தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
தற்போது நாட்டில் நிலவும் கவலைக்கிடமான நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் நம் அனைவரின் முன்பு உள்ளது. முஸ்லிம்கள், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சடங்குகளுக்கு எதிராக நாளுக்கு நாள் ஒரு சதி பின்னப்பட்டு வருகிறது என்பது விழிப்புணர்வு உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. கலவரங்கள் நடக்கின்றன. முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்றன. புல்டோசரால் இடிக்கப்படுகின்றன. வணிக நிறுவனங்கள், வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. இதில் பலர் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முந்தைய காலங்களிலும் இது நடைபெற்றது.
ஆனால் தற்போது இஸ்லாத்தின் ஷரியா விதிகள் மற்றும் சடங்குகள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய ஹிஜாப் மீதான தடை, திறந்த வெள்ளி தொழுகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் அதான் அழைப்பு மற்றும் பல பிரச்சினைகள் எடுத்துக்கொண்டு சுற்றுச்சூழலை மேலும் நச்சுத்தன்மையுடனும், அழுக்காகவும் மாற்ற பாசிச அமைப்புகள் முயற்சி செய்கின்றன. சமீபத்தில் காஷ்மீர் பண்டிட்களைப் பற்றிய காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டது. இதன் நோக்கம் முஸ்லிமல்லாதவர்களின் உள்ளங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களைத் தூண்டிவிட்டு பழிவாங்கத் தூண்டுவதாகும். பாதகமான சூழ்நிலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்:
இந்த இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில் சாதாரண முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் பொறுப்பு என்ன, நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் முன் சில கருத்துகளை வைக்கிறேன். இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன.
முதலில் முஸ்லிம்கள் தங்கள் ஈமானை வலுப்படுத்தி, அவர்களின் செயல்களையும், ஒழுக்கத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: பலவீனமாக இருக்காதே, சோகமாக இருக்காதே, நம்பிக்கையின் தேவைகளைப் பின்பற்றினால் வெற்றியும் மேன்மையும் நிச்சயம் கிடைக்கும். எனவே, முதலில் செய்ய வேண்டியது பலவீனமாக இருக்காமல், கோழையாக இருக்காமல், இதயத்தின் உள் வலிமையை வளர்க்க வேண்டும். மரணம் ஒரு முறை வரும்.. அது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரும்.. இந்த நம்பிக்கையை முஸ்லிம்கள் எப்போதும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
புனித குர்ஆனின் கூற்றுப்படி, ஒருவர் வலுவான கோட்டைகளுக்குள் ஒளிந்தாலும், மரணம் அங்கு சென்றடையும். எனவே, மரணம் நிச்சயம் வரும்., ஒவ்வொருவரும் வரும். அது அதன் சொந்த நேரத்தில் வரும். அது ஒரு முறை மட்டுமே வரும். எனவே, ஒரு நபர் எப்போதும் மரணத்திற்கு பயப்படுவது நம்பிக்கையின் வலிமைக்கு முற்றிலும் எதிரானது.
ஈமானை பலப்படுத்துங்கள்:
எனவே, உங்கள் இதயத்தை வலுவாக வைத்து, நீங்கள் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் ஈமானைப் பலப்படுத்துங்கள், அதேபோல் உங்கள் செயல்களைச் சரிசெய்து, உங்கள் ஒழுக்கத்தை சரிசெய்து, தனிமை மற்றும் தனிமை வாழ்க்கையை இறையச்சம் கொண்ட வாழ்க்கையாக ஆக்கி, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள். தொழுகையுடன் மற்ற இஸ்லாமிய கட்டளைகளை முழுமையாகப் பின்பற்றுங்கள், மேலும் தீமைகளை அகற்ற முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் உதவி இறையச்சம் மற்றும் பொறுமையின் நிபந்தனைக்கு உட்பட்டது. இறையச்சத்தை ஏற்று, அல்லாஹ்வுக்கு பயந்து, மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவருக்கு அல்லாஹ் உதவுகிறான். அவனுடைய வெகுமதியை வீணாக்குவதில்லை.
அமைதியை விரும்பும் இஸ்லாம்:
இரண்டாவது பணி, இஸ்லாத்தின் உண்மையான செய்தியை முஸ்லிம்கள் தங்களின் அழகான செயல்களின் மூலம் மற்ற மக்களுக்கு எடுத்துச் செல்வதாகும். ஏனென்றால் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் என்ற ஒரு பிம்பம் உலக மக்களின் மனதில் பிறரால் விதைக்கப்படுகிறது. அவர்கள் வன்முறையாளர்கள், அவர்கள் பயங்கரவாதிகள், ஒழுக்கக்கேடானவர்கள், கொலைகாரர்கள், இரத்தவெறி பிடித்தவர்கள் என பொய் பரப்பபட்டு வருகிறது. எனவே, இஸ்லாம் குறித்தும், அதன் உண்மையான நோக்கம் குறித்தும், அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களுக்கு சொன்ன வாழ்க்கை நெறியை நாம் மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
அதாவது, முஸ்லிம்கள் அமைதியை விரும்புகிறவர்கள். ஏழைகள் மற்றும் அண்டை வீட்டாருக்கு உதவி செய்பவர்கள். மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்கள் என்பதை நம் செயல்களின் மூலம் நிரூபிப்பதும், இதை மனதில் வைத்துக் கொள்வதும் முஸ்லிம்களின் பொறுப்பாகும்.
பொய்யான விளம்பரங்கள், போலி படங்கள் மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரங்களால் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், ரத்தவெறி கொண்டவர்கள் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. அதை முஸ்லிம்கள் தங்களின் அழகான செயல்கள் மூலம் முறியடிக்க வேண்டும்.
எங்கும் அன்பு செய்தி:
முஸ்லிம்கள் எங்கு சென்றாலும் அன்பின் செய்தியைப் பரப்ப வேண்டும். அன்பைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக ஒருசில கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை தவிர , எந்த அரசியல் கட்சியும் மிகப்பெரிய அளவுக்கு குரல் எழுப்பவில்லை. எனவே முஸ்லிம்கள் வலுவான நம்பிக்கையின் மூலம், தங்களின் செயல்களையும் ஒழுக்கத்தையும் சரிசெய்து, இதயத்தில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகத்தின் மீதான அன்பு மற்றும் மரணத்தை வெறுப்பது. இதயத்தில் கோழைத்தனம் பலவீனத்தை ஏற்படுத்தும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலிமையை வளர்த்துக் கொள்ளுங்கள்:
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைப் பற்றி அழுவதும் புகார் செய்வதும் எந்த பலனையும் தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்குள் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பலவீனங்களை அகற்ற முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் முன்னிலையில் நம்பிக்கை மற்றும் செயல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நம்பிக்கை கொண்டவர்களுக்கு சோதனைகள் உள்ளன என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது.
இறுதியாக, நான் மீண்டும் சொல்கிறேன், மரணம் வந்தால், அது மரியாதையுடன் வர வேண்டும். ஆனால் கோழைத்தனத்துடனும், உள்ளத்தில் பலவீனத்துடனும் பிறரிடம் தன்னை ஒப்படைப்பது முஃமினின் மகிமை அல்ல. அல்லாஹ் நமக்கெல்லாம் சரியான புரிதலை தந்து சரியாகச் செயல்பட வைப்பானாக ஆமீன்.
(குறிப்பு: இது ரோசானா ராஷ்டீரிய சஹாரா உர்தூ நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்ட தாருல் உலூம் தேவ்பந்த் முஃப்தி அபுல் காசிம் நோமானி உரையின் சுருக்கம் )
- நன்றி: ரோசானா ராஷ்டீரிய சஹாரா உர்தூ நாளிதழ்.
- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment