Tuesday, November 14, 2023

வட்டியும்.....பாதிப்புகளும்....!

வட்டியும் அதன் கொடூர பாதிப்புகளும்....!


உலகம் முழுவதும் தற்போது வட்டியை அடிப்படையாக கொண்ட பொருளாதார நடைமுறைகள் தான் இருந்து வருகின்றன. இந்த வட்டியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தில், நன்மைகளை விட பாதிப்புகளே அதிகம் என்பதை ஏனோ பொருளாதார நிபுணர்கள் உணர்ந்து கொள்வதில்லை. வட்டிக்கு மாற்றாக எடுக்கப்பட வேண்டிய, பொருளாதார நிலைகள் குறித்து உலகம் இன்னும் சிந்திக்கவில்லை என்றே தெரிகிறது. 

இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டியை மட்டும் குறிக்கோளாக கொண்டு, தங்களது வணிகத்தை நடத்தி வருகின்றன. இதன்மூலம் அந்த நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு எதுவும் எற்படாமல், நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போகும் வருவாய் காரணமாக வட்டியை  மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அனைத்து நிதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இப்படி செயல்பட்டு வரும் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். வட்டியால் பலரது வாழ்க்கை ஒடிந்து போய்விட்டதை நாம் அன்றாடம் கேள்விப்பட்டு வருகிறோம். அதிக வட்டிக் கொடுமையால், பல குடும்பங்கள் நடுத்தெருக்கு வந்த செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்துக் கொண்டே இருக்கின்றன. 

 வட்டியால் பாதிக்கப்பட்ட சகோதரர் :

இது அண்மையில் நடந்த ஒரு சின்ன சம்பவம். அதன்மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் வட்டி எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ளலாம். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடிக்கடி சந்திக்கும் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

என்ன சார் ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலே என நான் கேட்டதுதான் தாமதம், அந்த நண்பர் மிகவும் வேதனையுடன் தம்முடைய தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததால் சொந்த ஊருக்கு சென்று விட்டு இப்போதுதான் சென்னை திரும்பி வந்ததாக கூறினார்.

எனக்கு மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது. நண்பருக்கு ஆறுதல் கூறி எல்லாம் ஏக இறைவனின் நாட்டம் என்றேன். உங்களுக்கு இறைவன் கருணை புரிவான் என்று ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினேன். என்னுடைய வார்த்தைகள் மூலம் நண்பருக்கு சிறிது ஆறுதல் ஏற்பட்டதை அவரது முகத்தை பார்த்தபோது உணர முடிந்தது. பிறகு இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

இந்த பேச்சின் போது நண்பருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. அந்த வருத்தம் அவரிடம் இருப்பதை நண்பரின் பேச்சின் மூலம் அறிந்தேன். 45 வயது நிரம்பி விட்ட அந்த நண்பர், தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தம்முடைய குடும்பத்தில் தந்தை உட்பட சிலர் வட்டி தொழில் செய்ததே காரணம் என மறைமுகமாக கூறினார். தம் குடும்பத்தினர் அதிகமாக அநியாயமாக வட்டி வாங்கியதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம்தான் தம்மை துரத்துவதாக நண்பர் வேதனை தெரிவித்தார். 

தம்முடைய நண்பர்கள் அனைவரும் திருமணமாகி வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்ட நிலையில், தாம் மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக நண்பர் தமது பேச்சின் மூலம் மறைமுகமாக கூறியபோது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருந்தது. விரைவில் நல்லது நடக்கும் என நண்பருக்கு ஆறுதல் கூறி பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன்.

நண்பரிடம் பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அது, தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தமது குடும்பத்தினர் அநியாயமாக வட்டி வாங்கியதுதான் என நண்பர் உணருகிறார் என்பதுதான்.  தமது குடும்பத்தினர் மற்றும் முன்னோர்கள் செய்த பாவம்தான் தம்மை துரத்திக் கொண்டிருப்பதாக நண்பர் நினைக்கிறார். வட்டி வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டு உள்ளது  என்பதையும் அதனால் எத்தகைய பாதிப்புகள் பின் விளைவுகள் ஏற்படும் என்பதையும் நண்பரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலம் என்னால் ஓரளவுக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

வட்டிக் கடன் மிகப்பெரிய கொடுமை:

இந்த சூழ்நிலையில், வட்டிக்கு பணம் கொடுப்பது மட்டுமே பாதிப்பு, வட்டிக்கு கடன் வாங்குவது பாதிப்பு இல்லை என ஒருபோதும் நீங்கள் நினைக்காதீர்கள்.  நடுத்தப் பிரிவு வருவாய் கொண்ட மக்களை குறிவைத்து, சில நிதி நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி, அவர்களின் ஆர்வத்தை தூண்டி, மாதம் தோறும், குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் போதும், உங்களுக்கு நாங்கள் கடன் கொடுக்கிறோம் என அந்த நிதி நிறுவனங்கள் இளைஞர்களை தங்கள் வலையில் விழ வைக்கின்றன. இந்த இ.எம்.ஐ. என்ற ஆசை வார்த்தைகளில் மயங்கும் இளைஞர்கள், தங்களது சக்திக்கு மீறி, வட்டிக்கு கடன் வாங்கி விடுகிறார்கள். பிறகு, அந்த கடனை அடைக்கவே, வாழ்நாள்யெல்லாம் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், வட்டிக்கு கடன் வாங்கும் சிறு வணிகர்கள், தாங்கள் சாம்பதிக்கும் வருவாயில் பெரும் பகுதியை வட்டியை கட்டுவதற்கே செலவழித்து விடுகின்றனர். இதனால், அவர்களது குடும்பம் எப்போது வறுமையில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல ஆடை, ஆகியவற்றை வாங்கித் தர முடியாத நிலை, வட்டிக்கு கடன் வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் தற்போது இருந்து வருகிறது. வட்டி என்னும் சொல்ல கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தாலும், அதனால் பாதிப்புகள் அதிகம் என்பதை, கடன் வாங்கி வட்டி செலுத்தும் நண்பர்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் கேட்டால், உங்களுக்கு நன்கு புரியும். 

வட்டி குறித்து இஸ்லாம் எச்சரிக்கை:

இதனால் தான், இஸ்லாத்தில் வட்டிக்கு கடன் வாங்குவதும் கொடுப்பதும் ஹராம் அதாவது தடை செய்யப்பட்டுள்ளது.  ஏக இறைவன் தனது திருமறையில் வட்டி குறித்து மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளான்.

"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)

இதேபோன்று மற்றொரு வசனத்தில், "நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!" "அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்" (அல் குர்ஆன்: 2:278,279)

மேலும், "நம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்." (திருக்குர்ஆன்:3:130.) என்று ஏக இறைவன் வட்டி குறித்து மிகக் கடுமையாக எச்சரிக்கிறான். 

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, வட்டி குறித்து மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.

இதேபோன்று, "வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.

வேண்டாம் வட்டி:

எனவே தோழர்களே, உங்களது வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என நீங்கள் உண்மையில் விரும்பினால், வட்டி என்ற கொடுமையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் வாழும் வாழ்க்கையை கண்டு, அதேபோன்ற வாழ்க்கையை நீங்களும் வாழ விரும்பி, அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பிறகு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வட்டியால் உங்கள் குடும்பத்தில் பரக்கத் எனும் அருட்கொடை ஒருபோதும் இருக்காது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

தற்போதைய நவீன பொருளாதார உலகத்தில் வட்டி என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டாலும், நாம் அதில் இருந்து விலகியே இருக்க வேண்டும். குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமது நல்ல செயல்கள் மூலம் பிறரை கவர்ந்து, வட்டியில்லா கடன் பெற முயற்சி செய்ய வேண்டும். நமது பண்புகள், செயல்களால் கவரும் நல்லவர்கள் உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவர்களிடம் வட்டியில்லா கடன் பெற்றால், அதை நேர்மையாக குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி கொடுத்த விட வேண்டும். 

மேலும், ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாயை சேமித்து, அதன்மூலம் தங்களது வணிகத்தை விரிப்படுத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அதிக வட்டிக்கு  கடன் வாங்கி, அனுபவம் இல்லாத தொழிலில், வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யவே கூடாது. இப்படி, செய்த பலர், தங்களிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, மிகப்பெரிய கடனாளிகளாக மாறி, பின்னர் வாழ்க்கையை தொலைத்துவிட்டதை நான் அனுபவத்தில் கண்டு இருக்கிறேன். கடைசியாக, வட்டி என்னும் கொடூர அரக்கனிடம் சிக்கிக் கொள்ளாமல், திருப்தியான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டால், வட்டி எந்த ரூபத்திலும், நம்மை பின் தொடராது என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: