சிதறிக் கிடக்கும் தமிழக இஸ்லாமிய அமைப்புகள்.....!
"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."
மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும் அறிவுரை இது...
ஆனால், இந்த அறிவுரையை இஸ்லாமிய சமுதாயம் பின்பற்றுகிறதா...கடைப்பிடிக்கிறதா..
குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் இடையே ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்றே வருகிறது...
தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு...
நாட்டிலேயே அதிக இஸ்லாமிய அமைப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது எனலாம்...
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து ஆராய்ந்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது...
மாநிலத்தில் ஏகப்பட்ட இஸ்லாமிய கட்சிகள்...மேலும் அடிக்கடி புதிது புதிதாக முளைக்கும் புதிய அமைப்புகள்....
75 ஆண்டுகள் பராம்பரியம் உள்ள கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்...
தற்போது அந்த கட்சிக்கு பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்...
அது பல துண்டுகளாக பிரிந்து கிடக்கிறது...
நாங்கள்தான் உண்மையான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்...
இதேபோன்று, இந்திய தேசிய லீக் கட்சி, பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது...
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
பின்னர் மனித நேய மக்கள் கட்சி,
அதில் இருந்து சிலர் பிரிந்து புதிய கட்சி என தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து சிலர் பிரிந்து
இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...
தமிழ்மாநில முஸ்லிம் லீக்...
இப்படி பல்வேறு பெயர்களில் 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன...
எல்லோரும் நாங்கள்தான் இஸ்லாமியர்களின் நலன்களுக்காக, உரிமைகளுக்காக உண்மையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்...
போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என சொல்கிறார்கள்...
எங்கள் அமைப்புதான், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்பு என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளின் வாதம்...
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால், மற்றொரு அமைப்பு, நீங்கள் நடத்தும் போராட்டத்தைவிட நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்திக் காட்டுகிறோம் என முழக்கமிடுகிறார்கள்...
நாங்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே குலுங்கியது என பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பலர் பேட்டி கொடுக்கிறார்கள்...
இப்படி, பல்வேறு போராட்டங்களை தனித்தனியாகவே நடத்தி, தங்களது பலத்தை ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன...
மது கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களும் தனித்தனியாகதான் நடக்கின்றன...
ஒரே பகுதியில் வசித்தாலும், மதுக்கடையை அகற்ற ஒருவர் நடத்தும் போராட்டத்தில் மற்றொருவர் பங்கேற்பதில்லை...
அதனை கவுரவக் குறைவு என கருதுகிறார்கள்...
பொது பிரச்சினையில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க ஏனோ இஸ்லாமிய அமைப்புகள் இடையே மனம் இல்லை...
இதற்கு முக்கிய காரணம் ஈகோ பிரச்சினைதான்...
ஒருசில விஷங்களில் ஒன்றுபட்டாலும், அதிலும் கூட ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டும் போக்கே அதிகம் இருந்து வருகிறது...
ஒரு இஸ்லாமிய கட்சி, திமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது என்றால், மற்றொரு இஸ்லாமிய கட்சி, அதிமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது.
அரசியலில் மட்டும் இந்த நிலை என்று இல்லை...
அழைப்பு பணி செய்வதிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது...
நாங்கள்தான் உண்மையாகவே, அழைப்பு பணியை செய்து வருகிறோம்...
இஸ்லாம் குறித்து சகோதர சமுதாய மக்களிடம் எங்கள் அமைப்புதான் சரியான தகவல்களை தெரிவிக்கிறது என ஒரு அமைப்பு கூறினால், இல்லை இல்லை, நாங்கள்தான் உண்மையாக உழைத்து வருகிறோம் என்கிறது மற்றொரு இஸ்லாமிய அமைப்பு...
தேர்தல் நேரங்களில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அலையும் இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கைதான் எத்தனை...
கூட்டணி முடிவாகிவிட்டதும், அந்த கூட்டணி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்ட மேடைகளை நாம் கூர்ந்து கவனித்து பார்த்ததால், அதில் எத்தனை இஸ்லாமிய கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன என்பதை கவனிக்கலாம்...
ஏன் இந்த நிலை....
இஸ்லாமிய அமைப்புகள் ஒற்றுமையாக செயல்படாமல் இருப்பதற்கு யார் காரணம்...
இப்படி சிதறிக் கிடக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு எந்த கட்சிதான் அச்சம் கொள்ளும்...
இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லாததால், தேர்தல் காலங்களில், சிறிய ரொட்டி துண்டை வீசுவதைப் போன்று ஒரு சீட் மட்டும் கொடுத்துவிட்டு, சிறுபான்மை மக்களுக்கு மிகப் பெரிய அளவுக்கு நீதி செய்துவிட்டதாக முக்கிய கட்சிகள் கூறி விடுகின்றன...
சரி,
தமிழகத்தில் இருக்கும் பல்வேறு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே நல்ல கருத்து இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்..
அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களது அமைப்புகளை புகழ்ந்து பேசிக் கொள்ளலாம்...
ஆனால், முஸ்லிம்களிடையே ஒருவித வெறுப்புணர்வு இருப்பதை, இந்த அமைப்புகள் ஏனோ இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை....
ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, செயல்பட இனியாவது இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும்...
உரிமைகளை பெற,
உரிமைகளை மீட்க
ஒற்றுமை முக்கியம் என்பதை இஸ்லாமிய அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்...
அப்போதுதான், ஆளும் வர்க்கம் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்...
வளர்ந்து வரும் இளம் இஸ்லாமிய சமுதாயம் நல்ல வழியை நோக்கி செல்ல, இஸ்லாமிய அமைப்புகள்தான் வழி காட்ட வேண்டும்....
இல்லையென்றால், எதிர்காலத்தில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்...
கடைசியாக,
மீண்டும் ஒருமுறை இஸ்லாத்தின் அறிவுரையை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைத்து இஸ்லாமியர்களும் தங்களது உள்ளத்தில் அழமாக பதிவு செய்ய முயற்சி செய்வோம்......
"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."
இந்த அழகிய அறிவுரையை மனதில் உள்வாங்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடைப்பிடித்து அனைவரும் நல்ல வெற்றியை சுவைப்போம்....
என்ன.....சரிதானே....!
No comments:
Post a Comment