நூல் மதிப்புரை
நூல் : 'மறை ஞானப்பேழை ஆன்மிக மாத இதழ்' - "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
34ஆம் தலைமுறைப்பேரர் கலீல் அவ்ன் மௌலானா நினைவு சிறப்பிதழ்"
ஆசிரியர் : கலீஃபா எஸ்.ஹுஸைன் முஹம்மது
வெளியீடு : அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, அத்தரீகத்துல் ஹக்கிய்யத்துல்
காதிரிய்யா, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
பாகிரா காம்ப்ளக்ஸ், 74, பழனி ரோடு, திண்டுக்கல் - 624 001.
தொடர்பு கைபேசி எண்: 99445 76165
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'மறை ஞானப்பேழை ஆன்மிக மாத இதழ்", தனது பிப்ரவரி 2024 மாத இதழை, கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி இயற்கை எய்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 34ஆம் தலைமுறைப் பேரர் ஆன்மீகப் போராளி மௌலானா கலீல் அவ்ன் அவர்களின் நினைவு சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 132 பக்கங்கள் கொண்ட இந்த சிறப்பிதழில், ஒவ்வொரு பக்கத்திலும் கலீல் அவ்ன் மௌலானா குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள், உலமா பெருமக்கள், கவிஞர்கள் மற்றும் பல்வேறு அறிஞர்கள், அற்புதமான எழுத்தோவிங்களை இந்த சிறப்பிதழில் வழங்கியுள்ளார்கள். "ஆன்மீகப் போராளி கலீல் அவ்ன் மௌலானா ஏற்றி வைத்திருக்கும் ஒளிப் பிரகாசம், மறைந்த சூரியன் ஒளிரும் அதிசயம், என்றும் வாழும் எங்கள் குரு நாதர்" என பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு அறிஞர் பெருமக்களும் வழங்கியுள்ள கருத்துகள், தகவல்களை வாசிக்குபோதும், மௌலானா கலீல் அவ்ன் அவர்களின் பெருமைகள், அவரின் வாழ்க்கை முறை, கல்விக்காக அவர் ஆற்றிய சேவைகள், இஸ்லாமிய சமுதாயத்திற்காக மௌலானா அவர்கள் ஆற்றிய பணிகளை சுருக்கமாகவும், எளிமையாகவும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
மௌலானா கலீல் அவ்ன் அவர்கள் குறித்து, ஒவ்வொரு கவிஞர்களும் உருவாக்கியுள்ள கவிதைகள் அருமை. தமிழக அறிஞர்கள் மட்டுமல்லாமல், இலங்கை அறிஞர்களும், இந்த சிறப்பிதழில் தங்களின் ஆக்கங்களை தந்து, மௌலானா கலீல் அவ்ன் அவர்களின் பணிகளையும், அவரது அன்பையும் நினைவுக் கூர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய படைப்புகள் என்றே கூறலாம். இந்த சிறப்பிதழில் கலீல் அவ்ன் மௌலானா தொடர்பான அரிய புகைப்படங்களும் இடம்பிடித்துள்ளள. அவற்றை காணும்போது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மறை ஞானப்பேழை மாத இதழ் வெளியிட்டுள்ள இந்த நினைவு சிறப்பிதழ், தமிழகத்தில் உள்ள அனைத்து அரபி மதரஸாக்களில் உள்ள நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதன்மூலம், மதரஸா மாணவர்கள், மௌலானா கலீல் அவ்ன் அவர்களை குறித்து நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களிலும் இந்த நூலை கொண்டு சேர்க்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிகள் செய்தால், அது நிச்சயம் பலன் அளிக்கும். அதன்மூலம் தமிழ் உலகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 34ஆம் தலைமுறைப்பேரர் கலீல் அவ்ன் மௌலானா குறித்து விரிவாக அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும்.
- ஜாவீத்
No comments:
Post a Comment