அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும்....!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேண்டுகோள்...!!
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், அண்மைக் காலமாக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையிலும், நீதியை நிலை நாட்டும் வகையிலும் பல வழக்குகளில் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு பயந்துவிடாமல், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் ஒரளவுக்கு உறுதியாக இருந்து வருகிறார். வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, காங்கிரஸ் எம்.பி,. ராகுல் காந்தியின் பதவி பறிப்பு வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்ட சிலவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம். இதேபோன்று, மணிப்பூர் பிரச்சினையிலும் உச்சநீதிமன்றம் தன்னுடைய கடமையை சரியான முறையில் ஆற்றியுள்ளது என்றே கூறலாம்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்:
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் டாக்டர் டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறையின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் இருக்கும் வகையில் பணிகளை ஆற்றி வருகிறார் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள் பொதுவாக விமர்சனத்திற்கு உள்ளாகின. இதன்மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை கேள்விக்குறியாக மாறியது என்ற பொதுவாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அத்துடன், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்து தனது பணிகளை ஆற்றி வருகிறார். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தன்னுடைய பணிகளை அமைத்துகொண்டு, சந்திரசூட் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்:
அண்மையில் கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இந்திய தேசிய சட்டப் பள்ளியின், 31வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது,. இந்த விழாவில், தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், ஒரு சட்ட அலுவலகத்தில் பயிற்சி பெறச் சென்ற சட்டக்கல்லூரி மாணவனிடம் அவனுடைய சாதி என்ன என்று கேட்கப்பட்டதாகவும், அந்த மாணவர் தனது சாதியை சொன்னதும், அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தன்னை மிகவும் விரக்தியில் ஆழ்த்தியது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக எழுந்து நிற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சட்டத்தை மீறும் வழக்கறிஞர்கள்:
ஆனால், சில வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு பதிலாக சட்டத்தை மீறுகின்றனர் என்றும் சந்திரசூட் வேதனை தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தற்போது அடிப்படை அரசியலமைப்பு பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிய தலைமை நீதிபதி, ஒரு நல்ல மனிதனும், நல்ல வழக்கறிஞரும் மோதிக்கொண்டால், நீங்கள் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயர்த்திய ஏணியை உதைக்காதீர்கள்:
நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என குறிப்பிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், அதிக பெண் வழக்கறிஞர்கள் வருவதற்கு வழக்கறிஞர் தொழில் படிப்படியாக ஒரு தொடக்க புள்ளியாக மாறி வருகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், வாழ்க்கைப் பயணத்தில், உங்களை உயர்த்திய ஏணியை உதைக்காதீர்கள் என்றும் வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
நம்பிக்கை தரும் கருத்து:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்துகள், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு தற்போது போகும் பாதை, கடும் நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் இருக்கும் நிலையில், நாட்டின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இருக்கவே செய்கிறார்கள் என்பதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் ஓர் நல்ல உதாரணம் என்றே கூறலாம். மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பி அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய சில பாசிச சக்திகள் முயற்சிகளை செய்துவரும் நிலையில், அநீதிக்கு எதிராக நிற்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்து இருப்பதை நாட்டு மக்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பண்முகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வெறுப்பை ஒதுக்கி தள்ளி அன்பு வழியில் பயணிக்க நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், வெறுப்பை விதைத்து, இலாபம் பெற நினைக்கும் சூழ்ச்சியாளர்களின் எண்ணங்கள், நடவடிக்கைகள் ஒருபோதும் பலன் அளிக்காமல் வீணாகிவிடும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment