ராஜஸ்தானில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முன்மாதியாக திகழும் துங்கர்பூர் மாவட்டம்....!
- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -
ஜார்கண்ட், பீகார், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்கள் உட்பட நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள குழந்தைகள் கடத்தப்படுவது ஒரு ஆபத்தான பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்படி கடத்தப்படும் குழந்தைகளை வைத்துகொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஒரு கும்பல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், இளம் சிறார்களின் வாழ்க்கை சூனியமாகி விடுகிறது.
யுனிசெஃப் முயற்சி:
குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற யுனிசெஃப் அமைப்பு, மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்களுடன் இணைந்து அயராது உழைத்து வருகிறது. இந்த பணியில் நிறைய வெற்றிகளை யுனிசெஃப் அமைப்பு கண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வெற்றி கதை ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
குழந்தை கடத்தல் - துங்கர்பூர் மாவட்டம்:
துங்கர்பூர், ராஜஸ்தானின் தெற்கே, குஜராத் எல்லையில் அமைந்துள்ளது. துங்கர்பூரில் சுமார் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர். மாவட்டத்தின் மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஏழ்மையை பயன்படுத்தி துங்கர்பூரில் இருந்து குழந்தை கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
குஜராத், துங்கர்பூர் பகுதிக்கு இடையே உள்ள எல்லைக்கு அருகாமையில் இருப்பதால், குழந்தை கடத்தல் எப்போதும் அங்கு கவலைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. குஜராத்தி வயல்களில் வேலை செய்ய ஒப்பந்தக்காரர்கள் அல்லது குழந்தை கடத்தல்காரர்களின் உதவியுடன் குழந்தைகள் குஜராத்திற்கு கடத்தி செல்லப்படுகிறார்கள்.
குழந்தைகள் மீட்பு திட்டம்:
இந்நிலையில், யுனிசெஃப், மற்றும் மாநில அரசு, சமூக காவல் துறையின் உதவியுடன் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. குழந்தை மீட்புத் திட்டத்தில் யுனிசெஃப் அமைப்பு, ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டர்களை ஈடுபடுத்தியது.
குழந்தைகள் கடத்தப்பட்டு, பல்வேறு பணிகளில் ஈடுபட வைப்பதை தடுக்க யுனிசெப்பின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஆலோசகர் திருமதி. சிந்து பினுஜீத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்கு அவர் தனது நிறைய நேரத்தை செலவிட்டார். சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட்டால், குழந்தை கடத்தலைத் திறம்பட தடுத்து நிறுத்த முடியும் என சிந்து பினுஜீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், கடத்தப்பட்ட குழந்தைகள் குறுகிய காலத்திற்குள் வீடு திரும்பி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வறுமை காரணமாக பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப தயாராக உள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தை கடத்தல் அதிகரிக்கிறது என்றும் சிந்து பினுஜீத் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது என்று தெரிவித்துள்ள அவர், குழந்தை கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் உள்ளூர் காவல்துறை நல்ல பங்கை ஆற்றி வருகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் மற்றும் போலீஸ் படை இரண்டும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னார்வத் தொண்டர்கள் குடும்பங்களைத் உதவுவதற்கும், பாதுகாப்பதற்கும் சேவை ஆற்றி வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விழிப்புணர்வு பயிலரங்குகள்:
குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெஃப் மற்றும் காவல்துறை மூலம் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. துங்கர்பூர் மாவட்டத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் மாநில அரசு மற்றும் யுனிசெஃப் தனி கவனம் செலுத்தி வருகிறது. சுகாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டு மற்றும் நீடித்த முயற்சிகள் காரணமாக, இப்பகுதியில் பெண் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரசவங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குழந்தை இறப்பும் குறைந்துள்ளது.
யுனிசெஃப் அமைப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு, மாதாந்திர அடிப்படையில் மற்றும் தேவைக்கேற்ப, மருத்துவமனை ஊழியர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. கூடுதலாக தொழில்நுட்ப உதவியை யுனிசெஃப் வழங்கியதன் மூலம் இந்த மாவட்டம் மாநில அளவில் இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் குழந்தை கடத்தலுக்கு புகழ்பெற்ற இருந்த துங்கர்பூர் மாவட்டம் தற்போது பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு வளர்ச்சி பெற்ற மாவட்டமாக நடைபோடுகிறது. இதற்கு யுனிசெஃப் மேற்கொண்ட தொடர் முயற்சிகளே முக்கிய காரணம் என உறுதிப்பட கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment