Saturday, February 17, 2024

தூய்மையாக மாறுமா காங்கிரஸ்.....!

கோழைகளின் விலகலால் தூய்மையாக மாறுமா காங்கிரஸ்.....!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க, தேசிய அரசியல் களம் மிகவும் சூடுபிடித்து, ராக்கெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் அரசியல் களத்தின் காட்சிகள், திரைப்படங்களில் வரும் காட்சிகளை போன்று மாறிக் கொண்டே இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக, நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளை குழித்தோண்டி புதைத்து வருகிறது. ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருந்துவரும் எதிர்க்கட்சிகளை நாட்டில் இல்லாமல் செய்ய தொடர் முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறது. 

குறிப்பாக, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக காரியங்களை நிறைவேற்றி வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தனது உரைகளில் குறிப்பிட்டு வருகிறார். அத்துடன், தனது செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில்களையும் விளக்கங்களையும் அளிக்காமல், காங்கிரஸ் கட்சி மீதே அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான், இந்தியா மிகவும் பின்தங்கி போனதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் பேசும், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், நேருவையும் விமர்சனம் செய்யாமல் இருப்பதே இல்லை.  பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல், காங்கிரஸ் கட்சியையும், நேருவையும் அடிக்கடி தனது பேச்சில் குறிப்பிட்டு பிரதமர் விளக்கம் அளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு மிகப்பெரிய அளவுக்கு வன்மம் இருப்பது உறுதியாக தெரியவருகிறது. 

எதிர்க்கட்சிகளை சிதைக்க திட்டம்:

நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் தழைத்து இருக்க வேண்டுமானால், சிறப்பான எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும். அப்போது தான், ஆளும் தரப்பு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியும். ஆளும் கட்சியை சிறப்பான ஆட்சியை செய்ய வைக்க முடியும். ஆனால், சர்வாதிகார திசையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீர்மானம் செய்து இருப்பதால், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற இலக்கை நோக்கி காரியங்களை நடைபெற்று வருகின்றன. 

அதன்படி, காங்கிரஸ் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு, காரியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு வலை வீசப்பட்டு, அவர்களை பாஜகவில் இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பாஜகவில் இணைய மறுக்கும் தலைவர்களை அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் மூலம் மிரட்டி, அவர்களை பணிய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, பிற எதிர்க்கட்சிகளையும் பாஜக ஆட்சியாளர்கள் மிரட்டி வருகிறார்கள். மாநில கட்சிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள கட்சிகளை இரண்டாக உடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைக்கப்பட்டு விட்டது. இரண்டாக மட்டுமல்ல, மூன்று நான்கு பிரிவுகளாக அதிமுக உருவாகிவிட்டது. இதேபோன்று, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் இரண்டாக உடைத்து விட்டார்கள். இதேபோன்ற நிலை, பல்வேறு மாநிலங்களிலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 

காங்கிரசில் சுனாமி:

காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற ஒற்றை இலக்கை வைத்துக் கொண்டு பாஜக செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் கொண்டு வர திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த திட்டத்தின்படி, பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து உயர் பதவிகளை அனுபவித்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக வீசிய வலையில் சிக்கி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் வேளையில், குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து வெளியே வந்தது, அவர், கட்சிக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருகிறார்.

இதேபோன்று, ஜோதிராதித்யா சிந்தியா, முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திவிட்டு, பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வரலாற்றில் கரும்புள்ளியாக இடம்பெற்றுவிட்டார். 

அண்மையில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான், பாஜக வீசிய அரசியல் வலையில் சிக்கி, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவில் இணைந்த அடுத்த நாளே அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இப்படி, காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய அளவுக்கு சுனாமி அலை வீசிக் கொண்டு இருக்கிறது. கட்சியின் முன்னணி தலைவர்களை இழக்க பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், அந்த தொடர் முயற்சி அலையில் சிக்கி பல தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். விலகிய சில நாட்களிலேயே அவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். 

கமல்நாத் சர்ச்சை:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை ஆசை வார்த்தைகளைக் கூறி, தங்கள் பக்கம் இழுக்கும் பாஜகவின் சதித் திட்டங்களில், தற்போது மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வீழ்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தனது மகனுடன் பாஜகவில் இணைய இருப்பதாக செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தகவல்களை கமல்நாத் மறுக்கவில்லை. அதேநேரத்தில், கமல்நாத் நிச்சயம் பாஜகவில் இணைய மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜீத்து பட்வாரி ஆகியோர் உறுதியாக கூறியுள்ளனர். எனினும் கமல்நாத் பாஜகவில் இணைய இருப்பது உறுதி என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காங்கிரசில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்:

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக உற்று நோக்கும்போது ஒன்று மட்டும் உறுதியாக தெரியவருகிறது. காங்கிரஸ் கட்சியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நிறைய பேர் இருந்து வருகிறர்கள் என்பது தான் அது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு, இந்த ஆர்.எஸ்.எஸ்., சிந்தனையாளர்கள் தான் காரணம் என அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இத்தகைய பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை வைத்துகொண்டு, காங்கிரஸ் கட்சியை மிகவும் பலவீனமாக கட்சியாக மாற்ற பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வலிமையை சிதைத்து வருகிறது. பாஜகவின் திட்டங்களை நிறைவேற்றும் வகையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி, தேசிய பார்வையில், மிகவும் பலவீனமான கட்சியாக மாறி வருகிறது. 

கடந்த 1885ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், நீண்ட நெடிய பாரம்பரியம், வரலாறு உள்ள கட்சியாகும். நாட்டின் விடுதலைக்காக அக்கட்சி செய்த பணிகளையும் தியாகங்களையும் யாரும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. கடந்த 1947ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைந்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும், மிகப்பெரிய அளவுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் ஆற்றிய பணிகள் ஏராளம். மறைந்த முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஆகியோர் நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம். நாட்டிற்கு அரிய சேவைகளை ஆற்றி, நாட்டின் மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், அக்கட்சியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுடன் உள்ளவர்களை வைத்துக் கொண்டு, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சதித் திட்டங்கள் மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி வருகிறது. 

கோழைகளுக்கு இடமில்லை:

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை கூறு போட்டு விற்றதைப் போன்று, காங்கிரஸ் கட்சியையும், கூறு போட திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அக்கட்சியில் உள்ள கோழைகளை தங்கள் பக்கம் இழுத்து, அரசியல் நடத்த பாஜக செய்யும் முயற்சிகளுக்கு பயம் காரணமாக பலர் பாஜகவின் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம், ஜார்க்கண்ட் முதலமைச்சர் கைது உள்ளிட்ட செயல்கள் மூலம், காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை பாஜக உருவாக்கி வருகிறது. இந்த பயம் மற்றும் அச்சத்தின் காரணமாக பலர் பாஜகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். இப்படி, காங்கிரஸ் கட்சியில் கோழைகள் சிலர் விலகி வரும் நிலையில், அதுகுறித்து கருத்து கூறியுள்ள , காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தற்போது உள்ள சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் கோழைகளுக்கு இடமில்லை என்றும், கடைசி வரை போராட, உறுதியான உள்ளம் கொண்டவர்கள் இருந்தால் போதும் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார். மேலும் கட்சியை விட்டு போக விரும்புவர்கள் போகலாம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியில் புதிது புதிதாக இளைஞர் படை வர வேண்டும் என்றும், நல்ல சிந்தனை உள்ள இளைஞர்கள் மூலம் காங்கிரஸ் நல்ல வலிமையான கட்சியாக மாறும் என்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார். இளைஞர்களின் வருகையே கட்சிக்கும் நாட்டிற்கும் பலத்தை சேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தோல்வி பயம்:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் ஒற்றுமையை சிதைக்க பாஜக செய்துவரும் சதி திட்டங்கள் மூலம் ஒன்று மட்டும் உறுதியாக தெரியவருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கே தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம், அச்சம் பாஜக தலைவர்களிடம் ஏற்பட்டு இருப்பது தான் அது. நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவிற்கும் எதிரான அலை வீசி வருகிறது. அந்த அலையை எதிர்கொள்ள பாஜகவிற்கு துணிவு இல்லை. அதன் காரணமாக தான், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை சிதைத்து, ராமர் கோவில் விவகாரம் குறித்து மட்டுமே அக்கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை மட்டுமே வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. எனவே தான், வளர்ச்சிப் பணிகள் குறித்து எதையும் கூறாமல்,  ராமர் கோவில் மற்றும் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கங்களை முன்வைத்து வருகிறது. தோல்வி பயம் காரணமாக இப்படி பல திட்டங்களை பாஜக அரங்கேற்றி வருகிறது. 

தூய்மையாக மாறுமா காங்கிரஸ்:

பாஜகவின் மிரட்டல் காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து கோழைகள் விலகி வரும் நிலையில், அக்கட்சி தூய்மையாக மாறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் பல கோழைகள், பாஜகவின் பக்கம் சாய்ந்து விடுவார்கள். எனவே, இனி வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவுக்கு நெருக்கடிகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மிகப்பெரிய பலம், இளம் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இரண்டு பேர் மட்டுமே என்றே கூறலாம். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார். கார்கே போன்ற நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களின் பணிகள் மூலம் மட்டுமே, காங்கிரஸ் கட்சி இனி தன்னுடைய எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி முழுமையாக தூய்மையாக மாறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எனினும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக மாறினால், அரசியல் களம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: