தனிமையிலே இனிமை காண முடியுமா ?
பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் பாடலின் வரிகள்தான் இவை.
இந்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடைக்கின்றன.
நவீன யுகத்தில் தற்போது நிறைய பேர் தனிமை விரும்பிகளாக இருந்து வருகின்றனர்.
தனிமையில் சுகம் கிடைப்பதாக தாங்களாகவே நினைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் உண்மையில் தனிமை மனிதனுக்கு மிகப் பெரிய கொடுமையை கொடுக்கும் அரக்கன் என்பதை அன்றாட வாழ்க்கையில் பலர் அனுபவித்து வரும் நிதர்சன உண்மையாகும்.
தனிமையிலே நிச்சயம் எப்போதுமே இனிமை காண முடியாது.
தனிமையாக இருப்பவர்களின் நெஞ்சங்களில் சாத்தானின் எண்ணங்கள்தான் மிக எளிதாக குடிபுகுந்து விடும்.
ஒருசில நேரங்களை தவிர்த்து, பிற நேரங்களில் தனிமையாக யாருமே இருக்க கூடாது.
தனிமை, மனிதனை மிருகமாக்கிவிடும் ஆற்றல் கொண்டது.
ஏன் சில சமயங்களில் மனிதன் பைத்தியமாக மாறவும் வாய்ப்பு உண்டு.
இயற்கையாகவே கூடி வாழும் வகையில்தான் மனித இனத்தை இறைவன் படைத்துள்ளான்.
அதனால்தான், கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்ற பழமொழிளை நமது முன்னோர்கள் நமக்கு மிக அழகாக சொல்லித்தந்து சென்றார்கள்.
ஆனால், இன்றை நவநாகரிக மனிதன் இதனை சிறிதும் உணர்ந்துக் கொண்டதாக தெரியவேயில்லை.
கௌரவம், சுயலாபம் ஆகியவற்றை மட்டுமே, கருத்தில் கொண்டு வாழும் இன்றைய மனித உலகம், தனிமையை விரும்பி, தனது வாழ்கையை சீரழித்துக் கொண்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல பெருநகரங்களில், தனிமையாக வாழ்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும், குறிப்பாக, வயதான ஆண், பெண் ஆகியோர் வீடுகளில் தனிமையாக விடப்படுகின்றனர்.
வசதி வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடந்தாலும், வயதான காலத்தில் பெற்றோர்களை, உறவினர்களை பராமரிக்க, கவனிக்க தயக்கம் காட்டும் இன்றைய இளைஞர்கள், வயதான தாய் தந்தையரை தனிமையில் தவிர்க்க விட்டு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.
இதனால், ஏற்படும் ஆபத்துகள் சொல்லி மாளாதவை.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா பெங்களுரூ உள்ளிட்ட பல பெருநகரங்களில் தனிமையாக வாழும் முதியோர்களை குறி வைத்தே ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
இதனால்தான், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும், வீட்டில் தனியாக இருந்த முதிய பெண் கொலை. 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை என்ற செய்திகள் , தலைப்புச் செய்திகளாக நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.
இந்த செய்திகளை படிக்கும்போதும், பார்க்கும்போதும் கண்கள் குளமாகின்றன.
கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிந்து கிடக்க, ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தனிமையில் வாழ்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
அதுவும் பெற்ற பிள்ளைகள் பலர் இருந்தும், கவனிக்க ஆள் இல்லாமல், அன்பு செலுத்த மனித நேயம் இல்லாமல், வயதான பெற்றோர் தனிமையாக வாழ்வது என்பது உண்மையிலேயே கொடுமையிலும் கொடுமை.
இதனால்தான், பெருநகரங்களில் அடிக்கடி தனிமையில் வாழும் முதியோர்கள், பணத்திற்காகவும் நகைக்காகவும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
தனிமையில் வாழும் பல முதியோர்கள் மனநிலை பாதிப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.
இது நூற்றுக்கும் நூறு உண்மையான தகவல்கள்.
முதியோர்கள் மட்டுமல்ல, தனிமையை விரும்பி தனிக்குடித்தனம் செல்லும், பெண்களும் பாதிப்புக்கு ஆளாக நேரிடுவது தற்போது அதிகரித்து வருகிறது.
வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து, சில சமூக விரோதிகள் நடமாடுவது அதிகரித்துள்ளது.
இதனால், பணம், நகை கொள்ளை போவதுடன், சில நேரங்களில் இளம் பெண்களின் மானத்திற்கும் இழக்கு நேரிடும் ஆபத்து உருவாகி விடுகிறது.
தனிமை, ஒருசில நேரங்களில் மனிதனுக்கு நன்மையை செய்யும் என்பது மறுக்க முடியாது.
இறைவனை வணங்க, பிரார்த்தனை செய்ய தனிமை மிக அவசியம்.
நல்ல கவிதையை வாசிக்க, எழுத தனிமை அவசியம்.
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அலசி ஆராய தனிமை நிச்சயம் தேவை.
ஆனால், எப்போதும் தனிமையாக வாழ விரும்புவது மனித இனத்திற்கு நல்லது அல்ல.
அப்படி ஒரு வாழ்க்கை அவசியமும் இல்லை.
நீங்கள் தனிமை விரும்பியா?
இன்றிலிருந்து உங்களுடைய தனிமை எண்ணத்தை, பழக்கத்தை மாற்றி விடுங்கள்.
அழகான குழந்தைகளை கொஞ்சி மகிழுங்கள்.
நல்ல கவிதையை நண்பர்களுடன் சேர்ந்து ரசியுங்கள்.
தமாஷான ஜோக்கை கேட்டு பலமாக சிரியுங்கள்.
வீட்டு அறையில் தனிமையில் அடங்கி கிடக்காதீர்கள்.
வீதியின் வெளிச்சத்திற்கு வாருங்கள்.
உலகத்தில் நடக்கும் விதவிதமான அற்புதங்களை கண்டு வியப்பு அடையுங்கள்.
நகரத்தில் நடக்கும் முன்னேற்றப்பணிகளை ஒருமுறை வலம் வந்து பாருங்கள்.
அழகான பெண் அல்லது ஆண் அணிந்து செல்லும் நல்ல உடையை கண்டு, அதைப் போன்று அணிய ஆசைப்படுங்கள்.
புதிதாக வந்துள்ள விலை உயர்ந்த காரை பாருங்கள். அதனை கர்வமாக ஓட்டிச் செல்லும் பணக்காரரின் திமிரை கண்டு ரசியுங்கள்.
பறவைகளை பார்த்து மகிழுங்கள்.
இப்படி செய்தால், தனிமையைவிட, கூடி வாழ்வது எவ்வளவு சுகமானது என்பது உங்களுக்கு உண்மையில் தெரியவரும்,
உலகத்தில் நடக்கும் அற்புதங்கள் கண்முன் தெரியும்.
மனம் மகிழ்ச்சி அடையும்.
மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
புதிய எண்ணங்கள் உதிக்கும்.
வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தெரியவரும்.
வயதான பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு, தனியாக செல்லும் ஆசை குறைந்து விடும்.
பெற்றோருடன், குழந்தைகளுடன், கொஞ்சி மகிழ ஆசை பிறக்கும்.
அதன்மூலம், பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு ஒரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தனிமையை குறிவைத்து இயங்கும் கொடிய, கொடூர கும்பலின் அட்டகாசம் குறைந்துவிடும்.
சமூகத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்கள் குறைந்துவிடும்.
தனிமையை விட்டு, சமூகத்துடன் கூடி வாழ்வதால், வாழ்வின் ஆயுள் அதிகரிக்கும்.
நல்ல உடல்நலம் கிடைக்கும்.
வீட்டில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி பிறந்து, என்றென்றும் நிரந்தரமாக குடிபுகுந்துவிடும்.
இதனால் வீடு சொர்க்கமாக மாறிவிடும்.
இதுயெல்லாம், தனிமையை விட்டுவிடுவதால் கிடைக்கும் ஆயிரம் கோடி நன்மைகள்.
இந்த நன்மைகளுக்கு உங்களை நீங்கள் தயார் படுத்தக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இளம் பெண்கள் என்றுமே தனிமையாக இருக்கக்கூடாது.
வீட்டில் இளம் பெண்களை தனிமையில் விட்டுவிட்டு, பெற்றோர்கள், வெளியே செல்லவே கூடாது.
பல கூடா நட்புகளுக்கு வீட்டில் இளம் பெண்கள் தனிமையாக இருப்பதே முக்கிய காரணம் என்பது அண்மை கால நிகழ்வுகள் நமக்கு பாடங்களாகச் சொல்லித் தருகின்றன.
இளம் பெண்கள் சீரழிந்து போவதற்கு தனிமை முக்கிய காரணம் என்று புள்ளி விவரங்களின் மூலம் தகவல்கள் கிடைக்கின்றன.
தனிமை மனிதனுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை.
இப்படிப்பட்ட நன்மை எதுவும் செய்யாத தனிமையை நாம் ஏன் விரும்ப வேண்டும் ?
தனித்து வாழ ஏன் ஆசைப்பட வேண்டும்?
வாருங்கள். இன்று முதல் கூடி வாழ்வோம். கோடி நன்மைகளை வாரி கொள்வோம்.
என்ன நான் சொல்வது உண்மைதானே!
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment