மதராஸ் எனும் சென்னைக்கு வயது 384.....!
முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பு....!!
பரந்து விரிந்த நிலப்பரப்பில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படும் மரதஸாபட்டினம் என்னும் சென்னைக்கு மாநகருக்கு இன்று 384–வது பிறந்த நாள். 1639–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி மதராஸ் நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட்ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள்.
இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
சிறு வரலாறு:
ஒரு ஆண்டுக்கு பிறகு செயின்ட்ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்பநாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
அப்போதைய காலக் கட்டத்தில் எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் மதராசுடன் இணைக்கப்பட்டன.
கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என 2 நகரங்கள் உருவாயின. அதன் பிறகு சிறிய ஆங்கிலேய குடியிருப்பாக இருந்த மதராஸ் ஒரு நகரமாக உருமாற ஆரம்பித்தது.
1688–ம் ஆண்டு மதராஸ் முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதராஸ் பெற்றது.
மதரஸாபட்டினம்:
மதரஸாக்கள் அதிகம் இருந்ததால், இதற்கு மதரஸாபட்டினம் என பெயர் வைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
மதராஸ் நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்ததால், உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் இங்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே இங்கு அறிமுகமாகின.
1895–ம் ஆண்டு மே 7–ந்தேதி மதராஸ் நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது.
அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் தியேட்டர் இதுதான்.
ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன. ரிக்ஷாக்காரர்கள் முதல் மகாராஜாக்கள் வரை மதராஸ் மாநகரின் தெருக்களில் வலம் வந்தனர்.
இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் மூலம் மதராசுடன் இணைக்கப்பட்டன.
1947–ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் மாறியது.
சென்னையாக பெயர் மாற்றம்:
1969–ம் ஆண்டு மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலைநகரின் பெயரான மெட்ராஸ் 1996–ம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை மாநகரம் இன்று, புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
முஸ்லிம்களின் பங்களிப்பு:
மதராஸ் என்னும் சென்னை மாநகரம் பல்வேறு துறைகளில் சிறந்த நகரமாக இருப்பதற்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஏராளமான பணிகளை ஆற்றியுள்ளனர். இன்னும் சிறந்த முறையில் செய்து வருகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி, தொழில் மேம்பாடு, கல்வி, வணிகத் துறையில் சிறந்த பங்களிப்பு என முஸ்லிம்களின் சேவைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
முக்கிய அடையாளங்கள்:
சென்னையின் முக்கிய அடையாளங்களாக காயிதே மில்லத் நினைவிடம், காயிதே மில்லத் மணிமண்டபம், இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸில், புது கல்லூரி, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அஞ்சுமன் மதரஸா, மண்ணடி, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பழமையான, வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் இருந்து வருகின்றன.
திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் 228 ஆண்டுகள் பழமையானது. நந்தனம் பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் 1789-1785-க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதேபோன்று ஈத்கா பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் சென்னைக்கு அழகு சேர்க்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் ஒரே தமிழ் நாளிதழான மணிச்சுடரின் அலுவலகம் சென்னை மரைக்காயர் லெப்பை வீதியில் உள்ளது. 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் முஸல்மான் உர்தூ நாளிதழின் அலுவலகம் திருவல்லிக்கேணியில் உள்ளது.
புகழ்பெற்ற யுனானி மருத்துவமனை, மருத்துவர்கள், மிகப்பெரிய கண் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை ஆகியவை சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை ஆற்றி வருகின்றன.
சுவையான பிரியாணி:
வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும் சுவையான பிரியாணி, நெய் சோறு, காயல்பட்டினம் உணவு வகைகள் ஆகியவையும் சென்னையில் கிடைக்கின்றன.
தமிழ், உர்தூ, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது வட மாநில தொழிலாளர்களின் சொர்க்கப் பூமியாக சென்னை இருந்து வருகிறது.
இளைஞர்கள், மகளிர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சென்னை மாநகர் பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.
சென்னையின் வேகமான வளர்ச்சிக்கு ஒருசில தடங்கல்கள் இருக்கவே செய்கின்றன. இதனை சரி செய்தால் சென்னை இன்னும் வளர்ச்சிப் பாதையில் நடை போடும் என்பது உறுதி.
அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment