Tuesday, November 14, 2023

மருத்துவ ஆய்வில் எச்சரிக்கை....!

 

நீண்ட நேரம் பணி செய்வது ஆபத்து – மருத்துவ ஆய்வில் எச்சரிக்கை

வாழ்க்கையில் நல்ல வசதியோடு வாழ வேண்டும், உலகில் கிடைக்கும் அனைத்தையும் பெற வேண்டும்  என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. இந்த ஆசை காரணமாகவே தான் எப்போதும் உழைப்பு, உழைப்பு என சிலர் பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், அவர்களின் வருமானம் அதிகரிப்பது உண்மையே. ஆனால், தொடர் உழைப்பு மற்றும் பணிச்சுமை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும் என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஆசையே அழிவுக்கு காரணம் என்ற பொன்மொழியை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதிக ஆசை, பேராசை பெரும் துன்பங்களை நீண்ட வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சரி, நீண்ட நேரம் பணியாற்றினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அதுதொடர்பாக மருத்துவ ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதையும் கொஞ்சம் அறிந்துகொள்வோம்.

நீரிழிவு, பக்கவாத ஆபத்து:

தற்போதையை வேகமான உலகில் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து பணியாற்றும் போக்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது அதிகரித்தும் வருகிறது.  சரியான தூக்கம் இல்லாமல் நீண்ட நேரம் கண் விழிப்பது ஆபத்து என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் ஷிப்டுகளில் நீண்ட நேரம் வேலை செய்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இது இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்துடன் உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் ஆகிய பழக்கங்கள், உடல்நலத்தை வெகுவாக பாதிக்க செய்கிறது. இதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

ஆய்வில் அதிர்ச்சித் தகவல்:


இந்தியாவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.கே.கார்க் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது  கருத்துப்படி, இளைஞர்களில் 45 வயதிற்குட்பட்டவர்களின் மத்தியில் பக்கவாத நோய்ப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன என தெரிய வந்துள்ளது. இதற்கு மேலும் ஒரு பொதுவான காரணம்  உயர் இரத்த அழுத்தம் என்றும் அறியப்பட்டுள்ளது.

பக்கவாத நோய்க்கு முக்கிய காரணங்கள் குறித்து கருத்து கூறியுள்ள பேராசிரியர் ஆர்.கே.கார்க், “40 முதல் 50 வயதிற்குள், தொழில்முறை துறைகளுடன் தொடர்புடையவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற கடுமையாக முயற்சி செய்கிறார்கள். என குறிப்பிட்டுள்ளார். இதனால், அலுவலகத்தில் அதிக மனஅழுத்தம், வீட்டில் சரியான நேரத்தில் உணவு உண்பது இல்லை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆரம்பக் கால எச்சரிக்கைகள்:

பேராசிரியர் கார்க்கின் கூற்றுப்படி, பக்கவாதத்திற்கு சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன அவை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த அறிகுறிகள் பணிச்சுமை மற்றும் தற்காலிகப் பிரச்சினை காரணமாக பலர் புறக்கணிக்கிறார்கள், ஆனால் அவை உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

"பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளில், முகம், கை அல்லது கால், குறிப்பாக உடலின் ஒரு பக்கத்தில் திடீரென உணர்திறன் இழப்பு அல்லது பலவீனம் ஆகியவை அடங்கும்." இது தவிர, திடீர் குழப்பம், பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம், திடீரென ஒன்று அல்லது இரண்டு கண்கள் பார்ப்பதில் சிரமம், திடீரென நடக்க சிரமம், தலைசுற்றல், சமநிலை இழப்பு, காரணம் தெரியாமல் திடீர் கடுமையான தலைவலி போன்றவை பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும் என அவர் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் கருத்து:


அலுவலகத்திற்குச் செல்பவர்கள் மற்றும் காலக்கெடுவில் (ஷிப்ட் முறையில்) பணிபுரிபவர்கள் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவானதாகி வருகிறது" என்று கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் கவுசர் உஸ்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோன்று, எஸ்சி திரிவேதி மெமோரியல் டிரஸ்ட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் அமிதா சுக்லா, பெண்கள் குறித்து கருத்து கூறுகையில்,, “கர்ப்பிணிகளும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது, ​​மருத்துவர்கள் 'மூளை பக்கவாதம்' என்று அழைக்கும் ஒரு பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தில் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' இது மிகவும் பொதுவானது. தமனியில் இரத்தம் தேங்குவதால் இரத்த ஓட்டம் தடைபடுவதே இதற்குக் காரணம். இதில் மூளையின் எந்தப் பகுதிக்கும் ரத்தம் சென்றடையாமல் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் மற்றொரு வகை 'ஹெமரேஜிக் ஸ்ட்ரோக்'. இது ஒரு சிதைந்த நரம்பினால் ஏற்படுகிறது. இதனால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் நரம்புகள் பலவீனமடைவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. மூன்றாவது வகை 'டிரான்சியன்ட் இஸ்கிமிக் அட்டாக்', 'மினி ஸ்ட்ரோக்' என்றும் அழைக்கப்படுகிறது. இது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தற்காலிகமாக தடைபடுவதால் ஏற்படுகிறது.

கவனம் மிகமிக அவசியம்:

ஆரோக்கியமான வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கை எதுவும் இருக்க முடியாது. எனவே, பொருள் ஈட்டுவதில் மட்டுமே, நாம் மூழ்கிவிடக் கூடாது. அத்துடன், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும். தேவையான அளவுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகிக் கொள்ள வேண்டும். அத்துடன் நீண்ட நேரம் பணி செய்வதை விட்டுவிட வேண்டும். பணிகளுக்கு இடையே நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடல்களை அடிக்கடி நிகழ்த்த வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு எப்போது மகிழ்ச்சியான சிந்தனைகளுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பக்கவாதம் உள்ளிட்ட எந்த நோய்களும் ஏற்படாமல் நம்மை நாம் பாதுகாக்க முடியும்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: