Saturday, August 12, 2023

சுவையான உணவுகள்.....!

சுவையான  உணவுகள் - ருசியான தகவல்கள்...!

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பல சுவையான உணவுகளின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, சாலையோரங்களில் நடத்தப்படும் இத்தகைய உணவு மையங்களில் கிடைக்கும் ருசியான உணவுகள், 5 நட்சத்திர விடுதிகளில் கூட கிடைக்காது என கூறலாம். இதனால், தொழில் அதிபர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் இந்த மையங்களுக்கு சென்று, பலவகையான உணவுகளை ருசித்து சாப்பிட்டு செல்கிறார்கள். 

சுவையான உணவுகளின் மையம் மும்பை:

இந்தியாவின் வணிக நகரமாக கருத்தப்படும் மும்பை, அதன் சாலையோர உணவு கலாச்சாரத்திற்கு மிகவும் பிரபலமானது. இங்கு சுடசுட விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் உள்ளூர் மக்களை மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்றன. இந்த சாலையோர உணவுகள் மும்பை நகரத்தின் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கின்றன. 

மும்பையில் மட்டுமல்ல, டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கூட இதுபோன்ற சாலையோர உணவு மையங்கள் மக்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் சில உணவு வகைகளை மக்கள்  அடிக்கடி விரும்பி சாப்பிட்டு மனத்திருப்தி அடைந்து வருகிறார்கள். 

பாவ் பாஜி: 

மும்பையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாவ் பாஜி கிடைக்கிறது, ஆனால் இங்குள்ள கடற்கரைகளுக்குச் செல்லும்போது பாவ் பாஜி சாப்பிடுவது தனி அனுபவமாக இருந்து வருகிறது. காய்கறிகளின் காரமான மற்றும் சுவையான கலவையுடன்  வெண்ணெய் தடவி வாடிக்கையாளர்களுக்கு இது பரிமாறப்படுகிறது. 

பேல் பூரி: 


மும்பையில் விற்பனை செய்யப்படும் பேல் பூரிக்கு வித்தியாசமான மற்றும் தனி சிறப்பு உண்டு. மிகவும் குறைந்த விலையில் விற்பனையாகும் இந்த சுவையான சிற்றுண்டி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. கடற்கரை சிற்றுண்டி என்றும் பேல் பூரி அழைக்கப்படுகிறது. இது மர்மரா, காய்கறிகள், சட்னிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சுவையான மற்றும் மொறுமொறுப்பான கலவையாகும்.

பானி பூரி: 


மும்பையின் சாலையோர உணவு வகைகளில் பானி பூரியை குறிப்பிடாமல் இருக்க முடியாது. நாட்டில் பானி பூரி வணிகம் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று வருகிறது. சட்னியுடன் கொடுக்கப்படும் பானி பூரி வித்தியாசமான சுவை அளிக்கிறது.

செவ் பூரி: 

பேல் பூரியைப் போலவே செவ் பூரியும் இருக்கும், ஒரே வித்தியாசம் என்னவென்றால், இது மிருதுவான கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், சேவ் மற்றும் நூடுல்ஸ் மற்றும் பலவிதமான சட்னிகளுடன் பரிமாறப்படுகிறது.

தஹி பூரி: 

தஹி பூரி மும்பையில் இருந்து உருவானது. இது ஒரு வகையான சாட். இது தயிர், சட்னிகள், பல்வேறு வகையான மசாலாப் பொருட்கள் நிறைந்த ஆரோக்கியமான சுவைகளின் சரியான கலவையாகும். இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என கருதப்படுகிறது.

வடா பாவ்: 


மும்பையில் உள்ள அனைத்து சாலையோர உணவுகளிலும், வடா பாவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது, அதனால் தான் இது இந்திய பர்கர் என்றும் அழைக்கப்படுகிறது. மும்பையில் உள்ள வடபாவோ கடந்த 1966-இல் தாதரில் தொடங்கப்பட்டது, அதன் பின்னர் இந்த உணவு மும்பையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளது. மும்பையில் சுமார் 2 லட்சம் மக்கள் வடபாவோவை நாள்தோறும் தங்கள் உணவில் ஒரு அங்கமாக ஆக்கியுள்ளனர்.‘

 ராக்கா பட்டிஸ்: 


இது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் பிரபலமான உணவு. இது உருளைக்கிழங்கு டிக்கிஸ் மற்றும் காரமான பட்டாணி கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சோலே டாக்கி போன்ற உணவாகும். 

முசல் பாவ்: 

இது செவ், பர்சன், வெங்காயம், எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றுடன் பரிமாறப்படும் ஒரு சிறப்பு கறி மட்டி மற்றும் பாவ் அடிப்படையிலான உணவாகும். முசல் பாவ் கோடாஜி ஃபர்சாந்த்  என்பவரால் முதல் முதல் அறிமுகம் செய்யப்பட்ட உணவாகும். 

கைமா பாவ்:

கைமா பாவ், பொதுவாக ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. மிகவும் ருசியாக இருக்கும் கைமா பாவ், மும்மையில் மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அசைவ உணவுப் பிரியர்கள் அதிகளவு விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். 

தாபிலி: 

தாபிலி முதன்முதலில் 1960-இல் மாண்ட்வியில் வசிக்கும் கேஷோஜி காபா சிடாஸ்மான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் தாபிலி வியாபாரத்தை ஆரம்பித்தபோது முதல் முறையாக ஒரு அணா, ஆறு பைசாவுக்கு தாபிலியை விற்றதாக கூறப்படுகிறது. இது பல்வேறு சட்னிகள், மாதுளை விதைகள் மற்றும் வறுத்த வேர்க்கடலையுடன் கூடிய மசாலா உருளைக்கிழங்கைக் கொண்டுள்ளது.

உணவுகள் மூலம் வாழ்க்கை:

அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் இத்தகைய சுவையான உணவுகள் மூலம், கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஒளி கிடைத்து வருகிறது. ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை விற்பனை செய்யப்படும் இந்த உணவு வகைகள் மூலம், நாட்டின் கிராமப்புற மற்றும் நகரப்புற மக்களின் பொருளாதார தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. 

அதேநேரத்தில், சாலையோர உணவு மையங்களில் விற்பனை செய்யப்படும், இத்தகைய உணவு வகைகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், பெரும்பாலான உணவு தயாரிப்பு விற்பனையாளகள், தங்கள் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, நல்ல சுவையுடனும் சுகாதாரமான முறையிலும் இந்த உணவுகளை தயாரிப்பதால், அதை மக்கள் விரும்பி சாப்பிட்டு ருசிக்கிறார்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க இதுபோன்ற சுவையான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது என்றே தோன்றுகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ

No comments: