டெல்லி ஜும்மா மஸ்ஜித்தும், புதிய
இமாம் சையத் உசாமா ஷபான் புகாரியும்....!
உலகில் மிகவும் புகழ்பெற்ற மஸ்ஜித்துகளில் ஒன்றாக, இந்தியாவில் உள்ள டெல்லி ஜும்மா மசூதி என அழைக்கப்படும் ஜமா மஸ்ஜித் இருந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட பள்ளிவாசல்களில் இந்த மஸ்ஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு. அற்புதமான அழகை நிர்மாணிக்க, ஐந்து ஆயிரம் கட்டிடத் தொழிலாள்ர்களை கொண்டு இந்த மஸ்ஜித் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மஸ்ஜித்-இ-ஜஹன்னுமா என்று அழைக்கப்படும் இந்த மஸ்ஜிதை, உலகில் ஒற்றுமையை வளர்க்க மாமன்னர் ஷாஜகான் கட்டினார் என்பதும் ஒரு வரலாற்று தகவலாகும்.
மசூதியின் வரலாறு:
பழைய டெல்லி என்று இன்று அழைக்கப்படும் இந்த இடம், முன்பு முகலாயப் பேரரசின் தலைநகராக ஷாஜஹானாபாத் என்ற பெயரில் இருந்தது. இந்த அழகிய நகரத்தில் தான் பேரரசர் ஷாஜஹான், ஜமா மசூதியை கட்டினார். இதன் கட்டுமானப் பணி 1644ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1656ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை பேரராசின் பிரதமராக இருந்த சாதுல்லா கான் மேற்பார்வையிட்டார்.
ஜமா மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டபோது, பேரரசர் ஷாஜஹான் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். அப்போது, யார் அடிக்கல் நாட்டி, முதல் கல்லை எடுத்து வைக்கலாம் என்ற பிரச்சினை வந்தது. அப்போது ஒவ்வொருவரும் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் இருந்த ஒருவர் நல்ல கருத்து ஒன்றை கூறினார். அதாவது, இரவு நேர தொழுகையான தாஹஜுத் தொழுகையை யார் தொடர்ந்து விடாமல் தொழுது வருகிறாரோ, அவர், முதல் கல்லை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டுவது சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். இதைக் கேட்டும், அங்கு கூடியிருந்த யாரும் கல்லை எடுத்து வைக்க முன்வரவில்லை.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பேரரசர் ஷாஜஹான், இந்த வார்த்தைகளை கூறினார். "எனக்கும் ஏக இறைவனுக்கும் மட்டுமே தொடர்பு உள்ள ஒரு உண்மையை இப்போது நான் உங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்ற நோக்கத்தில் நான் இதுவரை இருந்து வந்தேன். ஆனால், ஏக இறைவனின் கருணையை பாருங்கள். என் மீது இரக்கம் கொண்டு, நான் விடாமல் தொடர்ந்து இரவு நேர தாஹஜுத் தொழுகை தொழுது வருவதை, நாட்டு மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில, இன்று அந்த உண்மையை உங்கள் முன் சொல்ல என்னை பணிந்துள்ளான். ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்" என கூறினார். அப்போது கூடியிருந்த அனைவரும் வியப்பு அடைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, பேரரசர் ஷாஜஹான், முதல் கல்லை எடுத்துகொடுத்து, மசூதி கட்டும் பணியை தொடங்கி வைத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
படிக்கட்டுகள்:
இந்தோ-இஸ்லாமிய பாணியில் மேற்கு நோக்கி புனித நகரமான மக்காவை நோக்கி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதி கட்ட சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை பளிங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மசூதியின் உயரம் 261 அடியாகும். அகலம் 90 அடியாகும். பிரமாண்ட இந்த மஸ்ஜித்தில் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொழுகையை நடத்த முடியும் என்பது இதன் சிறப்பாக உள்ளது. மூன்று பெரிய வளைவு வாயில்கள், பளிங்குக் குவிமாடங்கள், இரண்டு உயர்ந்த மினராக்கள், ஒவ்வொன்றும் 40 மீட்டர் நீளம் கொண்டவையாகும், அத்துடன் நான்கு சிறிய மினராக்கள் உள்ளன. தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில் 35 படிக்கட்டுக்கள் உள்ளன. முந்தைய காலங்களில் இந்த கிழக்குப் பகுதி அரசர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதேபோன்று, தெற்கு பகுதியில் 33 படிக்கட்டுகளும், வடக்கு பகுதியில் 39 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு, இஸ்லாமிய வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த படிக்கட்டுகளின் எண்ணிக்கைகள் இருந்து வருகின்றன.
இமாம்களின் பட்டியல்:
மசூதியின் இமாமின் முன்னோர்கள் மத்திய ஆசியாவில் உள்ள புகாராவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. முதல் இமாம் பேரரசர் ஷாஜஹானால் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இமாமாக இருந்து வருகிறார்கள். 17 ஆம் நூற்றாண்டின் ஜமா மஸ்ஜித்தின் அனைத்து ஷாஹி இமாம்களின் பட்டியல் கொஞ்சம் பார்ப்போம். 1656ஆம் ஆண்டில் முதல் இமாமாக சையது அப்துல் கஃபூர் ஷா புகாரி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சையத் அப்துல் ஷகூர் ஷா புகாரி, சையத் அப்துல் ரஹீம் ஷா புகாரி, சையத் அப்துல் கஃபூர் ஷா புகாரி தானி, சையத் அப்துல் ரஹ்மான் ஷா புகாரி, சையத் அப்துல் கரீம் ஷா புகாரி, சையத் மிர் ஜீவன் ஷா புகாரி, சையத் மீர் அகமது அலி ஷா புகாரி, சையது முகமது ஷா புகாரி, சையது அகமது புகாரி, சையத் ஹமீது புகாரி, சையத் அப்துல்லா புகாரி இருந்தனர். 2000ஆம் ஆண்டு முதல், 13வது இமாமாக சையத் அகமது புகாரி இருந்து வருகிறார்.
புதிய இமாம் நியமனம்:
மசூதியின் தற்போதைய இமாம், சையத் அகமது புகாரி, தனது கல்லூரிக்குச் செல்லும் மகன் ஷபான் புகாரியை நைப் இமாமாக அதாவது துணை இமாமாக நியமனம் செய்துள்ளார். ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஷாப்-இ-பாரத்' தினத்தன்று அறிவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அடுத்த இமாமான சையத் உசாமா ஷபான் புகாரி, தலையில் தலைப்பாகை கட்டப்பட்டு, அவர் தலைமையில் தொழுகை நடத்தப்பட்டு, உலக அமைதிக்காக துஆ கேட்கப்பட்டது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய மசூதி:
உலகின் மிக அழகிய மசூதியாக கருதப்படும் இந்த ஜமா மஸ்ஜித், ஒவ்வொரும் அவசியம் பார்க்க வேண்டிய மசூதி மட்டுமல்ல, அங்கு அழகிய முறையில் தொழுகை நடத்த வேண்டிய இடமுமாகும். டெல்லிக்கு செல்லும் ‘முஸ்லிம்கள், இந்த மசூதியை காண நிச்சயம் செல்வார்கள் அத்துடன், தொழுகையையும் நடத்துவார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும், ஜமா மசூதியை காண ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள்.
டெல்லியில் நான் வசித்தபோது, இந்த ஜமா மஸ்ஜித்திற்கு சென்று தொழுகை செய்து மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன்.. அதேபோன்று, ரமலான் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. உலகில் ஒற்றுமையை வலியுறுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ஜமா மசூதியை, சீர்குலைக்க பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த சதிகளை ஏக இறைவன் உடைத்துகொண்டே வருகிறான்.
டெல்லிக்கு
செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அவசியம், பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட
மஸ்ஜித்தை காண கண்டிப்பாக செல்லுங்கள். அங்கு தொழுகையை நடத்துங்கள். அழகிய முறையில்
ஏக இறைவனிடம் துஆ கேளுங்கள். இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் இஸ்லாமிய மன்னர்கள்
ஆற்றிய பணிகளை நினைவுக் கூறுங்கள். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்டு
வரும் செயல்களை தடுத்து நிறுத்த, உலகில் ஒற்றுமையை வலியுறுத்தி கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித்
குறித்து அனைத்து மத தோழர்களிடம் எடுத்துக் கூறுங்கள். அதன்மூலம் முஸ்லிம்கள் குறித்தும்
முஸ்லிம் மன்னர்கள் குறித்து செய்யப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான வரலாற்று
தகவல்களையும் தடுத்து நிறுத்தங்கள்.
-
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
No comments:
Post a Comment