கல்வியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் முஸ்லிம்கள்....!
குஜராத் பள்ளியில் முஸ்லிம் மாணவிக்கு நிகழ்ந்த அவமானம்....!!
முஸ்லிம் சமுதாயம் எப்போதும் அறிவார்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறியின் கொள்கை. அதன்படி, இஸ்லாத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் கல்வியை கட்டாயம் பெற வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
இந்த அறிவுறுத்தலை பெரும்பாலான முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதில்லை என்றே கூறலாம். ஆனால் தற்போது இஸ்லாமிய மாணவ-மாணவியர் மத்தியில் கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வறுமையிலும் கூட இஸ்லாமிய இளைஞர்கள் கல்வி பயின்று சாதனை நிகழ்த்தி வருகிறார்கள்.
பாசிச அமைப்புகள் அதிர்ச்சி:
இஸ்லாமிய மாணவ மாணவியர் கல்வியில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டு இருப்பதை கண்டு இந்துத்துவ அமைப்புகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேறி சாதனை நிகழ்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாசிச அமைப்புகள் திட்டம் போட்டு காரியங்களை நிறைவேற்றி வருகின்றன. அதற்கு நாட்டில் நடக்கும் பல சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன.
குஜராத்தில் நடந்து சம்பவம்:
குஜராத்தின் கெராலு தாலுகாவில் லுனாவா கிராமத்தில் உள்ள ஸ்ரீ கே டி படேல் ஸ்ம்ருதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினத்தன்று பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவி அர்னாஸ் பானு நிகழ்ச்சியில் வேண்டுமென்றே கெளரவிக்கப்படவில்லை.
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அந்த மாணவியிடம்
பள்ளி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டனர். இரண்டாம் இடத்தை பிடித்த மாணவி மேடைக்கு அழைத்து கவுரவிக்கப்பட்டார்.
இது மாணவி அர்னாஸ் பானுவை மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடையச் செய்துள்ளது.
தந்தை வேதனை:
இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள அர்னாஸ் பானுவின் தந்தை சனேவர் கான், தங்கள் மகள் அர்னாஸ் பானு எஸ்எஸ்சி தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்று பெரிய சாதனை செய்த போதிலும் பள்ளி ஆசிரியர்கள் அவளை நிகழ்ச்சியில் பாராட்டவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளி ஆசிரியர்களுடன் தாம் புகார் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மகள் அர்னாஸ் பானு, கஹோடா பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளதால், லுனாவா பள்ளியின் மாணவர்களை மட்டுமே தாங்கள் கெளரவித்ததாக ஆசிரியர்கள் தன்னிடம் கூறினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தபோது உங்கள் பள்ளியில்தான் படித்தாள். எனவே நிகழ்ச்சியில் அவள் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தாம் ஆசிரியர்களிடம் வாதம் செய்ததாகவும் கான் கூறியுள்ளார்.
மதநல்லிணக்க கிராமம்:
லுனாவா கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதில் 3 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் என்று கூறும் கிராமத் தலைவர் ரஹிசாபென் பதான், இந்த கிராமத்தில் செளத்ரி, பஞ்சால், தாகூர், ரபாரி மற்றும் பிற சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தான் ஒரு விவசாயி என்றும் தாங்கள் இந்த கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருவதாகவும் கூறியுள்ள கான், தங்கள் முன்னோர் 1954 இல் சிப்பாய்களாக இருந்தனர் என்றும் தாங்கள் கிராமத்தில் எந்த பாகுபாட்டையும் சந்தித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். முதல்முறையாக தங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று வேதனை தெரிவிக்கும் அவர், தன் மகள் 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்றாலும், இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அர்னாஸ் பானு சாதனை:
அர்னாஸ் பானு, லுனாவாவில் உள்ள ஸ்ரீ கே டி படேல் ஸ்ம்ருதி வித்யாலயாவில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார் தேர்வில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களைப் பாராட்ட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தால் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
2023 இல் நடந்த எஸ்.எஸ்.சி. தேர்வுகளில் அர்னாஸ் முதலிடம் பிடித்ததால் மிகவும் உற்சாகமாக பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றைய தினம் பள்ளிக்கூடம் தன்னை கெளரவிக்கும் என்ற எண்ணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மகளின் சாதனையால் தாங்களும் மகிழ்ச்சியடைந்தோம் என்று சனேவர் கான் குறிப்பிட்டார்.
ஆனால் தன் மகள் அழுது கொண்டே வீடு திரும்பியதாகவும். தாங்கள் அவளிடம் காரணத்தைக் கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தனது பெயரை அறிவிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக இரண்டாவது இடத்தைப் பிடித்த மாணவிக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது என்றும் அவள் சொன்னாள் என்றும் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தை பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் கேட்டபோது அவர்களால் திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை. பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கான் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு:
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில்,தங்களுக்கு இன்னும் உத்தரவு கிடைக்கவில்லை என்றும் ஜனவரி 26 ஆம் தேதி மாணவி பானுவை கெளரவிப்போம் என்றும் பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கூறியுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அர்னாஸ் ஏன் கௌரவிக்கப்படவில்லை என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. தனக்கு இதற்கான பதில் தேவை என்றும் கான் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் மாணவ-மாணவியர் கவனத்திற்கு:
குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் மூலம் ஓர் உண்மை தெரிய வருகிறது. அது என்னவென்றால், இனி முஸ்லிம்கள் சாதனை செய்தாலும் கவுரவிக்கப்பட மாட்டார்கள். அதற்காக மனம் உடைந்து போகாமல் படிப்பில், கல்வியில் முஸ்லிம் இளைஞர்கள் முழு கவனத்தை செலுத்த வேண்டும். கல்வி தான் மிகப்பெரிய சொத்து என்பதை உணர்ந்து, தொடர்ந்து முன்னேற வேண்டும். இதை ஒருபோதும் மறக்காமல் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment