அரியானா வன்முறை.....!
பாசிச அமைப்புகளுக்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை.....! !
அரியானாவில் கடந்த மாதம் 31-ஆம் தேதி நடந்த விஸ்வ இந்து பரிஷத் பேரணியில் வன்முறை வெடித்து கலவரம் உருவானது. இந்த கலவரங்களில் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வன்முறை மற்றும் கலவரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நூஹ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவன கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. சுமார் 162 கட்டடங்களும், புதிதாக கட்டப்பட்டு வந்த 519 கட்டடங்களும் இடிக்கப்பட்டன. வன்முறை மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து, அரியானா முஸ்லிம்கள் மத்தியில் பீதியும் அச்சமும் இன்னும் நீங்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மீது கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அரியானா வன்முறை மற்றும் கலவரம் குறித்து தங்களது வேதனையை வெளிப்படுத்தி, கடும் கண்டனதை தெரிவித்தனர். மணிப்பூரை தொடர்ந்து, அரியானாவிலும் பாசிச சக்திகள், வெறியாட்டத்தை தொடங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
விவசாயிகள் ஆலோசனை:
அரியானா வகுப்பு கலவரத்தை தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில், ஹிசாரில் விவசாயிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அரியானாவில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த இந்த விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்த கூட்டத்தில் இந்து விவசாயிகள் மட்டுமின்றி சீக்கிய விவசாயிகளும் சேர்ந்து இசுலாமிய விவசாயிகளையும் மற்ற முஸ்லிம் மக்களையும் ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினார்கள்.
முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள்:
கூட்டத்தில் பேசிய இந்து, சீக்கிய விவசாயிகள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் எங்கள் சகோதரர்கள் என உறுதிப்பட தெரிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். மத நல்லிணக்கத்தில் அனைத்து பிரிவு விவசாயிகளும் மிகவும் தெளிவாக இருப்பதாக கூறிய இந்து, சீக்கிய விவசாயிகள், தைரியம் இருந்தால், எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மீது இனி தாக்குதல் நடந்துங்கள் என எச்சரிக்கை விடுத்தனர். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இனி வேடிக்கை பார்க்க முடியாது என்றும் அவர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.
பாசிச அமைப்புகளுக்கு எச்சரிக்கை:
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பிரிவு விவசாயிகளும் மற்றும் பிற அமைப்பின் பிரதிநிதிகளும் அரியானா மாநிலத்தில் நடந்து வரும் வகுப்புவாத வன்முறை மற்றும் கலவரங்களை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கண்டித்ததோடு அரியானா பாஜக அரசு, இந்துகளைப் போலவே, முஸ்லிம்களுக்கும் பாகுபாடு பார்க்காமல் பணிபுரிய வேண்டிய அரசு என்றும் கூறினர்.
இனிமேல் யாராவது முஸ்லிம்களை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, பொருளாதாரப் புறக்கணிப்பை அறிவித்தால் அல்லது மாநிலத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டினால், அவர்களுக்கு விவசாயிகள் பாடம் கற்பிப்போம் என்றும் கூட்டத்தில் பேசிய இந்து, சீக்கிய விவசாயிகள் கடுமையாக எச்சரித்தனர்.
தைரியம் இருந்தால், இனி முஸ்லிம்கள் மீது கை வைக்கட்டும் என்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தட்டும் என்றும் சவால் விட்டு அரியானா விவசாயிகள், இனிமேலும், விவசாயிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். நம் முஸ்லிம் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதன் பிறகு, முடிவு வேறு விதமாக இருக்கும் என்பதை விவசாயிகள் இனி காட்டுவார்கள் என்றும் பாசிச அமைப்புகளுக்கு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமைதியை சீர்குலைக்க அனுமதிக்க முடியாது:
அரியானா மாநிலத்தின் அமைதியான சுற்றுச்சூழலை கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பாசிச அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள், அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்தாமல், வன்முறைகளைத் தொடர்ந்தால், அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் விவசாயிகள் உறுதிப்பட கூறினர்.
விவசாயிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரபல விவசாய சங்கத் தலைவர் சுரேஷ் கோத், கடந்த சில நாட்களாக அரியானாவின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் முயற்சிகளை விவசாயிகள் கண்டிப்பதாக தெரிவித்தார். அரியானா மாநிலம் முழுவதும் இதுபோன்ற செயல்களை இனி அனுமதிக்க முடியாது என்றும், அப்படி செய்தால், அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் விவசாயிகள் எடுப்பார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு:
அரியானா முழுவதிலும் உள்ள விவசாய அமைப்புகள் இனி முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்று கூறிய விவசாய சங்கத் தலைவர் சுரேஷ் கோத், முஸ்லிம்களை விவசாயிகள் தங்களின் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு, மதவெறியர்களை விரட்டுவார்கள் என்றும் தெளிவாக தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும், அந்தந்த பகுதிகளில் நடந்து வரும் மதவெறி தாக்குதலை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இனி, முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என்றும் விவசாயிகள் உறுதி அளித்தனர்.
முஸ்லிம்களை இனி மிரட்டும் எந்த ஒரு அமைப்பு அல்லது தனி நபர்களுக்கு உடனடியாக பாடம் புகட்டப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் விவசாயிகளின் தலைவர் சுரேஷ் கோத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு நம்பிக்கை:
அரியானா முஸ்லிம்களை ஒருசில பாசிச அமைப்புகள் தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில், இந்து, சீக்கிய விவசாயிகள் அனைவரும் ஒன்றுபட்டு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களை தாக்கும் பாசிச அமைப்புகளின் செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது என விவசாயிகள், பாசிச அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதால், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரியானாவில் ஆளும் பாஜகவும் கலக்கம் அடைந்துள்ளது. ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் ஓராண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றதால், விவசாயிகளின் வலிமை என்ன என்பதை பாசிச அமைப்புகளும், ஆட்சியாளர்களும் ஏற்கனவே நன்கு அறிந்து இருக்கிறார்கள். தற்போது அரியானா வன்முறை மற்றும் கலவரத்தை கண்டித்து விவசாய அமைப்புகள் குரல் கொடுத்து இருப்பது அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment