அரியானாவில்
இந்து கோவிலை பாதுகாத்த முஸ்லிம்கள்…..!
பாஜக ஆளும் அரியானாவில் கடந்த
31ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பள்ளிவாசல் இமாம்
உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை, மோதல் காரணமாக அரியானாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
புல்டோசர் மூலம் இடிப்பு:
கலவரம் மற்றும் வன்முறையை தொடர்ந்து,
நூஹ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன.
அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக காரணம் கூறி
பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, இதுவரை 162 கட்டடங்களும் புதிதாக
கட்டப்பட்டு வரும் 591 கட்டடங்களும் இடிக்கப்பட்டுள்ளன. பாஜகவின் இந்த நடவடிக்கையால்,
ஏழை மற்றும் நடுத்தர முஸ்லிம்கள் குடும்பங்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளன. வாழ்வதற்கு
இடம் கிடைக்காமல் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் மனிதநேயம்:
அரியானாவில் நூஹ் வன்முறைக்கு
மத்தியில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள்,
இந்து சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை வன்முறை கும்பலிடம் இருந்து காப்பாற்றிய சம்பவம்
பெரும் பாராட்டை பெற்று, மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கரண் மற்றும்
அவரது மகன் விவேக் ஆகியோரை வன்முறை கும்பல் தாக்கியபோது அந்த கும்பலிடம் இருந்து முஸ்லிம்கள்
அவர்கள் இருவரையும் பத்திரமாக காப்பாற்றி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
கோவிலை பாதுகாத்த
முஸ்லிம்கள்:
அரியானா முஸ்லிம்கள், மனித
உயிர்களை மட்டும் காப்பாற்றவில்லை, அத்துடன் அங்குள்ள இந்து கோவிலையும் அவர்கள் பாதுகாத்து
தங்களுடைய சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அரியானாவில் ஏழை முஸ்லிம்
குடியிருப்புகள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்படும் நேரத்தில். முஸ்லிம் இளைஞர்கள்
கைது செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகளும் கொலைகாரர்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இந்நிலையில், நூஹ் மாவட்டத்தில், உள்ள காந்திகிராம் கிஸ்ரா என்ற கிராமத்தில், முஸ்லிம்கள்
கோயிலைப் பாதுகாத்து மதவெறிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சமுக நல்லிணக்கமும், நட்பும்தான் தங்கள் கிராமத்தின்
முதுகெலும்பு என கூறியுள்ள அந்த கிராமத்தின் இளைஞர் ஜெய்த் கான், நாடு பிரிவினையின்
போது தேசத்தந்தை மகாத்மா காந்தி தங்கள் கிராமத்திற்கு வந்ததற்கு இதுவே காரணம் என்றும்
பெருமையுடன் கூறியுள்ளார்.
சமூக விரோதிகள் வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் இருக்க ஜைத் மற்றும் 13 முஸ்லிம் இளைஞர்கள்
தங்கள் கிராமத்தில் உள்ள ஒரே கோவிலை இரவு பகல் பார்க்காமல் மாறி மாறி பாதுகாத்தனர்.
இந்த கிராமத்தின் அண்டை பகுதிகளான நூஹ் மற்றும் பாட்ஷாபூர் பகுதிகளில் வகுப்புவாத வன்முறை
வெடித்தது. கிஸ்ரா குருகிராம் பாட்ஷாபூருக்கு தெற்கே 30 கிலோ மீட்டர்தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் 150 இந்து குடும்பங்கள் வசிக்கும் நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
உள்ளனர்.
இந்த கிராமத்தில் கோவில்களும் மசூதிகளும் ஒன்றுக்கொன்று எதிரே உள்ளன. நூஹ்வில்
கலவரம் வெடித்ததில் இருந்து, அந்த கிராமத்தின் முஸ்லிம்கள் தங்கள் இந்து அண்டை வீட்டாருடன்
இணைந்து கோவிலை பாதுகாத்து வருகின்றனர். வெளியாட்கள் அடிக்கடி வந்து வன்முறையை உருவாக்குவதால்
தாங்கள் அனைவரும் கோவிலை பாதுகாத்து வருவதாக டாக்சி ஓட்டுநர் முகமது இர்பான் கூறியுள்ளார்.
தங்கள் கிராமத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நட்பு வலுவாகவும்
நிலையானதாகவும் உள்ளது என்றும், இந்த கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக கோயில் நிலைத்து
நிற்கிறது என்று கூறியுள்ள பண்டிட் ராம் ஸ்வரூப்,
கிராமத்தில் நாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கிராமத்தின் சூழல் மிகவும் சிறப்பாக
உள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர்
மசூதி இடிப்பின்போது நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தபோதும், அரியானாவின் கிஸ்ரா
கிராமத்தில் இந்து-முஸ்லிம்கள்
மத்தியில் எந்தவித வன்முறையும் வெடிக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்து தங்களது
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
வெளியாட்களே காரணம்:
அரியானாவின் நூஹ் உள்ளிட்ட
நான்கு மாவட்டங்களில் வன்முறை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் வெளியாட்களே என அம்மாநில
மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேண்டும் என்றே
திட்டமிட்டு, கலவரத்தை உருவாக்கி இருப்பதாக பெரும்பாலான மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரியானாவில் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து, பலன் அடைய சில சக்திகள்
முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
நாட்டை அழிக்க அவர்கள் முடிந்தவரை முயற்சி செய்தாலும், பொய்யின் அடிப்படையில் அதிகார
மண்டபங்களை அடைந்தாலும், ஒரு நாள் அவர்களின் மதவெறி அவர்களின் முகத்திலேயே விழும் என்றும்
அரியானா மக்கள் தெரிவித்து இருப்பது மதவெறியர்களுக்கான எச்சரிகையாகும்.
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment