சென்னை - 384.....!
அன்றும்–இன்றும் சில நினைவலைகள்.....!
பரந்து பட்ட நிலப்பரப்பில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படும் சென்னை மாநகருக்கு நாளை 384–வது பிறந்த நாள். 1639–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி சென்னை நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட்ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள்.
இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஒரு ஆண்டுக்கு பிறகு செயின்ட்ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்பநாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது
அப்போதைய காலக் கட்டத்தில் எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1646–ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சென்னையின் அப்போதைய மக்கள் தொகை வெறும் 19 ஆயிரம் தான்.நினைவுகள்
கிழக்கிந்திய கம்பெனிகாரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையை சுற்றிச் சுற்றி வந்தனர். இதனால் கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. கம்பெனியின் வியாபாரம் வேகமாக பெருகப் பெருக அதற்கேற்ப ஆட்களின் போக்குவரத்தும் அதிகரித்தது.
கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என 2 நகரங்கள் உருவாயின. அதன் பிறகு சிறிய ஆங்கிலேய குடியிருப்பாக இருந்த சென்னை ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்தது.
1688–ம் ஆண்டு சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது சென்னை மாகாணம் என்ற அந்தஸ்தை பெற்றது.
1746–ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சு கைப்பற்றியது. பின்னர் 1749–ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன.
அதன் பிறகு சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின.
1895–ம் ஆண்டு மே 7–ந்தேதி சென்னை நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. ஆனால் அந்த சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது.
அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக்கொட்டகை இதுதான்.
ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன. ரிக்ஷாக்காரர்கள் முதல் மகாராஜாக்கள் வரை சென்னை மாநகரின் தெருக்களில் வலம் வந்தனர்.
இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947–ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் மாறியது.
1969–ம் ஆண்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலை நகரின் பெயரான மெட்ராஸ் 1996–ம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்.....!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment