்பதில் அவர் மிகமிக உறுதியாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய பாஜக ஆட்சியின் மூலம் தமிழ்நாடு சந்தித்த துயரங்கள், இழப்புகள், ஆகியவற்றை நன்கு உணர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற திட்டங்களையும், பணிகளையும் செய்து வருகிறார். இதன்மூலம் 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
அகிலேஷ் யாதவ்:
காங்கிரசின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்து வருகிறது. அங்கு 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 80 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் தான், ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. அதை ஒவ்வொரு தேர்தலிலும், வரலாறு நிரூபித்து வருகிறது. எனவே, வரும் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. அதற்கு, உறுதுணையாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ள அவர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி பயணத்திலும் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில், மக்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அகிலேஷ் யாதவ், சரியான திசையில் தனது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். இதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
தேஜஸ்வி யாதவ்:
காங்கிரசின் மூன்றாவது மிகப்பெரிய நம்பிக்கையாகவும் பலமாகவும் இருப்பது ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் என்பதை யாரும் மறுக்க முடியாது. பீகார் மாநிலத்தில் மிகச் சிறந்த துணை முதலமைச்சராக செயல்பட்ட இவர், நிதிஷ்குமாரின் துரோக்கத்தால் ஆட்சியை இழக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டார். பாஜகவின் மிரட்டல்கள், நெருக்கடிகள், அமலாக்கத்துறை சோதனைகள் ஆகியவற்றைக் கண்டு அஞ்சாமல், தனது தந்தை லாலு பிரசாத் யாதவை போன்று, மதசார்பற்ற கொள்கைகளில் உறுதியாக இருந்து, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும், இந்தியா நாடு, அமைதியான நாடாக இருக்கவும் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை, தனது மாநில மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றும் தங்களது மெகா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றும் தேஜஸ்வி யாதவ் மிகப்பெரிய நம்பிக்கையுடன் திட்டவட்டமாக கூறியுள்ளார். அண்மையில் பீகார் சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரை, பீகார் மாநில மக்களை மட்டுமல்லாமல், நாட்டு மக்களையும் சிந்தித்கக வைத்து உள்ளது.
தென்மாநிலங்கள்:
நாம் மேலே குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகிய இந்த மூன்று பேருடன், தென்மாநில மக்களையும் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், அது தேர்தலில் பிரதிபலிக்கும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
அக்கட்சியின் தென்மாநில தலைவர்களில் முக்கியமானவர்களாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மற்றும் கேரள மாநில தலைவர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாகவும், வியப்பு அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதன்மூலம் தென்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என கூறலாம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்:
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய நம்பிக்கையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. மதசார்பற்ற கொள்கையில் மிகமிக உறுதியாக இருக்கும் கட்சி இ.யூ.முஸ்லிம் லீக். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாகவும், அமைதியாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்டும், சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்., பெரும்பான்மையின மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தனது பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆற்றி வருகிறது.
கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில், இஸ்லாமிய மக்கள் சந்தித்த நெருக்கடிகள், சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், ஆகியவற்றை நன்கு அறிந்து, அந்த துயரங்கள் இனியும் தொடரக் கூடாது என்று உறுதியாக இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு, இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இது, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம் என்று உறுதியாக கூறலாம்.
தற்போதைய அரசியல் சூழல் மோசமான திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் நிலையில், நாம் மேலே குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சியின் அந்த முக்கிய நம்பிக்கைகள் தான் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமானால், காங்கிரஸ் மட்டுமல்ல, மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள அனைவரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்துப் பணிகளையும் ஆற்ற முன்வர வேண்டும். அதன்மூலம் மட்டுமே மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment