இன்றைய மதரஸாக்களும் அறிவியல் மனப்பான்மையும்.....!
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ‘அறிவியல் குணம்’ என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கினார். நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்துடன் இணைந்து, இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற சிறந்த நிறுவனங்களை அவர் நிறுவினார். இந்திய மேலாண்மை நிறுவனங்கள், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் போன்றவை உருவாக்கப்பட்டன. பகுத்தறிவு சிந்தனையில் நம்பிக்கை கொண்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளராக நாட்டின் முதல் பிரதமர் நேரு இருந்தார். ஆனால் தற்போது நிலைமை வேறு விதமாக இருந்து வருகிறது. சொல்லாடல் மட்டுமே இருந்து வருகிறது. நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவுக்கு உருவாக்கப்படவில்லை. நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஏற்பத்திய அறிவியல் புரட்சி போன்ற ஒரு நிலை தற்போது இல்லை என்றே கூறலாம்.
அறிவியல் எழுச்சிக்கு வழி வகுத்த இஸ்லாம்:
அறிவியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஆற்றிய பணிகளை, சேவைகளை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக பேராசிரியர் ஜிம் அல்-கலிலி கருத்துப்படி, அறிவியல் வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சிக்கு இஸ்லாம் வழி வகுத்தது. இதுகுறித்து அறிவியல் மற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டுள்ளது.
முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும். எனவே தொழுகையின் துல்லியமான நேரத்தை அறிந்து கொள்வது இஸ்லாத்தில் அவசியம். டமாஸ்கஸில் உள்ள உம்மித் மசூதியில், கலீலி இபின் அல்-ஷாதிர் (1304-1375) என்பவரால் முதலில் நிறுவப்பட்ட ‘சன் டயலின்’ சரியான நேரத்தை கண்டுபிடிக்க முடிந்தது. 'சன் டயல்' பருவகால மாற்றங்களுக்கான ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது.
தொழுகை செய்ய ஒருவர் மக்காவில் உள்ள காபாவை அதாவது 'கிப்லா' எதிர்கொள்ள வேண்டும். முஸ்லீம் உலகின் சிறந்த வானியலாளர்களில் ஒருவரான அல்-பட்டானி (858-929) கிரேக்கர்களின் வடிவியல் முறைகளை மாற்றியமைத்து வடிவியல் கணக்கீடுகளில் சைன்கள் மற்றும் தொடுகோடுகளின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். முக்கோணவியலைப் பயன்படுத்தி, ‘கிப்லா’வைக் கண்டுபிடிப்பதற்கான சமன்பாட்டை உருவாக்கினார். அவரது சமன்பாடு மிகவும் துல்லியமான முறைகளால் முறியடிக்கப்படும் வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பாலிமத் அல்-பிருனியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் முஹம்மது இபின் மூசா அல்-குவாரிஸ்மி (780-847) ஒரு சிறந்த கணிதவியலாளர் ஆவார். அவர் நேரியல் மற்றும் இருபடி சமன்பாடுகளின் முதல் முறையான தீர்வை முன்வைத்தார். 12-ஆம் நூற்றாண்டில், பல்வேறு இந்திய எண்களைக் குறியீடாக்கிய எண்கணிதம் பற்றிய அவரது பாடநூலின் லத்தீன் மொழிபெயர்ப்புகள், மேற்கத்திய உலகிற்கு தசம நிலை எண் முறையை அறிமுகப்படுத்தியது. கணினிகள் மூலம் சிக்கல்களைத் தீர்க்க அல்காரிதம் (ஒரு சிக்கலைத் தீர்க்க படிப்படியான செயல்முறை) பயன்படுத்துகிறோம். அல்காரிதம் என்பது அல்-குவாரிஸ்மி என்ற அவரது பெயரிலிருந்து மட்டுமே பெறப்பட்டது. கிபி 820-இல், அவர் வானியலாளர் மற்றும் பாக்தாத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் விஸ்டம் நூலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஹசன் இபின் அல்-ஹைதம் (965-1040) இன்றைய ஈராக்கைச் சேர்ந்த இஸ்லாமிய பொற்காலத்தின் இடைக்கால கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். அவர் "நவீன ஒளியியலின் தந்தை" என்று குறிப்பிடப்படுகிறார்.
ஜபீர் இபின் ஹய்யான் (721-815), ஐரோப்பாவில் கெபர் என அறியப்பட்டவர். இடைக்கால இஸ்லாமிய அறிஞர். ரசவாதத்தின் தந்தை மற்றும் மருந்தியல் மற்றும் நவீன வேதியியலின் நிறுவனர்கள் அல்லது முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மௌலானா அப்துஸ் சலாம் நத்வி ‘ஹுக்மா-இ-இஸ்லாம்’ என்பதை இரண்டு தொகுதிகளாக எழுதினார். இதில் அல்-குவாரிஸ்மி பற்றிய சிறு விளக்கம் உள்ளது. சேர்த்தல் மற்றும் அடிக்குறிப்புகளுடன் புத்தகத்தின் மற்றொரு பதிப்பு மிகவும் தேவைப்படுகிறது.
பொற்காலம் ஏன் முடிவுக்கு வந்தது?:
இப்படி அறிவியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் மிகப்பெரிய சேவை ஆற்றி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து இருந்த நிலையில், தற்போது ஒரு கேள்வி எழுகிறது. அது, இஸ்லாத்தின் இந்த பொற்காலம் ஏன் முடிவுக்கு வந்தது? விஞ்ஞானம் செழிப்புடன் வளர்கிறது. ஆனால் மங்கோலியர்களின் தாக்குதல்கள் மற்றும் இஸ்லாமியப் பேரரசின் வீழ்ச்சியால் அறிவியல் ஆராய்ச்சியை அதே வேகத்தில் கொண்டு செல்ல முடியவில்லை. அண்மை காலமாக, இஸ்லாமிய அறிஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு அறிவியல் துறையில் சாதனைகளை நிகழ்த்தவில்லை.
மேலும், அச்சகத்திற்கு எதிரான ‘ஃபத்வா’ (1450) அறிவுப் பரவலை நிறுத்தியது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையும் மெல்ல மெல்ல குறைந்தது. மேற்கத்திய அறிஞர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் சந்தேகங்கள் மற்றும் வினாக்களுக்கு வினவல்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் விதமாகும். ஆனால் தற்போதைய இஸ்லாமிய அறிஞர்களிடம் சந்தேகம் அல்லது விளக்கங்கள் கேட்டால், அதற்கான பதில் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
மதரஸாக்களில் அறிவியல்:
மதரஸாக்கள் அறிவியல் கற்றலின் மையமாக இருந்த இஸ்லாத்தின் பொற்காலத்திற்கு (ஏழாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை) மாறாக, இன்றைய மதரஸா மாணவர்கள், அறிவியல் ஆய்வு உணர்வை அற்றவர்களாக உள்ளனர். நமது மதரஸாக்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அத்துடன் அவர்கள் நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகளை அபத்தமான வழிகளில் முன்வைக்கின்றனர் என்றும் பரவலாக புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கங்களை அறிய விரும்பினால், அதற்கு தகுந்த பதில் கிடைப்பதில்லை.
ஒளியின் சிதறல் காரணமாக வானம் நீல நிறத்தில் தோன்றுகிறது. இதை சர் சி.வி. ராமன் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது மற்றும் 'ராமன் ஸ்பெக்ட்ரா' அறிமுகப்படுத்தப்பட்டது. மதரஸா பட்டதாரிகளும் நீல வானத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதற்கான அறிவியல் ரீதியாக விளக்கங்களை அவர்கள் முன் வைப்பது இல்லை.
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:
இஸ்லாம் அறிவியல் துறைக்கு ஆற்றிய சேவைகளை நம் சமுதாய இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அறிவியலும் இஸ்லாமும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. இங்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் மிக நல்ல முறையில் சொல்லித் தரப்படுகிறது. அந்த வகையில் அறிவியல் குறித்தும் அறிவியல் ஆராய்ச்சி குறித்தும் மதரஸா மாணவர்களுக்கு மிகச்சிறந்த முறையில் பாடங்களை சொல்லித் தர வேண்டும். அறிவியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்புகளை எடுத்துக் கூற வேண்டும். அதன்மூலம் அறிவியல் பூர்வாமாக சிந்திக்கும் வகையில் மதரஸா மாணவர்களை உருவாக்க வேண்டும். அத்துடன் பொதுவெளியில் அறிவியல் குறித்து மதரஸா மாணவர்கள் உரையாற்றும்போது, அனைவரும் வியப்பும் ஆச்சரியமும் அடையும் வகையில் துல்லியமான தகவல்களை எடுத்துக் கூறும் வகையில் அவர்களை மதரஸாக்கள் தயார்படுத்த வேண்டும். இதன்மூலம் மதரஸாக்கள் அறிவியல் கற்றலின் மையமாக மீண்டும் மாறும் என உறுதிப்பட கூறலாம்.
நன்றி: முஸ்லிம் மிரர்
தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment