Saturday, August 26, 2023

முஸ்லிம் பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த சோகம்..!!

தீவிரம் அடையும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்.....! 

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த சோகம்..!!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், நாட்டில் வளர்ச்சிப் பணிகளை விட, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு அதிகமாகி வருகிறது. இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களே எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகின்றன. மாட்டிறைச்சிக்காக பசுக்களை கடத்தியதாக கூறிய முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், ரயிலில் பயணம் செய்யும் முஸ்லிம் பயணிகள் மீது துப்பாக்கி முனையில் மிரட்டி கொலை செய்தல்,  நன்கு படித்து முதலிடம் பிடித்தாலும், முஸ்லிம் மாணவ மாணவிகளை புறக்கணித்தல் என தொடர் சம்பவங்களை கூறிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பு ஆசிரியை மூலம் தாக்கி அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தீமையின் அவதாரமான கொடூர ஆசிரியை:

உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ள நேஹா பப்ளிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர்  திரிப்தா தியாகி. இவர் எப்போதும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு மனப்பான்மையுடன் இருப்பவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவன் அல்தமாஷை,  பிற  மாணவர்கள் அறையுமாறு இந்த ஆசிரியை ஊக்குவித்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தயது. 

சக மாணவர்கள் தன்னை அறைந்ததால் அல்தாமஷ் மன உளைச்சலில் அழுதபோது, அதை பார்த்த ரசித்த அந்த ஆசிரியை, நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் ஏன் அவனை கடுமையாக அடிக்கவில்லை என கூறி அடிக்கும் மற்ற மாணவர்களை,  முஸ்லிம் மாணவன் மீது கடுமையாக தாக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். 

தந்தை வேதனை:

தனது மகன் பள்ளி ஆசிரியையின் அறிவுறுத்தலின் பேரில், பிற மாணவர்களால் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்  அல்தமாஷின் தந்தை இர்ஷாத். தனது மகன் மற்ற மாணவர்களால் தாக்கப்படுவதை  அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக கூறியுள்ள இர்ஷாத், இனி தனது மகனை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்தும் தாம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

போலீசார் முன்னிலையில் ஆசிரியை திரிப்தா தியாகி மன்னிப்புக் கேட்டதாகவும், .அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், இர்ஷாத் உறுதிப்பட கூறியுள்ளார்.  வழக்கு காரணமாக காவல்துறை அல்லது நீதிமன்றத்தால் அழைக்கப்படுவார் என்ற பயத்தின் காரணமாக காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளியில் தாம் கட்டிய கட்டணத்தையும் அவர் திரும்ப பெற்றுள்ளார். 

செயலற்ற பாஜக அரசு:

பாஜக தலைமையிலான உபி அரசு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆகியவை இந்தச் சம்பவம் தொடர்பாக செயலற்றதாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முஸ்லிம் மாணவர்கள் மீது இத்தகைய வெறுப்பு சிந்தனைக்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற சம்பவங்களை பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகள் கண்டிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளனர். சம்பவத்தில் தொடபுடைய ஆசிரியை மீது சிறார் நீதி 2015 சட்டத்தின் 75வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் பணி என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:

முஸ்லிம்களுக்கு எதிரான இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் இதுபோன்ற சம்பவங்களை ‘தடுத்து நிறுத்த நீதிமன்றங்களும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதசார்பற்ற நாட்டில், முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக பரப்பப்படும் வெறுப்பு பேச்சுகளையும், செயல்களையும் தடுத்து நிறுத்துவது ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கடமை என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: