Tuesday, August 15, 2023

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை....!

இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த மாபெரும் தியாகங்களை போன்று வேறு எந்த சமுதாயமும் செய்யவில்லை...!

சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் நடந்த 77வது சுதந்திர தின விழாவில் 

தேசிய கொடியை ஏற்றி வைத்து இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை....!


சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில், நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் பாடகர் ஷேக் மதார் கிராத் ஓத, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வரவேற்புரை ஆற்றினார். 

விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்  சிறப்புரை ஆற்றியபோது பேசியதாவது: இந்திய விடுதலைக்காக முஸ்லிம் சமுதாயம் செய்த மாபெரும் தியாகங்கள் மறைக்க இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களையும் சுதந்திரத்தையும் பிரிக்க முடியாது தேசப்பற்று, நாட்டு பற்று ஆகியவற்றை முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சுதந்திர தின வரலாற்றில் 77 ஆண்டுகளாக இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்கு அளித்து வருகிறது. நாட்டில் ஏராளமான கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், 77 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தால் முறையான அங்கீகாரம் பெற்ற கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆகும்.  அப்படிப்பட்ட ஒரு வரலாறு இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் நாம் தேசிய கொடியை ஏற்றி வருகிறோம். 

அதிகமாக பாடுபட்ட முஸ்லிம் சமுதாயம்:


நாட்டின் விடுதலைக்காக அதிகமாக பாடுபட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயமாகும். உயிர், பொருள், இழப்புகள் என ஏராளமான தியாகங்களை நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்து இருக்கிறார்கள். எனவே சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எப்போதும் ஒரு சிறப்பு இருந்து வருகிறது. இதுபோன்ற தியாகங்களை வேறு எந்த சமுதாயமும் நாட்டிற்கு செய்யவில்லை. 

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெருமை முஸ்லிம்களுக்கு உண்டு. சுரையா பதுருதீன் தயப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணி தான் தேசிய கொடியை வடிவமைத்தார். நாடு பல மொழி, கலாச்சாரம் பண்பாடு, ஆகியவற்றை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை கருத்தில் கொண்டு, காவி, வெள்ளை, பச்சை என மூன்று நிறங்களில் அவர் அழகாக இந்த கொடியை வடிவமைத்தார். 

ஆனால், தற்போது முவர்ண கொடியை காவி நிறமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்களின் தேசப்பற்றை முற்றிலும் மறைக்க முயற்சிகளை நடைபெற்று வருகின்றன. ஆனால், முஸ்லிம்களின் தியாங்களின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. 

பன்முகத்தன்மையை மாற்ற முடியாது:

நாட்டில் 4 ஆயிரத்து 292 பிரிவுகளை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், திருமண உறவுகள் ஆகியவை ஒவ்வொன்றும் வேறுவேறு விதமாக இருந்து வருகின்றன. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என சிலர் தற்போது கூறிக் கொண்டு இருக்கிறார்கள். சூரியன் வேண்டும். சந்திரன் வேண்டாம். பூமி வேண்டும். கடல் வேண்டாம் என என கற்பனை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். மேற்கு ஓடும் கங்கையை கிழக்கே திருப்பி விடலாம் என யோசிக்கும் அவர்களின் திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது. 

முஸ்லிம்களின் கடமை:

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இந்துஸ்தான் என்ற பெயரை நாட்டிற்கு சூட்டியவர்கள் முஸ்லிம்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்திய நாடு ஒரு சாதி, ஒரு சமுதாயம், ஒரு மதத்திற்கு மட்டுமே சொந்தமான நாடு இல்லை என்றும், அனைவருக்கும் சொந்தமான நாடு என்றும், நாட்டில் உள்ள அனைவரும் உண்மையான சகோதரர்கள் என்றும் மிக அழகாக பேசினார். இந்த பேச்சின் அடிப்படையில் நாடு பயணிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு, பாசிச சிந்தனையுடன் புதிய சமுதாயம் உருவாக்க நினைத்தால், மிகப்பெரிய பாதிப்புகள் நாட்டிற்கு ஏற்படும். 

வாய் திறக்காத பிரதமர்:


மணிப்பூர் வன்முறை, கலவரம் குறித்து எப்படி பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருகிறரோ, அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள், தாக்குதல்கள் குறித்தும் எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஒரு இந்து பாசிச அமைப்பு பகீரங்கமாக பேசி வருகிறது. அரியானாவில் முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கூச்சல் போட்டு வருகின்றன. ஆனால், இதனை பிரதமர் மோடி இதுவரை கண்டிக்கவில்லை. நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களை எப்படி இவர்களால், வெளியேற்ற முடியும். மணிப்பூரில் வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கே உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதை மறந்துவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக சிலர் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவர்களுக்கு புரியவில்லை. 

தற்போது மொழி வழி மாநிலங்கள் இருந்து வருகின்றன. ஆனால், கடந்த 1923 ஆம் ஆண்டு இந்து முஸ்லிம் என்ற அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம்களுக்கு என தனி மாநிலங்கள் இருக்கக் கூடாது. தனி நாடு பிரித்து கொடுத்து விட வேண்டும் என இந்து மகா சபை தீர்மானம் போட்டது. நாட்டின் பிரிவினைக்கு இந்துத்துவ அமைப்புகளே காரணம் என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். 

திராவிட மாடல்:

 சுதந்திர தின விழாவின்போது, நாட்டில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற உரிமையை பெற்று தந்தவர் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான். கடந்த 1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து இந்த உரிமையை அவர் பெற்றார். அதன்பிறகு தான் அனைத்து மாநில முதலமைச்சர்களும் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள். 

இதுபோன்ற ஒரு திராவிட மாடலை நாம் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அழகான திராட மாடலை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினால், நாட்டில் மத நல்லிணக்கம் தழைக்கும். 

ஜெய் இந்தியா முழக்கம்:

"சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் அமாரா" என்ற  தேசபக்தி பாடலை எழுதியவர் மகாகவி முஹம்மது இக்பால் சாஹிப். இந்த பாடலை அடிப்படையாக கொண்டு பாருக்குள் நல்ல நாடு என்ற கவிதையை பாரதியார் இயற்றினார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த பாட்டின் பெருமையை நாம் உணர வேண்டும். நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது ஜெய் ஹிந்த் என்ற முழக்கம் எழுப்பட்டது. ஆனால், தற்போது, இந்த முழக்கம், எதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் கூறப்பட்டு வருகிறது. பாசிச அமைப்புகள் அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி விட்டன. 

எனவே, இனி நாம் ஜெய் ஹிந்த் என சொல்வதற்கு பதிலாக ஜெய் இந்தியா என்ற முழக்கத்தை சொல்ல வேண்டும். நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் தழைக்க வேண்டும். சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. திராவிட மாடல் எப்படி தமிழகத்தில் சிறப்புடன் தனது பணியை ஆற்றி வருகிறது என்பதை அறிந்து அதை நாடு முழுவதும் கொண்டு செல்ல இந்தியா கூட்டணி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

சர்வாதிகார பாதை என்பது தெளிவு இல்லாத பாதையாகும். ஜனநாயக பாதை, மக்களின் உரிமைகளை பெற்றுதரும் பாதையாகும். இதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாங்களையும், பணிகளையும் வரும் தலைமுறையினருக்கு நாம் எடுத்துக் கூற வேண்டும். நாட்டின் விடுதலைக்காக எப்படி முஸ்லிம்கள் தியாகங்களை செய்தார்களோ, அதேபோன்ற தியாகங்களை நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை அனைத்து சமுதாய மக்களும் புரிந்துகொண்டு, முஸ்லிம்களை இணைத்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, நாடு அமைதியான, வளர்ச்சியான நாடாக மாறும்.  இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

ரிப்போர்ட்டிங்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: