Thursday, February 1, 2024

சோகமான தினமாக இருக்கும்…!

 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்

சிறுபான்மை அந்தஸ்து நீக்கினால்,

அது சோகமான தினமாக இருக்கும்…!

 

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்


 

புதுடெல்லி,பிப்02-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கி கடந்த 1967ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.  

இந்த வழக்கில், அலிகர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பல்கலைக்கழகத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் வகுப்புவாத நிறுவனமாக அலிகர் பல்கலைக்கழகம் இல்லை என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை என்றும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவான் கூறினார்.

இதேபோன்று, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புச்  சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அலிகர் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்தை அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தனது இறுதி வாதத்தை அவர் நேற்று நிறைவு செய்தார்.

சிறுபான்மையினருக்கு உரிமை:

அப்போது பேசிய கபில் சிபல், நாட்டில் வாழும் சிறுபான்மையின சமுதாயத்தினர், கல்வி நிறுவனங்களை நிறுவி, அதனை நிர்வாகிக்க அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கி இருப்பதாக கூறினார். ஒரு கல்வி நிறுவன நிர்வாகத்தில் அதிகளவு சிறுபான்மையின மக்களை ஈடுபடுத்தப்படுவதன் மூலம், சிறுபான்மை அந்தஸ்து மதிப்பை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டம் 30 (1) அளித்த உரிமையின்படி, நிர்வாகத்தை முழுமையாக தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள அலிகர் பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு என்றும் கபில் சிபல் கூறினார். 

கறுப்பு தினம்:

அலிகர் பல்கலைக்கழகம் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதாகவும், அனைத்து சமுதாய மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகையை சூழ்நிலையில், கல்வி நிறுவனங்களை தொடங்குவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இரட்டை நிலையை எடுத்தால், இனி நாட்டில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களே இருக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வழக்கில் சிறுபான்மை அந்தஸ்து பறிக்கும் முடிவை உச்சநீதிமன்றம் எடுத்தால், அது வருத்தம் அளிக்கும் சோகமான தினமாகவே இருக்கும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 8 நாட்கள் விசாரணை நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

-     சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: