Saturday, November 11, 2023

முஸ்லிம்களின் ஒற்றுமை.....!

ஐந்து மாநில தேர்தல்களும்....! முஸ்லிம்களின் ஒற்றுமையும்....!!


வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதிக்காக நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்ர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது.  இதில் மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 7ஆம் தேதி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதேபோன்று, சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக எந்தவித வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்துமுடிந்தது. இதைத் தொடர்ந்து வரும் 17, 25, மற்றும் 30 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? அவர்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது? தேர்தலில் தங்களது வாக்குகளை கடந்த முறை போன்று, பல்வேறு கட்சிகளுக்கு பிரித்து வாக்களித்து மீண்டும் நெருக்கடியை சந்திக்க உள்ளார்களா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோன்ற வினா, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. 

சரி, ஐந்து மாநிலங்களில் உள்ள முஸ்லிகளின் எண்ணிக்கை குறித்தும்,  அவர்களின் அரசியல் நிலைப்பாடு, நாட்டில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகள் ஆகியவை கருத்தில் கொண்டு, முஸ்லிம்கள் எடுக்க இருக்கும் முடிவுகள் குறித்தும் சிறிது பார்வையிடுவோம்.

மிசோரம் முஸ்லிம்கள்:

முதல்கட்டமாக தேர்தல் முடிந்துள்ள மிசோரம் மாநிலத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள் ஆவார்கள். இங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை, 14 ஆயிரத்து 830-ஆக உள்ளது. சிறிய மாநிலம் என்பதால், மிசோரமில், மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை, மிசோரம் மாநில மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இங்குள்ள பெரும்பான்மை மக்களான கிறிஸ்துவர்கள், மணிப்பூர் கலவரம், வன்முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே, இந்த தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, மிசோரம் முஸ்லிம்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி இருப்பார்கள் என நம்பப்படுகிறது. 

சட்டீஸ்ர்கள் முஸ்லிம்கள்:

சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. அம்மாநில மக்கள் தொகையில் இது 2 புள்ளி பூஜ்யம் இரண்டு சதவீதமாகும். இந்த மாநிலத்தில் 20 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுவிட்டது. இரண்டாவது கட்டமாக வரும் 17ஆம் தேதி 70 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தற்போது உள்ள காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால், காங்கிரஸ் அரசு மீது முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவே, இந்த முறையும், காங்கிரஸ் ஆட்சி வர முஸ்லிம்கள் தங்களது வாக்குளை அளிப்பார்கள் என நம்பப்படுகிறது. இங்குள்ள மற்ற சிறுபான்மையின மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிட்த்தக்கது. 

மத்தியப் பிரதேச முஸ்லிம்கள்:


உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை ஒட்டியுள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை  சுமார் 7 கோடியே 26 லட்சமாகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 48 லட்சமாக இருந்து வருகிறது. இது சதவீத அளவில் 7-ஆக உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில், முஸ்லிம்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அத்துடன், எப்போதும் முஸ்லிம்களை ஒருவித பதற்றத்துடன் வைக்கவே அங்குள்ள பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள் முயற்சி செய்து வந்தன. இதனால், முஸ்லிம்களின் அமைதி சீர்குலைந்தது. தற்போதைய தேர்தலில் அதற்கு முடிவு கட்ட இங்குள்ள முஸ்லிம் சமுதாயம் தீர்மானம் செய்துவிட்டதாக தெரிகிறது. அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

ராஜஸ்தான் முஸ்லிம்கள்:


வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில், சுமார் 6 கோடியே 82 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் ஆவார். ராஜஸ்தான் மக்கள் தொகையில் இது 9 புள்ளி பூஜ்யம் ஏழு சதவீதமாகும். ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பாசிச அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், மிகப்பெரிய அளவுக்கு வன்முறைகள், கலவரங்கள் ஆகியவை நடக்க முதலமைச்சர் அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. வன்முறையாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள். இது ராஜஸ்தான் முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த முறை அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தெலங்கானா முஸ்லிம்கள்:

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவில், வரும் 30ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இங்கு டி.ஆர்.எஸ்.கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பல சலுகைகளும் வழங்கப்பட்டன. இதனால், டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி மீது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு கோபம் இல்லை என கூறலாம். இங்குள்ள மொத்த மக்கள் தொகை 3 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 45 லட்சமாக உள்ளது. இது தெலங்கானா மக்கள் தொகையில் 12 புள்ளி ஏழு ஐந்து சதவீதமாகும். 

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி செய்துவரும் புதிய தேர்தல் பிரச்சாரம் அங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இதேபோன்று, முஸ்லிம் வாக்காளர்களின் கவனமும் தற்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இந்த முறை முஸ்லிம்கள், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

வழிக்காட்டிய கர்நாடகா முஸ்லிம்கள்:

அரசியல் விளையாட்டில் செமி ஃபைனலாக கருத்தப்படும் இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், முஸ்லிம் வாக்காளர்களுக்கு நல்ல வழிக்காட்டிகளாக கர்நாடகா முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். அங்கு கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களது வாக்குகள் பிரிந்து போய் விடக் கூடாது. அதன்மூலம் பாசிச அமைப்புகள் மீண்டும் தலை தூக்கிவிடக் கூடாது. தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண வேண்டும். முடிவு கட்ட வேண்டும் என்று உறுதியாக எண்ணி, அதனை கர்நாடக மாநில முஸ்லிம்கள் தங்களது செயல்கள் மூலம், தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதன்மூலம் கடந்த பாஜக ஆட்சியில் அவர்கள் அனுபவித்து வந்த பல்வேறு நெருக்கடிகள், துன்பங்களுக்கு தற்போது முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தீர்வு காணப்பட்டுள்ளது. இது மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம். எனவே, இந்த முறையை தங்களது வாக்குகள் சிதறிவிட இந்த ஐந்து மாநில முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என உறுதியாக நம்பலாம். ஒற்றுமை எனும் கயிற்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, இந்திய முஸ்லிம்கள் பாசிச அமைப்புகளின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. அதனை  அரையிறுதிப் போட்டியாக கருதப்படும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமை பலத்தின் மூலம் நிரூபிப்பார்கள் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: