Monday, August 7, 2023

அரியானா முஸ்லிம்கள்....!

பயம் காரணமாக காடுகளிலும் மலைகளிலும் இரவைக் கழிக்கும் அரியானா முஸ்லிம்கள்..!

அரியானா மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி நடந்த விஸ்வ இந்து பரிஷத் பேரணியின்போது, வன்முறை வெடித்து கலவரம் உருவானது.  இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. வன்முறை மற்றும் மோதலில் ஒரு பள்ளிவாசல் இமாம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாலும், முஸ்லிம்கள் மத்தியில் பீதியும், அச்சமும் இன்னும் நீங்கவில்லை. 

புல்டோசர் நடவடிக்கைக்கு தடை:

கலவரம் மற்றும் வன்முறையை தொடர்ந்து நூஹ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. இதுவரை 162 கட்டடங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் 519 கட்டடங்களும் இடிக்கப்பட்டன. அரியானா பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் முஸ்லிம் குடும்பங்கள் பெரும் பாதிப்பு அடைந்து வீதிக்கு வர வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், புல்டோசடர் நடவடிக்கைக்கு தடை விதித்தனர். இதன்மூலம் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

பீதி மற்றும் அச்சத்தில் முஸ்லிம்கள்:

அரியானாவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக நச்சு பேச்சுகளை பேசி வருகிறார்கள். முஸ்லிம்கள் யாரும் வணிக நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது என்றும் அப்படி பணிபுரியும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் பேரணி மூலம் எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் நூஹ் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். 

குர்கானில் இருந்து குடிபெயர்ந்த முஸ்லிம்கள், நகரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்த நிலை இன்னும் தொடர்கிறது. கடை வைத்திருக்கும் சிறு வணிக முஸ்லிம்கள், முகமூடி அணிந்தவர்களால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். மார்கெட்டில் உள்ள ஜமா மஸ்ஜித், மற்றும் முஸ்லிம் கடைகளை நிர்வாகம் பூட்டியுள்ளது. மசூதி முற்றிலுமாக மூடப்பட்டு காணப்படுகிறது. மேலும் இங்குள்ள பெரும்பாலான முஸ்லிம்கள்  இடம் பெயர்ந்துவிட்டனர். இதேபோன்று,  கோர்கா நகரத்தின் வளிமண்டலம் பயமும் பீதியும் நிறைந்ததாக உள்ளது. 

ஒருதலைபட்சமான நடவடிக்கை:

கலவரம் மற்றும் வன்முறை விவகாரத்தில் அரியானா காவல்துறை உண்மையாகவும் நீதியாகவும் சரியாகவும் நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைப்பட்சமான முறையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முஸ்லிம்கள் மட்டும்  கைது செய்யப்படுவதாக அங்குள்ளவர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய போக்குகளால்,  நூஹ் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையான சூழல் நிலவி வருகிறது. 

காடுகளிலும் மலைகளிலும் முஸ்லிம்கள்: 

அரியானா வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை ஜமியத் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து ஆறுதல் கூறி, நம்பிக்கையை உருவாக்கி வருகிறார்கள். எனினும்,  மசூதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம் வணிகங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கடைகள் மீதான தாக்குதல் நடைபெறுவதாகவும் தீ வைப்பு நிறுத்தப்படவில்லை என்றும் முஸ்லிம்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

அத்துடன், ஃபரிதாபாத், பாட்ஷாபூர் முஸ்லிம்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் முற்றிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. நூஹ் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. 

இங்குள்ள முஸ்லிம்கள் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு முற்றிலும் பயப்படுகிறார்கள்.மேவதி முஸ்லிம்கள் காடுகளிலும் மலைகளிலும் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கைது பயம் காரணமாக இந்த மழைக்காலத்தில் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்:

அரியானாவில் தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் அச்சத்தை போக்க ஒருதலைப்பட்ச நடவடிக்கையை அம்மாநில காவல்துறை உடனே நிறுத்த வேண்டும். வன்முறை மற்றும் கலவரத்தில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து கைது செய்யும் நடவடிக்கையை அரியானா போலீசார் நிறுத்த வேண்டும். தற்போது புல்டோசர் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தாலும், ஏற்கனவே இடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சீரமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். ஒரு சமுதாய மக்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற செயல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களிடையேயும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே, அரியானாவில் தற்போது ஏற்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனி வரும் நாட்களில் மக்கள் அமைதியுடன் வாழ வழி உருவாக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: