அரியானாவில் முஸ்லிம்களின் மனிதநேயம்.....!
அரியானா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அமைதியை கொண்டு வர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. எனினும், பாசிச அமைப்புகள் மக்களிடையே வெறுப்பை விதைத்து அரசியல் அறுவடை செய்ய துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதன்படி, தற்போது அரியானா மாநிலத்தில் இரு சமூகங்களுக்கு இடையே வேண்டும் என்றே மோதலை உருவாகியுள்ளனர்.
மணிப்பூரை தொடர்ந்து அரியானா:
அழகிய சுற்றுலா மாநிலமாக கருத்தப்படும் மணிப்பூர் தற்போது, வன்முறை மூலம் சீர்குலைந்துள்ளது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் அங்கு கலவரங்கள், வன்முறைகள் முடிவுக்கு வரவில்லை. நாள்தோறும், மணிப்பூரில் இருந்து வரும் தகவல்களை வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று வந்த இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள். குடியரசு தலைவரை நேரில் சந்தித்து, மணிப்பூரில் அமைதியை திரும்ப அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என அண்மையில் கேட்டுக் கொண்டனர். எனினும், அங்கு இன்னும் அமைதி முழுமையாக திரும்பவில்லை.
இத்தகையை சூழ்நிலையில், தற்போது பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அரியானாவில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதி இமாம் முகமது சாத் கொல்லப்பட்டார். மேலும் வன்முறை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அரியானா மாநிலத்த்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன.
முஸ்லிம்களின் மனிதநேயம்:
இத்தகைய பதற்றமான சூழ்நிலையில், அரியானாவில் நுஹ் வன்முறைக்கு மத்தியில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள், இந்து சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை வன்முறை கும்பலிடம் இருந்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று, முஸ்லிம்களின் மனிதநேயம் குறித்து பேசப்பட்டு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை பினாங்வான் சென்ற கரண் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் மீண்டும் நூஹ் சென்றடைந்தபோது, அப்பகுதியில் ஏற்கனவே வன்முறை பரவியது. நூஹ் சௌக் பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு இடையே அங்கு இருவரும் வந்தனர். அப்போது பஜ்ரங் தள உறுப்பினர் மோனு மனேசரின் ஆதரவாளர்கள், கருப்பு சட்டை அணிந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
கரணின் மகன் விவேக் கருப்பு சட்டை அணிந்து இருந்ததால், அவர் இலக்கு வைக்கப்பட்டார். கரணின் வாகனத்தை ஆத்திரமடைந்த கும்பல் தடுத்து நிறுத்தி தீ வைத்து எரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து கூட்டத்திலிருந்து தப்பிக்க, கரண் மற்றும் விவேக் ஆகியோர், ஒரு முஸ்லீம் குடும்பம் வசிக்கும் அருகிலுள்ள வீட்டிற்கு ஓடினர். அப்போது வீட்டில் இருந்த முஸ்லிம் குடும்பத்தினர், வன்முறை கும்பலிடம் இருந்து இருவரையும் காப்பாற்றி தஞ்சம் கொடுத்தனர். பின்னர், தந்தையும் மகனும், சுமார் மூன்று மணி நேரம் அந்த முஸ்லிம் வீட்டில் தங்கி இருந்தனர். மேலும் விவேக் வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போது பிரச்னை ஏற்படாமல் இருக்க, அவருக்கு புதிய சட்டையையும் முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கினர்.
மீண்டும் முஸ்லிம் குடும்பம்:
ஹரியானா காவல்துறை வாகனம் அங்கு வந்தபோது தந்தையும் மகனும் முஸ்லிம் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், போலீஸ் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் வன்முறைக்கு நடுவே இறக்கிவிட்டதாக கரண் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், கரணும் அவரது மகன் விவேக்கும் மினி-செகரட்டரியேட் அருகே அவருக்கு அறிமுகமான ஹமீத் என்ற முஸ்லிமின் வீட்டை வந்து அடைந்தனர். அங்கு அவர்களுக்கு மீண்டும் தங்குமிடம் வழங்கப்பட்டது. பின்னர் கரண் மற்றும் விவேக் இருவரையும் சோஹ்னாவில் உள்ள அவர்களது இல்லத்தில் பத்திரமாக கொண்டு சென்று ஹமீத் இறக்கி வைத்துவிட்டு வீடு திரும்பினார். இதேபோன்று ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு போலீஸ் காவலர் ஆகியோரும் வன்முறை கும்பலிடம் இருந்து முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்டனர்.
கரண்-விவேக் நெகிழ்ச்சி:
பாசிச வன்முறை கும்பலிடம் இருந்து முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்டது குறித்து கரண் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் மிகவும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர். தாங்கள் தற்போது உயிரிருடன் இருப்பதற்கே தங்களுக்கு அடைக்கலம் அளித்த முஸ்லிம் குடும்பமே காரணம் என அவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தால் தாக்கப்பட்டு மீட்கப்பட்ட தந்தை-மகன் இருவரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுத்துள்ளனர். பகைமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கரண் மற்றும் விவேக் வலியுறுத்தியுள்ளனர். மனிதநேயத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்றும் இல்லையெனில் நாடு மிகவும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைதியே முன்னேற்றம்:
நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேற வேண்டுமானால், அனைத்து தரப்பு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவுவது மிகவும் அவசியம். அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தை இனி யாரும் அனுமதிக்கக் கூடாது. மணிப்பூர், அரியானாவில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும். இத்தகையை வன்முறை மோதல்கள் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். இனி நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் சாதி, மத ரீதியான மோதல்கள் ஒருபோதும் வெடிக்கக் கூடாது. இதில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதியாக இருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, சமூகத்தில் உண்மையான அமைதிஏற்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முடியும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment