துபாயில் நடைபெற்ற அரபி வாசிப்பு சவால் போட்டி:
கேரள மாணவர் முகமது ஷஹன்ஷா
மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை
8 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிப்பு
துபாய், அக்.31- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 10வது அரபி வாசிப்பு சவால் போட்டியில், கேரள மாணவர் முகமது ஷஹன்ஷா உலக அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அரபு மொழி தாய்மொழியாக இல்லாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சர்வதேசப் பிரிவில் முகமது ஷஹன்ஷா இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
மலப்புரம் மதரஸா மாணவர் :
மலப்புரத்தில் உள்ள மதீன் அகாடமியின் மாணவரான முகமது ஷஹன்ஷா, துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆதரவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். போட்டியின் வெற்றியாளர்கள் வியாழக்கிழமை துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அறிவிக்கப்பட்டனர். ஷஹன்ஷாவுக்கு 8 லட்சம் ரூபாயும் ரொக்கப் பரிசும் ஒரு கோப்பையும் வழங்கப்பட்டது. 60 நாடுகளில் உள்ள ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 426 பள்ளிகளிலிருந்து 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
குவியும் பாராட்டுகள் :
தேசிய அளவிலான தகுதிச் சுற்றுகளில் சிறந்து விளங்கியதன் மூலம் ஷஹான்ஷா சர்வதேச அரங்கிற்குத் தகுதி பெற்றார். மதீன் அகாடமியைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களும் சர்வதேசப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். அரபுப் புத்தகங்களைப் படித்து, அவற்றின் கருப்பொருள்களையும் உள்ளடக்கத்தையும் பகுப்பாய்வு செய்து, அவற்றை திறம்பட முன்வைக்கும் தனது திறமையால் ஷஹான்ஷா சர்வதேச நடுவர் குழுவைக் கவர்ந்தார். மதீன் அகாடமியில் உள்ள அரபு மொழி கற்பித்தல் முறைகள் தனது வாசிப்பு மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்த உதவியதாக முகமது ஷஹான்ஷா கூறி பெருமை அடைந்துள்ளார். சாதனை புரிந்து முகமது ஷஹான்ஷாவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமுதாய தலைவர்களும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
====================

No comments:
Post a Comment