Friday, October 30, 2026

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளால்....!

 

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளால்

பாலஸ்தீனத்திற்கு அமைதி கிடைக்குமா?

- ஜாவீத் - 

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ஈரான் மீது அடிக்கடி அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில், உலகமே உற்றுநோக்கிய இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக் கூட்டணியும் பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மொத்தம் உள்ள 121 இடங்களில் நெதன்யாகுவின் லிகுத் கட்சி 27 இடங்களையும், அதான் கூட்டணி மொத்தமாக 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. எதிரணிக்கு தலைமை தாங்கும் காடி ஐசன்கோட் கட்சி தனித்து 21 இடங்களையும், அதன் கூட்டணி மொத்தமாக 48 இடங்களிலும் வென்றுள்ளன. அரபுக் கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக் கூட்டணியும் பெறாததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

சிங்மேக்கரான அரபுக் கட்சிகள் :

இந்த சிக்கலான சூழ்நிலையில், வெளிப்படையாக சொல்லப் போனால், தேர்தல் முடிவுகளின் படி அரபுக் கட்சிகள் தான் சிங்மேக்கராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கூட அரபுக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த யூத சித்தாந்த ரீதியிலான முடிவை அவர் அறிவித்தது, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும், பெரும்பான்மை யூத மக்களின் ஆதரவை பெரும்நோக்கில் நெதன்யாகு அறிவித்த இந்த முடிவின் மூலம் எதிரணியினருக்கும், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான சிக்கலையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். நெதன்யாகு மீண்டும் ஆட்சியமைக்க அவருக்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால், எதிரணியில் இருக்கும் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவது மட்டும்தான். அவ்வாறு ஆட்சி அமைக்க ஆதரவு கிடைக்குமானால், ஏற்கனவே இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்த நெதன்யாகு மீண்டும் 7வது முறையாக பிரதமராக பதவியேற்பார்.

அரபுக் கட்சிகள் மீது வீண் புகார் :

ஆனால், காடிஐசன்கோட்டிற்கு இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அரபுக் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பது. அவ்வாறு அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் காடி ஐசன்கோட் ஆட்சி அமைத்தால், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் நிலைபாடு மற்றும் ஆதிக்கத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், நெதன்யாகு தரப்பில் உள்ள கூட்டணி கட்சிகளை தன்வசப்படுத்தி பிரதமர் பதவியை ஏற்பதாகும். இந்நிலையில், அரபுக் கட்சிகள் வெளிநாடுகளின் ஆதரவுடன் தேர்தலில் முறைகேடு செய்து 19 இடங்களில் வென்றாக நெதன்யாகு குற்றம்சாட்டி, அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் இதே நிலை நீடித்து யாரும் ஆட்சி அமைக்காவிட்டால், மீண்டும் மறு தேர்தல்தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தில் அமைதி திரும்புமா ?

இஸ்ரேல் தேர்தல் முடிவுகளால் பாலஸ்தீனத்தில் அமைதி திரும்புமா என்ற கேள்வி பொதுவாக உலகம் முழுவதும் உள்ள மனித ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் வரலாற்றை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் பாலஸ்தீன மக்கள் மீது எந்தளவுக்கு வெறுப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். முழு பாலஸ்தீனத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடனே பெரும்பாலான இஸ்ரேலிய மக்கள் இருந்து வருகிறார்கள்.

காசா உட்பட அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேலுடன் இணைத்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன்மூலம், இஸ்ரேல் தேர்தல் முடிவுகளால் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. மேலும் பாலஸ்தீன மக்களின் அமைதி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஈரான் தலைவரின் கருத்து :

இதுஒருபுறம் இருக்க, ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா காமனே, அண்மையில் கூறியுள்ள ஒரு கருத்து உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஈரானின் வலிமைக்கும், இஸ்லாமிய-ஈரானிய நாகரிகத்தை நோக்கிய பயணத்திற்கும் பங்களிக்கும் வகையில், தங்களை அறிவு, நம்பிக்கை மற்றும் ஆன்மீகத் தூய்மையால் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 28, 2026 அன்று, பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் கடிதங்களுக்குப் பதிலளித்த தலைவர், அவர்களின் அன்பான செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் கடிதங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதியான தீர்மானத்தையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரத்தை நாமும் அறிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை :

உங்கள் அன்பான கடிதங்களைப் படித்தேன். உற்சாகம் மிக்க இளம் மாணவர்களாகிய உங்கள் பேரன்பிற்கு நான் நன்றியுடையவன். உங்கள் அன்பினால் என்னை நெகிழச் செய்த உங்கள் அனைவரையும், எனது பிரார்த்தனைகளில் குறிப்பாக நினைவுகூருகிறேன். என்னிடம் மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டும் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கடிதங்களைப் போலவே, உங்கள் கடிதங்களும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதியான தீர்மானத்தையும், பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கின்றன. இந்த உறுதியான உடன்படிக்கையானது, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய இஸ்லாமியக் கொள்கையிலும், மகத்தான கொமைனி மற்றும் தியாகி காமனே (இறைவன் அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவானாக!) ஆகியோரின் பாரம்பரியத்திலும் வேரூன்றிய ஒரு விலைமதிப்பற்ற பொறுப்பாகும். இது நம் அனைவரையும் ஒரு பொதுவான இலக்கிற்காக ஒன்றிணைக்கும் பிணைப்பாகும்.

எனவே, அறிவு மற்றும் நம்பிக்கை, ஆன்மீகத் தூய்மை, இறைவனுடனான தொடர்பு, மற்றும் குர்ஆன் மற்றும் அஹ்லுல் பைத்தின் (அலைஹிமுஸ்ஸலாம்) போதனைகள் குறித்த ஆழமான புரிதல் ஆகிய ஆயுதங்களால் உங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதல் முயற்சியுடனும், புதிய கண்டுபிடிப்புகளுடனும் நமது அன்பிற்குரிய ஈரானின் வலிமைக்கும் மேன்மைக்கும் பங்களிப்பு செய்யுங்கள். இதன் மூலம், நமது அன்பிற்குரிய தலைவர் [இமாம் மஹ்தி] அவர்களின் பிரார்த்தனைகளுடன், இந்த உடன்படிக்கையில் இணைந்துள்ள சக்திகளின் பயணம், முன்னேற்றத்தின் சிகரங்களை நோக்கியும், இஸ்லாமிய-ஈரானிய நாகரிகத்தை நோக்கியும் இன்னும் திறம்படவும் வேகமாகவும் முன்னேறட்டும். இறைவனின் நாட்டம் இதுவேயாகும். இவ்வாறு அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அரசியல் நோக்கர்களின் கருத்து :

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் மற்றும் ஈரானின் உச்சத் தலைவரின் அறிவுரை இரண்டையும் முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல, உலகமும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்பது சமூக சிந்தனையாளர்களின் கருத்ததாக இருக்கிறது. மேற்காசியாவில், குறிப்பாக பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வாய்ப்புகள் நெருங்கி வந்தாலும், யூத வெறிபிடித்த மக்கள், பாலஸ்தீனத்தில் அமைதி திரும்பக் கூடாது, காசா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இதுபோன்று சூழலில் ஈரான், மற்றும் வளைகுடா நாடுகளின் ஒற்றுமை மிகமிக அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொண்டு, அரசியல் நகர்வுகளில் ஈடுபட வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.  

================

No comments: