பாஜகவின் அனைத்துச் சதித் திட்டங்களையும் முறியடித்து முன்னேறும் இந்தியா கூட்டணி....!
விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய பணிகளை தற்போது மின்னல் வேகத்தில் செய்யத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளன. இதனால், நாட்டின் அரசியல் களம், கோடைக் கால வெயிலை விட சூடாக உள்ளது.
குற்றச்சாட்டுகள்:
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, ஒன்றிய பாஜக ஆட்சி மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது.
காங்கிரஸ் தனது சமூக வலைத்தளத்தில் பாஜக ஆட்சி குறித்த உண்மையான வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு புள்ளிவிவர தகவலை வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த வளர்ச்சி குறித்தும், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள வளர்ச்சி குறித்தும் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 7 புள்ளி ஆறு எட்டாக இருந்தது என்றும் பாஜக ஆட்சியில் அது, 5 புள்ளி நான்கு ஏழாக சரிந்து விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் காங்கிரஸ் ஆட்சியில் 2 புள்ளி இரண்டு பூஜ்யம் சதவீதமாக குறைந்து இருந்தது என்றும் பாஜக ஆட்சியில் அது, 6 புள்ளி ஆறு பூஜ்யம் அளவுக்கு உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் ஆட்சியில் 33 லட்சத்து 28 ஆயிரமாக இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் அது, 31 லட்சத்து 67 ஆயிரமாக குறைந்து விட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களில் சேமிப்பு 23 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் அது 19 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.
விவசாயகளின் வருமானம், காங்கிரஸ் ஆட்சியில் 4 புள்ளி ஒன்று பூஜ்யம் சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வருவாய் ஒன்று புள்ளி மூன்று பூஜ்யம் என்ற அளவுக்கு சரிந்து விட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஏற்றுமதி 17 சதவீதம் அளவுக்கு உயர்ந்தும் பாஜக ஆட்சியில் 13 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.
இப்படி, பாஜக ஆட்சியின் உண்மையான வெள்ளை அறிக்கை என்ற பெயரில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் ஏராளமான தகவல் இடம்பெற்றுள்ளன.
பாஜக சதி:
காங்கிரஸ் கட்சி, உண்மையான தகவல்களை நாட்டு மக்கள் முன் வைக்க, அதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக, தனது வழக்கமான பாணியில் சதித் திட்டங்களை அரங்கேற்ற தொடங்கியுள்ளது. வலுவாக இருந்த இந்தியா கூட்டணியை உடைத்து, அதன் வலிமையை குறைக்க பாஜக பல திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை என பல்வேறு துறைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைத்து வருகிறது.
அத்துடன், காங்கிரஸ் கட்சியில் எப்போதும் பலம் இல்லாமல், பயத்துடன் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களை விலை பேசி தங்கள் பக்கம், பாஜக இழுத்து கொள்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணியை மிரட்டி பாஜக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சதியை உடைத்த இந்தியா கூட்டணி:
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் எதிர்க்கட்சிகளை சிதைத்து விட, பாஜக பல திட்டங்களை தீட்டி செயல் படுத்தி வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் தங்களை சுதாகரித்துக் கொண்டு விழித்துக் கொண்டன என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.
இந்தியா கூட்டணி தேறாது. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. எனவே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாது என பாஜக நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால், பாஜகவின் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பாஜகவின் சதியை நன்கு உணர்ந்த இந்தியா கூட்டணி கட்சிகள், தற்போது தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, நாட்டின் நலன் கருதி பல மாநிலங்களில் தொகுதி உடன்பாட்டை செய்து வருகின்றன.
அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையே தொகுதி உடன்பாடு நிறைவு அமைந்துள்ளது.
இதேபோன்று, டெல்லி, அரியானா, குஜராத், கோவா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சி இடையே சுமூகமாக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி உடன்பாடு செய்து வருகின்றன. அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படி, பாஜகவின் சதிகளை முறியடித்து இந்தியா கூட்டணி கட்சிகள், நல்ல திசையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளன. இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது சுய கவுரவத்தை விட்டுக் கொடுத்து, நாட்டின் நலனுக்காக பணிகளை செய்து வருவதை பாஜக ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. இனி, சும்மா இருக்காது. தனது சதித் திட்டங்களை இன்னும் வேகமாக செயல்படுத்தும். உக்கிரமான முறையில் காரியங்களை ஆற்றும். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வரும் வரையிலும், வந்தபிறகும், இந்தியா கூட்டணி கட்சிகள், மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான், இந்தியா கூட்டணியின் இலட்சியம் நிறைவேறும். நாடு சரியான ஜனநாயக பாதையில் பயணிக்கும். நாடு சர்வாதிகார பாதையில் பயணிக்க நாட்டு மக்களும் அனுமதிக்கக் கூடாது.
அத்துடன், ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக உள்ள ஊடகத்துறையும் தங்களது பொறுப்பை உணர்ந்து இனி வரும் நாட்களில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். "ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள இந்திய ஊடகங்கள், தங்களது பணி மற்றும் செயல்பாடுகளில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டன" என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூரியன் ஜோசப் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளதை ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை, களைய, துடைக்க, உடைக்கும் வகையில், இனி வரும் நாட்களில் தங்களது சிறப்பான பணிகள் மூலம் ஊடகங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். மிரட்டல்களுக்கு அஞ்சாமல், செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும் இந்திய ஊடகங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
No comments:
Post a Comment