Monday, November 20, 2023

திப்பு சுல்தானின் ராக்கெட் ஏவுதளம்....!

உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம் திப்பு சுல்தானின் ஸ்ரீரங்கப்பட்டணம்....!

உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மைல்கற்களை எட்டி வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு சந்திராயன் 2, 3 என ராக்கெட்டுகளை அனுப்பி சாதனை புரிந்துள்ளது.

இதன்மூலம் இஸ்ரோவில் சேர இளம் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இஸ்ரோவில் தங்களது திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு மூலம் சாதித்து நாட்டிற்கு பெருமை தேடி தருகிறார்கள்.

முதல் ராக்கெட் தளம்:

ஒருமுறை, ஜே.எஸ்.எஸ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக மைசூருக்கு சென்ற விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளையிடம் மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தானின் விஞ்ஞான ஆர்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த சிவதாணுபிள்ளை, பண்டைய அறிவு மற்றும் அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்பு போற்றக் கூடியது என்றார்.  

பல கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளது என்றும் முதன்முதலாக இந்தியாவின் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்துதான் விண்ணை நோக்கி ராக்கெட் பறந்தது என்றும் அவர் கூறினார்.

அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிட்டு 2006-இல் அறிக்கை அளித்ததாக குறிப்பிட்ட பிள்ளை,

அதனடிப்படையில், ஏவுதளத்தை புனரமைக்கும் பணியை ஏஎஸ்ஐ மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்

ஆனால், அந்தப் பணி முழுமையாக முடிக்கவில்லை என்றும் பிள்ளை வேதனை தெரிவித்தார். 

உலகில் முதல் முதலாக:

இதேபோன்று, அறிவியல் மாநாட்டில் பேசிய சிவதாணுபிள்ளை, உலகில் முதன்முதலாக ராக்கெட் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்துதான் ஏவப்பட்டது என்று பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைந்தார்.

இதை நாட்டில் உள்ள பெரும்பாலானோர் அறியாமல் இருக்கின்றனர் என்றும் ஆங்கிலேயர்களை வீழ்த்துவதற்காக அவர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தானால் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்றும் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கூறினார்.

மாவீரன் திப்பு சுல்தான்:

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் ஆட்சியை குறித்து இதுபோன்ற பல நல்ல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன். இந்த நிலையில், மாவீரன் திப்பு சுல்தான் குறித்து, வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி மோதல்களை வெடிக்கச் செய்து வரும் பாசிச அமைப்புகள், உண்மை வரலாற்றை மறைக்க முயற்சி செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட தியாகியாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் அன்பு செலுத்தி ஆட்சி செய்த திப்பு சுல்தானை குறை கூறுவதை நிறுத்தி, இனியாவது திருந்துவார்களா என்பதுதான் நமது கேள்வி. 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: