உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும்..!
பாசிச
அரசியலும்..!!
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 13-வது ஐஐசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி திருவிழா, இந்தியாவில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடர், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியுடன் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி மோதியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இப்படி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடர், பின்னர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட அணிகள் கலந்துகொண்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நல்ல விருந்தை அளித்தனர். இதனால், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளை நேரில் காண, பல்வேறு நகரங்களில் போட்டி நடைபெற்ற விளையாட்டு மைதானங்களில் குவிந்தனர். அத்துடன், தொலைக்காட்சிகளிலும் கோடிக்கணக்கான மக்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர். இதனால் 45 நாட்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.
தொடக்கம் முதலே இந்தியா அசத்தல்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் திறமையான வீரர்களை கொண்ட இந்திய அணி தொடக்கம் முதலே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, லீக் போட்டிகள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்தது. இதன்மூலம் அரையுறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, அந்த போட்டியிலும், வலுவான நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இப்படி, தொடக்கத்தில் இருந்து, அரையுறுதிப் போட்டி வரை இந்திய அணி 10 போட்டிகளில் நல்ல திறமையை வெளிப்படுத்தி, இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகக் கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி வெற்றிகளை குவித்துக் கொண்டே வந்தது. இதனால், இந்த முறை உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் அணியே கைப்பற்றும் என்ற நம்பிக்கை இந்தியர்கள் அனைவரிடமும் ஏற்பட்டது.
முஹம்மது ஷமி அபாரம்:
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இடம் பிடிப்பது எவ்வளவு சிரமமானது என்பதை நாம் அனைவரும் நன்கு உணர்ந்து இருக்கிறோம். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும், இந்திய அணியில் தங்களது திறமைகள் மூலம் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் இடம் பிடித்தனர். அவர்கள், முஹம்மது ஷமி, மற்றும் முஹம்மது சிராஜ் ஆகிய இரண்டு பேர் ஆவார்கள். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது ஷமி, அணியில் இடம் பிடித்தாலும் சக வீரர்களால் அவருக்கு ஊக்கமும், ஆதரவும் அளிக்கப்படவில்லை. விராட் கோலி மட்டுமே, முஹம்மது ஷமிக்கு ஆதரவாக இருந்தார்.
நடந்த முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இந்திய அணியில் இடம்பெற்ற முஹம்மது ஷமிக்கு, ஆரம்ப போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டார். அல்லது ஒதுக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முஹம்மது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் களம் இறங்கிய ஷமி, 5 விக்கேட்டுகளை சாய்த்து, 54 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதேபோன்று, அக்டோர் 29ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த மற்றொரு போட்டியில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுக்களை ஷமி பறித்து, இந்திய ரசிகர்களை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அத்துடன் அவரது வேகம் நிற்கவில்லை. நவம்பர் 2ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் முஹம்மது ஷமி, அதிரடியாக பந்துவீசி, 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, மீண்டும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் மும்பையில் நவம்பர் 15ஆம் தேதி நடந்த அரையுறுதிப் போட்டியில், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள், உள் அரசியல் விளையாட்டுகள் ஆகிய அனைத்தையும் மறந்துவிட்டு, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கட்டாயம் தகுதி பெற்றே தீர வேண்டும் என்ற துடிப்புடன் அந்த ஒரே இலட்சியத்துடன் பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அரையுறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஷமியின் அதிரடி ஆட்டம், இந்திய அணியை இறுதிப் போட்டிக்குள் நுழைய வைத்தது. நடந்த முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் முஹம்மது ஷமி, முதலிடம் பிடித்தார்.
இதேபோன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு முஸ்லிம் வீரர் முஹம்மது சிராஜ், இந்திய அணியில் இடம்பிடித்து, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
விளையாட்டில் பாசிச அரசியல்:
மிகச் சிறப்பாக நடந்த இந்த உலகக் கோப்பை போட்டி தொடரில், இந்துத்துவா அமைப்புகள் வேண்டும் என்றே அரசியலை புகுத்தியது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வேதனை அடையச் செய்தது. கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆனால், விளையாட்டு அரங்கத்திற்குள் இருந்த இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ரசிகர்கள், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதன்மூலம், கிரிக்கெட் விளையாட்டில் அவர்கள் மத அரசியலை புகுத்தினர். இந்த உண்மையான கிரிக்கெட் பிரியர்களுக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் மிகவும் வேதனை அளித்தது. அகமதாபாத் ரசிகர்கள் செய்த இந்த செயலுக்கு கண்டனங்களும் எழுந்தன. ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்தை எழுப்பி, நாட்டிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திய அவர்களின் செயலை நாடு ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது. இதேபோன்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியின்போதும், ஜெய்ஸ்ரீராம் முழக்கங்கள் எழுப்பட்டன. இது எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை அந்த ரசிகர்கள் கொஞ்சம் கூட உணர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால், கிரிக்கெட்டில் இந்துத்துவா அரசியலை செய்யவே அவர்கள் விரும்பினார்கள்.
தமிழ்நாடு ரசிகர்கள்:
அதேநேரத்தில் தென்னிந்திய ரசிகர்களின் பெருந்தன்மையை நாம் பாராட்டியே தீர வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் நல்ல பக்குவம் தென்னிந்திய ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. குறிப்பாக, தமிழ்நாடு ரசிகர்களின் மனநிலை, அது எந்த அணியாக இருந்தாலும் சரி, திறமையான விளையாட்டை ரசிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து வருகிறது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியை காணச் சென்ற ரசிகர்கள், இரு நாட்டு அணியையும், அவர்களின் திறமையையும் ஊக்கப்படுத்தும் வகையில், ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தினார்கள். இதுகுறித்து கருத்து கூறிய சென்னை கிரிக்கெட் ரசிகர்கள், நாங்கள் விளையாட்டை நல்ல விளையாட்டாக மட்டுமே பார்க்கிறோம். ரசிக்கிறோம். அது எந்த நாட்டு அணியாக இருந்தாலும் சரி, திறமையான அணியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆர்வம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அத்துடன், அகமதாபாத் ரசிகர்கள் செய்த ஜெய்ஸ்ரீராம் முழக்கத்திற்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இறுதிப்போட்டியில் திட்டம் அம்பேல்:
இந்த முறை கோப்பை இந்தியாவிற்கு தான் என்பதில் உறுதியாக இந்திய அணி வீரர்கள் மட்டுமல்ல, 140 கோடி மக்களும் ஆர்வத்துடன், ஆவலுடன் காத்து இருந்தனர். இதனால், அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் போட்டியை காண அரங்கத்திற்கு வந்து இருந்தார்கள். ஆனால், இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, கோப்பையை பறிக் கொடுத்தது. ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத. இந்திய அணியின் தோல்வி 140 கோடி இந்திய மக்களையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியது.
அதேநேரத்தில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றால் அதன்மூலம், நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் ஊர்வலங்கள் நடத்தலாம் என திட்டம் போட்ட பாசிச அமைப்புகளின் கனவுகள் தவிடுபொடியானது. இந்திய அணியின் வெற்றியை இந்துத்துவாவின் வெற்றி என கொண்டாடி, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் மிகப்பெரிய அரசியல் லாபம் பெற வலதுசாரி அமைப்புகள் திட்டம் போட்டன. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்திய அணியின் தோல்வி அவர்களின் ஆசையில் மண்ணை போட்டு விட்டது.
விளையாட்டில் வேண்டாம் அரசியல்:
கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து, டென்னிஸ் என எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, அதில் நாம் அரசியலை ஒருபோதும் நுழைக்கவே கூடாது. வீரர்களின் திறமையால் கிடைக்கும் கோப்பைகளையும் பதக்கங்களையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது. ஆனால் அண்மைக் காலமாக, இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் பதக்கங்கள் தங்களால் தான் கிடைக்கிறது என்ற ஒரு வினோத மனப்பான்மையில் ஒருசிலர் இருந்து வருகிறார்கள். இதனால் வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்படும் மன உலைச்சல், மன இறுக்கம், பதற்றம், ஆகியவை குறித்து அவர்களை கவலைப்படுவதே இல்லை. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. ஆனால், எதோ மிகப்பெரிய போருக்கு செல்வதை போன்ற ஒரு உணர்வை பாசிச அமைப்புகள் ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியாக இருந்தால், சொல்லவே வேண்டாம். ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு, அவர்களுக்கு அதிகளவு பதற்றத்தை ரசிகர்கள் ஏற்படுத்தியதே முக்கிய காரணம் என உண்மையான விளையாட்டு ஆர்வலர்கள் தற்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். எனவே, இனி வரும் நாட்களில் நாம் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளையும், அரசியல் கலக்காமல், நல்ல விளையாட்டு மனப்பான்மையுடன் பார்த்து ரசிப்போம். அதன்மூலம் இந்தியாவிற்கு எப்போதும் பெருமை சேர்ப்போம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment