Saturday, August 5, 2023

முஸ்லிம்களின் கவனத்திற்கு.....!

                                                     முஸ்லிம்களின் கவனத்திற்கு.....!

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள் துடித்துக் கொண்டு இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. டெல்லி உட்பட பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தவர்கள், கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம், அந்த மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். 

மணிப்பூரை தொடர்ந்து, அரியானாவில் வன்முறை வெடியாட்டத்தை இந்துத்துவ அமைப்புகள் நடத்தின. இதில் ஒரு பள்ளிவாசல் இமாம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, கொளுத்தப்பட்டன. பல முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டன. உயிருக்கு பயந்து அரியானாவில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இப்படி, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கி, அதை தேர்தல் நேரத்தில் வாக்குகளாக பெற வேண்டும் என பாஜக முடிவு செய்து அதற்கான திட்டங்களை தற்போது அரங்கேற்றி வருகிறது. 

டெல்லி முஸ்லிம்கள்:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக மட்டுமல்ல, இரண்டாவது முறையாகவும் ஆட்சிக்கு வர முக்கிய காரணம், அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே ஒற்றுமையாக வழங்கியதுதான். வாக்குகள் பிரிந்து போகக் கூடாது என்பதில் டெல்லி முஸ்லிம்கள் மிகவும் கவனமாக செயல்பட்டதால், பாஜக அங்கு ஆட்சிக்கு வர முடியவில்லை. இதேபோன்று, மாநகராட்சி தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது என உறுதிப்பட கூறலாம். 

டெல்லி முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையை கவனித்த பஞ்சாப் மாநில பஞ்சாபிகள் மற்றும் முஸ்லிம்களும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு, ஆம் ஆத்மியை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்கள். ஆக வாக்குகள் பிரிந்து போகாமல் இருந்தால், பாஜகவை வீழ்த்துவது எளிது என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். 

கர்நாடகா முஸ்லிம்கள்:

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முக்கிய காரணம் முஸ்லிம்களின் ஒற்றுமை என்றே கூறலாம். பாஜக ஆட்சியில் அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்த கர்நாடக மாநில முஸ்லிம்கள், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தங்களது வாக்குகளை அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கர்நாடக முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தபோதும், பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையே சிறந்த வழி என அவர்கள் உணர்ந்துகொண்டு செயல்பட்டனர். 

எனவே, வழக்கமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தங்களது வாக்குகளை அளித்து வந்த கர்நாடக முஸ்லிம்கள், இந்த முறை, ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்குகளை அளித்தனர். கர்நாடக முஸ்லிம்களின் இந்த ஒற்றுமை மூலம்  வாக்குகள் பிரிந்து போகாமல் அனைத்தும் ஒரே கட்சிக்கு அதாவது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே விழுந்தது. இதன் காரணமாகதான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

தற்போது கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தலைவராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், முதலமைச்சர் சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பள்ளி கல்லூரி பாடங்களில் முந்தைய பாஜக அரசு புகுத்திய நச்சு விதைகள் நீக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் ஒற்றுமையால்தான் இதுபோன்ற ஒரு நல்ல சூழ்நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியும் புரிந்துகொண்டு, கடந்த பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நான்கு மாநில முஸ்லிம்கள்:

இந்தாண்டுஇறுதிக்குள் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் நாகலாந்து ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக தனது பழைய பாணியில் பணிகளை தொடங்கியுள்ளது.  இந்து-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க திட்டங்களை தீட்டி, அதற்கான செயல்கள் அரங்கேற்றி வருகின்றன. அதன் ஒருபகுதியாகதான், தற்போது அரியானாவில் இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் வெடித்தது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், ராஜஸ்தான், சட்டீஸ்ர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் முஸ்லிம்கள் தங்களது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். டெல்லி, கர்நாடகா முஸ்லிம்கள் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு, பாஜகவுக்கு எதிராக வலிமையாக உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்குகளை அளித்தார்களோ, அதுபோன்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்னானா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வலுவான கட்சியாக இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொண்டு, தங்களது வாக்குகள் பிரிந்து விடாமல் இருப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். கர்நாடக முஸ்லிம்கள் எப்படி மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு தங்களது வாக்குகளை அளிக்கவில்லையோ, அதுபோன்று, இந்த நான்கு மாநிலங்களில் ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சிகளுக்கு முஸ்லிம்கள் வாக்குகளை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவிற்கு படுதோல்வி கிடைக்கும். இல்லையெனில் வாக்குகள் பிரிந்து அதன்மூலம், பாஜக அரசியல் லாபம் பெற்றுவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. 

கவனத்துடன் செயல்பட வேண்டும்:

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்க நெருங்க, வெறுப்பு பேச்சுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இரு சமுதாய மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற செயல்களை பாசிச அமைப்புகள் திட்டமிட்டு செய்யும். எனவே முஸ்லிம்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெறுப்புக்கு வெறுப்பு என்ற ரீதியில் செயல்படக் கூடாது. பொறுமையாக, அமைதியாக செயல்பட்டு, தங்களது வாக்குரிமை மூலம் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். 

நாட்டில் தற்போது முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப கவனத்துடன் செயல்பட வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும். இந்த கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யாராக இருந்தாலும், அவருக்கு தங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். ஒருசில முஸ்லிம் அமைப்புகள் மூலம் இந்தியா கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதை முஸ்லிம்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், தங்களது வாக்குகள் பிரிந்துபோகும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழக முஸ்லிம்கள் போன்று, நாட்டின் அனைத்து மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களும், ஒற்றுமையாக செயல்பட்டு, தங்களது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, தேர்தலில் ஒரே கட்சிக்கு அளித்தால், நாட்டில் நல்லாட்சி மலரும் என்பது உறுதி. முஸ்லிம்களின் ஒற்றுமை வெறும் பேச்சளவில் மட்டும் இருந்துவிடாமல், செயல் அளவிலும் இனி இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தென்மாநில முஸ்லிம்களை போன்று, வட மாநில முஸ்லிம்களும் விழித்துக் கொண்டு,  தங்களது வாக்குகளை முறையாக, சரியாக  பயன்படுத்தி வேண்டிய காலம் வந்துவிட்டது. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படுவது, சமுதாயத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பலன் அளிக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: