வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளி கிடைக்க என்ன செய்ய வேண்டும்…?
நவீன கால முக்கிய பிரச்சனைகளால்
உலகில் பலர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு சரியான நேரம் வரவில்லை
என்றும், வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற செல்வம் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலான மக்கள்
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். செல்வமும் சரியான நேரமும் வராததால், பலர் ஏங்கிக் கொண்டே
இருக்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இழந்து தங்களை தாங்களே சில நேரங்களில்
சபித்துக் கொள்கிறார்கள்.
அதேநேரத்தில், சிலர் குறைந்த
வருவாய் மற்றும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் நிம்மதியாக இருந்து
வருகிறார்கள். குடிசை வீட்டில் வாழும் ஏழை மகிழ்ச்சியாக வாழ்வதை நாம் காண்கிறோம். ஆனால்,
செல்வச் செழிப்பில் வாழும் பணக்காரர், வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் எப்போதும் பிரச்சினைகளில்
சிக்கிக் கொண்டே இருப்பதையும் நாம் அறிந்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில், அமைதி
மற்றும் மகிழ்ச்சியை நாம் எப்படி பெற முடியும் என்ற கேள்விக்கு, சரியான சிந்தனைகள்
மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைகளை உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம், மகிழ்ச்சியை
பெறலாம் என்பது ஆன்மிகச் சிந்தனையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
பரக்கத் எனும் அருட்கொடை:
இஸ்லாமியர்கள் இடையே பரக்கத்
எனும் சொல் பொதுவாக வழக்கத்தில் இருந்து வருகிறது. என்னுடைய செல்வத்தில் ஏக இறைவன்
பரக்கத் கொடுத்து இருக்கிறான் என பல முஸ்லிம்கள் சொல்வதை நாம் கேள்விப்படுகிறோம். யாருக்காவது
உதவி செய்தால், ஏக இறைவன் உங்கள் செல்வத்தில், வாழ்க்கையில் பரக்கத் தரட்டும் என உதவி
பெற்றவர்கள் வாழ்த்துவதையும் நாம் அறிந்திருக்கிறோம். சரி, பரக்கத் என்றால் என்ன? பொதுவாக
செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்களில் சிலர் நம்பிக்கைவுடன்
இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் அவர்களின் தேவைகள் நிறைவேறாமல்
போவதையும், வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வம் கிடைத்தாலும் அதிகமான தேவைகளை ஏக இறைவன்
நிறைவேற்றி விடுவதையும் நாம் வாழ்க்கையில் காண்கிறோம். இது பரக்கத் எனும் இறைமுக அருளாகும்.
ஏக இறைவன் நமக்கு வழங்கிய செல்வத்தில்,
நமது தேவைகள் நற்பலனை பெற்று திருப்தியான வாழ்வு வாழ்வதே என்பதுதான் ஒரு மிகப்பெரிய
அருட்கொடையாகும். இதேபோன்று, குறைந்த நேரத்தில் ஏராளமான பணிகளை எந்தவித சிரமமும் இல்லாமல்
சிலர் செய்து விடுகிறார்கள். இதுவும் ஏக இறைவனின் பரக்கத் எனும் அருட்கொடை என்றே கூறலாம்.
ஏக இறைவனுக்கு கீழ்ப்படிதல்:
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிகளிலும் பரக்கத் எனும் அருட்கொடை கிடைத்துக்
கொண்டே இருக்க வேண்டுமானால், ஏக இறைவனின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்,.
அதற்கு ஒரே வழி மற்றும் முதல் நிபந்தனை, ஏக இறைவனுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். எப்போதும்
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! செல்வத்தை பெருக்க தவறான பாதையில் சென்றாலோ அல்லது
நேரத்தை தவறாக பயன்படுத்தினாலே, துரதிர்ஷ்டம் என்பது உறுதி. பரக்கத் நிச்சயம் கிடைக்காது.
சில செல்வந்தர்கள், தங்கள் செல்வத்தை தர்மம், ஜகாத் அல்லது வேறு ஏதாவது மார்க்கப்
பணிகளுக்காக செலவழித்தால், செல்வம் குறையும்
என்று நினைப்பது பரிதாபமான சிந்தனையாகும். .இந்தச் சிந்தனை இஸ்லாத்திற்கு எதிரானது
என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த சமயத்தில் ஒரு நபி மொழியை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
"மக்கள் காலையில் எழுந்ததும் வானத்திலிருந்து இரண்டு மலக்குகள் இறங்காமல்
ஒரு நாளும் கடக்கவில்லை. அவர்களில் ஒருவர், 'யா அல்லாஹ், செலவு செய்பவருக்கு வெகுமதி
அளிக்கவும்' என்று கூறுகிறார், மற்றொருவர், 'ஓ! அல்லாஹ்! கஞ்சனின் செல்வத்தை அழித்துவிடுங்கள்.''
நபிகள் நாயகத்தின் இந்த பொன்மொழியை நாம் எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு,
ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன், நமது செல்வத்தை ஏழை, எளிய மற்றும் உறவினர்களுக்காக
செலவழிக்க முன்வர வேண்டும்.
இதன்மூலம் நமது செல்வத்தில் பரக்கத் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். செல்வம்
ஈட்டுவதில் ஒருவர், தனது கடின உழைப்புடன், ஏக இறைவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதே,
இஸ்லாமிய நெறிமுறை சொல்லித் தரும் பாடமாகும்.
.அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் அல்லாஹ்வின் மீது
நன்மையுடனும் முழு நம்பிக்கை வைத்தால், பறவைகளைப் போல உங்களுக்கு உணவு வழங்கப்படும்.
பறவைகள் காலையில் வெறும் வயிற்றில் சென்று மாலையில் திருப்தியுடன் திரும்புகின்றன” இந்த நபி மொழியை தங்களது வாழ்க்கையில்
பலர் உணர்ந்து இருப்பதை நாம் தொடர்ந்து அறிந்து வருகிறாம்.
நேரம் குறித்த தவறான கருத்து:
வாழ்க்கையில் சிலர் தங்களுக்கு
நேரம் சரியில்லை என கூறி, நேரத்தின் அருமையை சரியாக உணராமல் இருந்து வருகிறார்கள். நேரத்தை தவறாகப் பயன்படுத்தியதன்
விளைவுதான், நேரம் சரியில்லை என்பதற்கு முக்கிய காரணமாகும். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில், மணிநேர செயல்முறையை
நிமிடங்களில் முடிக்கும்போது, நேரமின்மை
மற்றும் பற்றாக்குறை குறித்து யாரும் குறை கூறக்கூடாது. மேலும், இன்றைய மக்கள், முந்தையவர்களை
விட அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. குறுகிய காலத்தில்
பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் கடந்த காலங்களில் பலர் இருந்துள்ளனர்.
இஸ்லாமிய மார்க்க மேதைகள் பலர், தங்களது நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி,
கல்வி, ஆன்மீகம், அரசியல் என உலகில் பல சாதனைகளை செய்து இருப்பதை நாம் அறிந்து வருகிறோம்.
எனவே, நாம் நேரத்தை மதிப்பிட்டு, அந்த நேரத்தில்
திட்டமிடப்பட்ட வேலையைச் செய்ய வேண்டும். உதாரணமாக, நாம் இரவில் நேரத்தை வீணாக்காமல்
சீக்கிரம் தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து நம் வேலையைச் செய்ய வேண்டும். இதுவும்
இஸ்லாமிய நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
மகிழ்ச்சி ஒளி கிடைக்க:
நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளி கிடைக்க, ஏக இறைவனின் பரக்கத் கிடைக்க, நமது செயல்பாடுகளை
முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்டு, ஏக இறைவனின் வழிக்காட்டுதல்களின் படி வாழ்க்கையை
வாழ வேண்டும். அதற்கு முதலில் மகிழ்ச்சியற்ற காரணங்களில் இருந்து நாம் விலகி இருக்க
வேண்டும். எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பதை நிறுத்த வேண்டும். பிறர் மீது குறைகளை
கூறிக் கொண்டு, நேரம் சரியில்லை, செல்வம் கிடைக்கவில்லை என சொல்வதை நிறுத்திவிட்டு,
ஏக இறைவன் மீது முழு நம்பிக்கையுடன், வாழ்க்கையில் கிடைக்கும் வசதிகளையும் வாய்ப்புகளையும்
சரியாக பயன்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம், பரக்கத் எனும் அருட்கொடையை கொண்டு,
வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், வாழ்க்கை
நிச்சயம், அமைதியாகவும், மகிழ்ச்சியாகும் அமையும். குடும்பத்தில் ஆனந்தம் ஏற்பட்டு,
அந்த ஆனந்தம் மூலம், முழு திருப்தி கிடைக்கும்.
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment