Saturday, August 19, 2023

மணிப்பூர் முஸ்லிம்கள் கோரிக்கை...!

 

மணிப்பூர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்....! 

குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு முஸ்லிம்

யுனைடெட் மெய்தி-பங்கல் கமிட்டி வேண்டுகோள்.....!


மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரமணாக அங்கு வன்முறை வெடித்தது. கடந்த மே மாதம் ஏற்பட்ட இனக்கலவரம் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மணிப்பூரை விட்டு வெளியேறி பிற மாநிலங்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவுக்கு பலன் அளிக்கவில்லை. அங்கு தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது.

மணிப்பூர் முஸ்லிம்கள் பேட்டி:

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம்கள் அமைப்பான மணிப்பூரின் யுனைடெட் மெய்டே-பங்கல் கமிட்டி, இரு சமுகங்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எந்த பலனையும் தரவில்லை என குற்றம்சாட்டியது.

கடந்த நான்கு மாதங்களாக  குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையேயான பிளவு வலுப்பெற்றதால், இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் மெய்தி பங்கல்ஸ் முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நடுநிலையான சமூகமாக இருந்து வரும் தாங்கள், பெரும்பாலும், மெய்தி மற்றும் குகி குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக குழு தெரிவித்தது. நீண்ட காலமாக இரு சமூகத்தினராலும் தங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை வழங்கப்பட்டதாக கூறிய குழு உறுப்பினர்கள், தற்போது வன்முறை தொடர்ந்து கொண்டு இருப்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

தாக்கப்படுவோம் என அச்சம்:

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையேயான வன்முறை தொடர்வதால், அவர்கள் தங்களையும் தாக்கக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது.  மேலும் நாங்கள் மோதலுக்கு வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவோம் என்று பயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த குழு தெரிவித்தது. தற்போது நடந்துவரும் வன்முறையில் முஸ்லிம்கள் 13 பேர் தாக்கப்பட்டதாகவும், ஒரு முஸ்லிம் சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த குழு கூறியது.

குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்:

எனவே மணிப்பூரில் தற்போது நடைபெற்று வரும் இரு சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண குடியரசு தலைவர் முன்வர வேண்டும் என்றும் மணிப்பூர் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக செயலில் இறங்கி அமைதியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்

ஒற்றுமையை சிதைக்க முடியாது:

மணிப்பூரின் ஒற்றுமையை சிதைக்க முடியாது என உறுதியாக கூறிய முஸ்லிம்கள், தற்போது நடைபெற்று வரும் பிரச்சினையால் மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.

மணிப்பூரில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் அனைத்து பிரிவு மக்களுடைய இணைந்து அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், தற்போது மணிப்பூரில் இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.

எனவே, மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தங்கள் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

பாஜக அரசு மீது குற்றச்சாட்டு:

மாநிலத்தில் வன்முறை, கலவரம் ஆகியவற்றை தடுக்க மணிப்பூர் பாஜக அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும் முஸ்லிம்கள் குற்றம்சாட்டினர். ஒன்றிய பாஜக அரசுடன் நெருக்கமாக உள்ள மாநில பாஜக அரசு, பிரச்சினையை தீர்க்காமல் வேடிக்கை பார்ப்பது தங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் மணிப்பூர் முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

======================

No comments: