ஸஃபர் - மூடநம்பிக்கைகள்...!
ஜூம்மா தொழுகைக்காக நான் வழக்கமாக செல்லும் 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவல்லிக்கேணி மஸ்ஜித்-இ-சைய்யதியாவிற்கு இந்த வாரமும் சென்றிருந்தேன்.
பள்ளிவாசலில் மவுலானா மவுலவி இலக்கண உர்து மொழியில் பயான்(பிரசங்கம்) செய்யாமல், மிக மிக எளிமையான உர்துவில் அனைவருக்கும் புரியும் வகையில் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.
இஸ்லாமிய மாதங்களில் இரண்டாம் மாதமான ஸஃபர் மாதம் குறித்தும், இந்த மாதத்தில் இஸ்லாமியர்களில் பலர் மூடநம்பிக்கையுடன் செயல்படுவது குறித்தும் மிக அழகாக மவுலவி சொல்லியது மனதை கவர்ந்தது.
ஸஃபர் மாதத்தில் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களை செய்வதில்லை.
ஸஃபர் மாதத்தில் குழந்தை பிறந்து விட்டால் அபசகுனமாக கருதுவது.
வெளியூர் பயணங்களை தள்ளிப் போடுவது.
இப்படி பல இஸலாமியர்கள் ஸஃபர் மாதத்தை ஒரு பீடை மாதமாக கருதி செயல்படுவது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை என்றார் மவுலவி.
இஸ்லாத்தில் அனைத்து மாதங்களும் நாட்களும் நல்ல மாதங்கள்தான், நல்ல நாட்கள்தான்.
ஏக இறைவன் அனைத்து நாட்களையும் நல்ல நாட்களாகதான் ஆரம்பித்து வைக்கிறான்.
மனிதனின் எண்ணங்களில் உருவாகும் கோளாறுகள்தான் நாட்களை கோணலாக்கி அவனது வாழ்க்கையில் அமைதியை பறித்து விடுகிறது.
எனவே ஸஃபர் மாதம் குறித்த தப்பான எண்ணங்களை மனதில் இருந்து அகற்றி விட்டு மூடநம்பிக்கையை கைவிட்டு இஸ்லாமியர்கள் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து செயல்பாட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் அமைதியும் வந்து சேரும்.
மூடநம்பிக்கையை ஒழிக்க வந்த இஸ்லாத்தில் சில மூடநம்பிக்கையுடன் செயல்படுவது எவ்வளவு பெரிய அநியாயம் என்றும் மவுலவி கேள்வி எழுப்பினார்.
இப்படி மவுலவி பயான் செய்தது உண்மையிலேயே அனைவரையும் மிகவும் கவர்ந்தது எனலாம்.
இதுபோன்ற நல்ல கருத்துகள் ஜூம்மா உரையில் இடம் பெறுவது மிகவும் அவசியம்.
இதன்மூலம் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சில இஸ்லாமியர்கள் ஓரளவுக்காவது திருந்தக்கூடும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
(குறிப்பு - இது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி எழுதிய பதிவு.)
No comments:
Post a Comment