ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேர இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள்
அதிக ஆர்வம் செலுத்த வேண்டும்....!
பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி வலியுறுத்தல்.....!!
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் தன்னை முழு ஈடுபாடுடன் இணைத்துக் கொண்டு சமுதாய சேவை ஆற்றிவரும், பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகேயுள்ள மசூதி வளாகம்) இயங்கி வரும் எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள், சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது தொடர்பான பயிற்சியை எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமி அளித்து வருகிறது. இந்த அகாடமியின் பணிகள் குறித்து மணிச்சுடர் நாளிதழக்கு சேமுமு முகமதலி அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்....
முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம்:
கல்விக்கு மிக முக்கியத்துவம் அளித்த இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த நம் இளைஞர்கள், ஆரம்பத்தில் கல்வியில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, முஸ்லிம்கள் மத்தியில் கல்வி குறித்த ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி பெறுவதில், இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமல்லாமல், மாணவிகளும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். உயர்கல்வி பெற்று நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கான சரியான வழிக்காட்டுதல்கள் இஸ்லாமிய இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கிடைப்பது இல்லை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என எண்ணம் நமக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து இருந்து வந்தது. அதன் விளைவாக உருவானதுதான் இந்த எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமி (S-IAS SUCCESS ACADEMY).
எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமி:
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தொடங்கப்பட்ட எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமி, படிப்படியாக முன்னேறி, முஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள அனைத்து சமுதாய இளைஞர்களுக்கும் போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள நல்ல பயிற்சிகளை அளித்து வருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள தகுதியுள்ள மாணவ-மாணவியர் ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகளில் சேர வேண்டும். அதற்கான சிறப்பான போட்டி தேர்வு பயிற்சியை அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகாடமியில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், மற்றும் ஒன்றிய அரசில் உள்ள பிற பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு இளைஞர்களை சிறப்பான முறையில் தயார்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் அனைத்து தேர்வுகளில் நம் இளைஞர்கள் பங்கேற்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என வந்துவிட்டதால், அதற்கான பயிற்சியையும் நாங்கள் அளித்து வருகிறோம்.
கட்டணம் மிகமிக குறைவு:
இஸ்லாமிய மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்த அகாடமில், மிக குறைந்த அளவுக்கு மட்டுமே, பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற பயிற்சி மையங்களில் 100 சதவீதம் அளவுக்கு கட்டணம் வசூலித்தால், நாங்கள் 40 சதவீதம் மட்டுமே பயிற்சி கட்டணம் வசூலிக்கிறோம்.
தகுதி வாய்ந்த ஏழை, எளிய இளைஞர்கள், பள்ளி, கல்லூரி படிப்புகளில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு ஓர் நேர்முக தேர்வு நடத்துகிறோம். அதன்மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பயிற்சி கட்டணம் எதுவும் வசூலிக்காமல் இலவசமாகவே பயிற்சியை அளித்து வருகிறோம்.
இலாப நோக்கம் எதுவும் இல்லாமல், பயிற்சி மையத்திற்கான அடிப்படை செலவினங்களுக்கு தேவைப்படும் நிதி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் இந்த அகாடமி நடத்தப்பட்டு வருவதால், மிகப்பெரிய அளவுக்கு நாங்கள் பயிற்சி கட்டணங்கள் வசூலிப்பதில்லை.
தேர்வு பயிற்சி வகுப்புகள்:
ஒவ்வொரு போட்டி தேர்வின் அடிப்படையில், அதற்கான பயிற்சி காலம் ஓர் ஆண்டு, 6 மாதம், 3 மாதம் என நிர்ணயம் செய்யப்பட்டு இளைஞர்களுக்கு திறமையான கல்வியாளர்கள், போட்டி தேர்வுகள் குறித்து நல்ல அனுபவம் பெற்றவர்கள் ஆகியோரை கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முழு நேர பணியில் 3 பேரும், பகுதி நேர பயிற்சி அளிப்பவர்கள் 37 பேரும் இங்கு உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வார பயிற்சி வகுப்புகளும் உண்டு. நீட் தேர்வுக்காக 40 நாட்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.
போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வை எப்படி அணுகுவது என்பது குறித்தும் இங்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேரும் வாய்ப்புகள் கிடைக்கிறது.
வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள்:
எஸ்-ஐஏஎஸ் சக்சஸ் அகாடமியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற்ற இளைஞர்களில், 38 பேர் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். அத்துடன் அரசு துறை சாராத பிற தனியார் துறைகளில் 60 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
தற்போது 120 மாணவ மாணவியர் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியை பெற்று வருகிறார்கள். இதில் 80 சதவீதம் பேர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வெளியூர்களில் இருந்து வந்த தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கு, சாப்பாடுடன் கூடிய விடுதிக்கான கட்டணம் மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. அதற்காக நாங்கள் சில விடுதிகளை அணுகி அதை செய்து வருகிறோம்.
தலைமைத்துவத்திற்கான பயிற்சி:
எங்கள் அகாடமியில் அறம் சார்ந்த வாழ்க்கைகான நெறிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன. அத்துடன் தலைமை பண்பிற்கான சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுவது எப்படி, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற எத்தகைய அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களும் இங்கு பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கு சொல்லித்தரப்படுகிறது. இதன்மூலம், போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மனிதநேயத்துடன் எப்படி செயல்பட்டு, நல்ல குடிமகன்களாக நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை ஆற்ற வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் மையமாகவும் இந்த அகாடமி சிறப்பான சேவையை ஆற்றி வருகிறது.
விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்:
நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், விளிம்பு நிலையில் உள்ள இளைஞர்களும், ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேர அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். முஸ்லிம் சமுதாயத்திற்கு தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மூன்று புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை சரியான முறையில் பெற நம் இளைஞர்கள் அக்கறை செலுத்த வேண்டும். அது தொடர்பான தகவல்களை பெற்று, போட்டி தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் இளைஞர்கள் இறங்க வேண்டும். நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமானால், நிர்வாக உரிமையையும் அதிகாரமும் பெற்றாக வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு நம் சமுதாயம் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த அகாடமியை நடத்தி வந்தாலும், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளில் சேர பயிற்சிக்கு வரும் இஸ்லாமிய இளைஞர்கள், அதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. தங்களை உயர்ந்த ஓர் இலட்சியத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இல்லை என்றே கூறலாம். இதனால், நல்ல திறமையான இளைஞர்கள் கூட, தொடர் முயற்சிகள், கடின உழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த மறுப்பதால், உயர் பதவி பணியிடங்களில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இந்த அகாடமிக்கு சமுதாய புரவலர்களின் ஆதரவும் அவசியம் தேவை. அப்படி ஓர் ஆதரவு கிடைத்தால், இன்னும் சிறப்பான சேவையை நாங்கள் ஆற்ற முடியும்.
ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேர முஸ்லிம் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்தினால், அதன்மூலம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறி பேராசிரியர் சேமுமு முகமதலி புன்னகைத்தார். பேராசிரியர் சேமுமு முகமதலியின் நல்ல எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேற மணிச்சுடர் சார்பாக வாழ்த்தி விடைப்பெற்றோம்.
- சந்திப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment