துபாயில் நடைபெற்ற அரபி வாசிப்பு சவால் போட்டி
எகிப்தின் மயார் ஒத்மான் முதலிடம் பிடித்து 5 லட்சம் திர்ஹம் பரிசு வென்று சாதனை
துபாய், அக்.30- துபாய் உலக வர்த்தக மையத்தில் அக்டோபர் 29, வியாழக்கிழமை அன்று அரபி வாசிப்பு சவால் 2026 போட்டியின் 10வது பதிப்பில் எகிப்தைச் சேர்ந்த மயார் முகமது ரகாப் ஒத்மான் முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தப் போட்டியின் 10-வது பதிப்பு நிறைவு பெற்றது.
60 நாடுகளில் இருந்து பங்கேற்பு :
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கசல் தைம் இரண்டாம் இடத்தையும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரயான் அல் ஜக்ரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில், இந்த ஆண்டு 60 நாடுகளைச் சேர்ந்த 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இளம் வெற்றியாளர்களைப் பொறுத்தவரை, இந்த வெற்றி என்பது வெறும் பரிசைப் பெறுவது மட்டுமல்ல. தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட மாணவர்கள், வாசிப்பு எவ்வாறு தங்கள் ஆளுமையை மாற்றியமைத்தது, தன்னம்பிக்கையை வலுப்படுத்தியது மற்றும் தங்கள் லட்சியங்களை நோக்கிச் செல்ல ஊக்கமளித்தது என்பதை விவரித்தனர்.
கனவுகளை அடைவதற்கான பாதை :
இரண்டாம் இடத்தைப் பிடித்த கசல் தைம், வாசிப்புதான் தனது வெற்றிக்கு அடித்தளம் என்றும், எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்றும் குறிப்பிட்டார். இந்தத் தளம்தான் உலகளாவிய அளவில் அரபி வாசிப்பு சவால் போட்டியில் தான் இரண்டாம் இடத்தைப் பெற உதவியது என்று அவர் கூறினார். வாசிப்பு என்பது நாடுகளுக்கு ஒரு உயிர்நாடி மட்டுமல்ல, அது உங்கள் கைகளில் கிடைக்கும் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போன்றது. அதன் மூலம் நீங்கள் உங்கள் பாதையை ஒளிரச் செய்துகொள்ளலாம். இளைஞர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்திய கசல், தனிப்பட்ட லட்சியங்களை அடைவதிலும், சமூகத்திற்குப் பங்களிப்பதிலும் வாசிப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார். அரபு உலகம் முழுவதிலும் உள்ள இளம் தலைமுறையினரின் மீது இந்த முன்னெடுப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திட்டத்தைத் தொடங்கியதற்காக ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வாழ்நாளின் மிகச்சிறந்த விருது :
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரயான் அல் ஜக்ரிக்கு, மூன்றாம் இடத்தைப் பிடித்தது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.உண்மையைச் சொல்லப்போனால், இது என் வாழ்நாளில் நான் பெற்ற மிகச்சிறந்த விருது; என் வாழ்நாள் முழுவதும் நான் சுமந்து செல்லப்போகும் மிக மதிப்புமிக்க நினைவும் இதுதான்,” என்று அவர் கூறினார். 40 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்த, அரபு உலகின் மிகப்பெரிய கலாச்சார முன்னெடுப்பை உருவாக்கியதற்காக ரயான், ஷேக் முகமது அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சவூதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும், தனது வாசிப்புப் பயணத்தில் தனக்குக் கிடைத்த ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரபி வாசிப்புச் சவால் நிகழ்வின் 10-வது பதிப்பில், 60 நாடுகளைச் சேர்ந்த 4 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து 428 மாணவர்கள் பங்கேற்றனர். இது முந்தைய பதிப்போடு ஒப்பிடுகையில் 24 சதவீத வளர்ச்சியாகும். இந்த முன்னெடுப்பில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் 426 பள்ளிகளும், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 507 மேற்பார்வையாளர்களும் பங்கேற்றனர். இதில் திறன்மிகு மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த 74 ஆயிரத்து 62 மாணவர்களும் அடங்குவர். 2015-ம் ஆண்டு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட அரபி வாசிப்புச் சவால், மாணவர்களை வாசிக்க ஊக்குவிப்பதையும், அரபு மொழியின் மீதான அவர்களின் பிடியை வலுப்படுத்துவதையும், இளம் தலைமுறையினரிடையே அறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment