Wednesday, February 28, 2024

இறுதி வரை வலிமை....!

 

இந்தியா கூட்டணி கட்சிகள்  இறுதி வரை வலிமையுடன் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்....! 


இந்திய திருநாடு விரைவில் மற்றொரு ஜனநாயக திருவிழாவை காண மிகவும் ஆவலுடன் காத்து இருந்து வருகிறது. 18வது நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சி குறித்த தங்களது தீர்ப்பையும், முடிவையும் அவர்கள் வழங்க உள்ளார்கள். நாட்டில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறதா, இல்லையா என்பது குறித்து மக்களின் தீர்ப்பு இருக்க போகிறது. ஆனால், இந்த தீர்ப்பை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே இறங்கியுள்ளன.

குழப்பும் கருத்துக் கணிப்புகள்:

பாஜக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக மிகப்பெரிய அளவுக்கு எந்த சாதனைகளையும் செய்யவில்லை என்பது தான் உண்மையாகும். எனவே, வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து அவர்கள், மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக வெற்று முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். மிகப்பெரிய அளவுக்கு சாதனைகளை நிகழ்த்திவிட்டது போன்ற ஒரு போலியான பிம்பத்தை நாட்டில் ஏற்படுத்தி வருகிறார்கள். அதற்கு இந்திய ஊடகங்கள் துணையாக இருந்து வருகின்றன.

எனவே தான், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பிடிக்கும் என்ற ஒரு போலியான கருத்துக் கணிப்புகளை இப்போதே, பாஜக ஆதரவு ஊடகங்கள், மன்னிக்கவும், பாஜகவால் மிரட்டப்பட்ட ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழகம் உட்பட தென்மாநிலங்களிலும் கூட, பாஜக அலை வீசுவது போன்ற ஒரு பிம்பம் ஊடகங்கள் மூலம் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அதன்மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்க மிகப்பெரிய அளவுக்கு சதிகள் நடைபெற்று வருகின்றன.

வலிமையை குறைக்க திட்டம்:


இந்தியா கூட்டணி கட்சிகளில் மத்தியில் அது உருவாக்கப்பட்டபோது இருந்த வலிமை தற்போது இல்லை என்பது நிதர்சமான உண்மையாகும். அதற்கு முக்கிய காரணம், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் சதித் திட்டங்கள் என்றே கூறலாம். மூன்றாவது முறையாக எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு சதித் திட்டங்கள் பாஜகவால் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் விலை பேசப்பட்டார்கள். இதன்மூலம் இமாசலப் பிரதேசத்தில் ஆளும் கட்சியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர், தோல்வி அடைந்தார். இதேபோன்று, உத்தரப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது. இத்தகைய அரசியல் விளையாட்டுகளை பாஜக ஆரம்பம் முதல் தொடர்ந்து செய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் இன்னும் அதிகளவு செய்யும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் குறித்தும், அந்த கூட்டணி குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அந்த கூட்டணியை கண்டு அவரும், பாஜகவும் எந்தளவுக்கு பயம் அடைந்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். எனவே, தான் இந்தியா கூட்டணி கட்சிகளின் வலிமையை குறைக்க, சிதைக்க, பல்வேறு சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் நெருங்க, நெருங்க, வாக்குப்பதிவு நடக்கும் நாளில் கூட, இதுபோன்ற சதித் திட்டங்கள் மேலும் மேலும் அரங்கேற்றப்படும்.

வலிமையுடன் இந்தியா கூட்டணி:


தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. இருந்தும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே இலக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். முதுமை காலத்திலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் செய்துவரும் பணிகள், நாட்டு மக்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.

இந்தியா கூட்டணி மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குறித்து பாஜக பரப்பி வரும் பொய்யான தகவல்களை, இவர்கள் தங்களது பணிகள் மற்றும் பேச்சுகள் மூலம் உடைத்து வருகிறார்கள். “ஊடகங்களில் தான், பாஜக இருக்கிறது. மக்கள் மத்தியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு மதிப்பு இல்லை” என லாலு பிரசாத் யாதவ் கூறி வருவது உண்மையிலும் உண்மையாகும். எனவே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள், வேறுபாடுகளை மறந்துவிட்டால், மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் நாட்டில் ஏற்படும். இதை உணர்ந்துகொண்ட இந்தியா கூட்டணி கட்சிகள், தற்போது நல்ல திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

இறுதிவரை உறுதி அவசியம்:


தற்போது, ஓரளவுக்கு வலிமையாக இருக்கும் இந்தியா கூட்டணி, தேர்தல் முடியும் வரையும் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் வரையிலும் வந்த பிறகும், மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லாமல் போனால், இந்தியா கூட்டணி கட்சிகளை உடைத்து, எம்.பி.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்யும். கடந்த 10 ஆண்டு காலமாக இப்படி தான் பல மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக தனது, ஆட்சியை அமைத்துக் கொண்டது.

இதே பாணியில், நாடாளுமன்றத் தேர்தலிலும், தேர்தல் முடிந்த பிறகும், பாஜக செயல்படும். தனது சதித் திட்டங்கள் மிகவும் வேகமாக செயல்படுத்தும். காரணம், ஆட்சி பசி அவர்களுக்கு இன்னும் அடங்கவே இல்லை. எனவே, எந்த எல்லைக்கும் சென்று, மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிகளை அரங்கேற்றும். எனவே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் விலை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இறுதிவரை எதிர்க்கட்சிகளுக்கு உறுதி அவசியம். இந்த தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திர போர் என்பதை இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது மனதில் உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஏற்ப, அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பாஜகவின் மிரட்டல்களுக்கு அச்சாமல், இறுதிவரை உறுதியுடன் இருக்க வேண்டும். ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிவிடக் கூடாது. மாறாக அப்படி செய்தால், நாட்டு மக்கள் அவர்களை என்றும் மறக்க மாட்டார்கள். காரி துப்புவார்கள் என்பதை மறுந்துவிடக் கூடாது.

முஸ்லிம்களின் பொறுப்புகள்:

இந்த தேர்தலில் நாட்டில் வாழும் 25 கோடி முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பொறுப்பு உண்டு. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, இந்தியா முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நிலையில் தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். கடந்த 1989ஆம் ஆண்டு மும்பையில் இஸ்லாமியர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர்கள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“மும்பை டிக்ளேரேஷன்” என்ற அந்த தீர்மானத்தில், நாட்டு மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவை இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் ஆதரிக்காது என்றும், பாஜகவை ஆதரிக்கும் எந்தவொரு கட்சிகளையும் ஆதரிக்காது என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை அளவுக்கு வாக்குகள் பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைத்து வாக்குகளை பிரித்து வெற்றி பெற்றது. நாட்டில் உள்ள 70 சதவீத மக்கள் பாஜகவிற்கு எதிராக உள்ளார்கள். அதன் கொள்கைகளுக்கு எதிராக இருந்து வருகிறார்கள். எனவே தான், வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், முஸ்லிம் வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்கிறது.

தற்போது உள்ள கடினமாக சூழ்நிலையில், முஸ்லிம்கள் மிகவும் கவனத்துடன் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒற்றுமை என்ற கயிற்றை பற்றிப் பிடித்துக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கும் எந்த கட்சிகளுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கக் கூடாது. முஸ்லிம்களை குழப்பம் போலி முஸ்லிம் அமைப்புகளை, இந்திய முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான், வலிமையான சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறும். இந்தியா கூட்டணி எப்படி வலிமையுடனும் சக்தியுடன் இருக்க வேண்டுமோ, அதுபோன்று, முஸ்லிம்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும் வலிமையுடன் செயல்பட வேண்டும். கடைசியாக, பாஜக ஆட்சி, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு ஆட்சி என்பதை பெரும்பான்மை மக்களும் தற்போது உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களும், சமுதாய ஆர்வலர்களும், நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரும் நல்ல முடிவை எடுத்து, தங்களது ஜனநாயக கடமையை நிச்சயம் வாக்குகள் மூலம் நிறைவேற்ற வேண்டும். அதன்முலம் மட்டுமே, நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சி அமையும். நாட்டில் அமைதி நிலவும். ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே கொள்கை போன்ற முழக்கங்கள் காணாமல் போகும். இதற்கு ஒரே வழி, நாட்டு மக்களிடம் தான் உள்ளது. அவர்களின் வாக்குகள் மூலம் தான். நாட்டில் சிறப்பான மாற்றம் ஏற்படும். இதனை அனைவரும் மறந்துவிடக் கூடாது.

-     எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: