" குறுஞ்செய்தி......! (SMS) "
இரவு பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல, திருவல்லிக்கேணியில் இருக்கும் எனது அறைக்கு திரும்பிய நேரம் அது....
என் செல்பேசி திடீரென சிணுங்கியது...
செல்பேசியை கையில் எடுத்து பார்த்தபோது, நண்பர் கிரிஸ்டோபர் அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது...
கிரிஸ்டோபர் அனுப்பிய செய்தி இதுதான்....
" இதுவரை
நீங்கள்
எனக்கு
அனுப்பிய
86
குறுஞ்செய்திகளுக்கு
என் அன்பு நன்றி....
அவைகளை
நான்
சேமித்து
வைத்துள்ளேன்..
வாழ்க்கையின்
பல
சூழ்நிலைகளில்
அவை
எனக்கு
நண்பனாக
துணை நின்றது...
மிக்க நன்றி...
தொடரட்டும்
உங்கள்
பெருந் தொண்டு...."
கிரிஸ்டோபரின் வார்த்தைகளை படிக்கும்போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைந்தது...
என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழி அல்லது வாழ்க்கை தத்துவம் அல்லது, சிரிப்பு மொழி என ஏதாவது ஒரு குறுஞ்செய்தியை (SMS) செல்பேசி வழியாக அனுப்பும் பழக்கம் என்னிடம் உண்டு...
குரூப் எஸ்.எம்.எஸ். என்ற வகையில் அனுப்பாமல், ஒவ்வொரு நண்பருக்கும் தனித்தனியாக அனுப்பி வைப்பேன்...
அதன்மூலம், அந்த நண்பரின் முகம் என் மனத்திரை முன் வந்து செல்லும்...
அந்த நேரத்தில் நண்பர்களை நினைக்கும்போது, உள்ளத்தில் ஒருவித ஆனந்தம் பிறக்கும்...
நான் அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் நண்பர்கள், என்னையும் ஒரு நிமிடம் நினைத்து பார்க்கும் நிலை உருவாகும்...
இதன்மூலம் நல்ல உறவு, நட்பு தொடரும்...
இது எனது ஆசை....
என்னுடைய ஆசை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
நான் பல ஊடகங்களில் பணிபுரிந்தாலும், அந்தந்த ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்களுடன் இப்போதும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு...
அதற்கு முக்கிய காரணம் நான் அனுப்பும் குறுஞ்செய்தி என்றே கூறலாம்...
பல குறுஞ்செய்திகளை படித்து நண்பர்கள் உடனே என்னை அழைத்து பாராட்டுவது உண்டு...
அது மகிழ்ச்சி அளித்தாலும், அந்த நண்பர் சிறிது நேரம் என்னுடன் பேசும்போது, இருவரிடம் இருக்கும் உறவு, பாசம் மேலும் அதிகரிக்கும்...
இப்படிதான், கிரிஸ்டோபருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பினேன்... அதனால் மகிழ்ச்சி அடைந்து அவர் எனக்கு அனுப்பிய செய்தி இப்போது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது...
எனினும்...
குறுஞ்செய்தி அனுப்பும்போது முக்கியமான ஒரு விஷயம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்...
நான் அதனை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறேன்...
அவசியம் இல்லாமல் அதிகாலை நேரங்களில் குறுஞ்செய்திகளை யாருக்கும் அனுப்புவதில்லை...
சமீபத்தில் திருமணம் முடித்த நண்பர்களுக்கு ஒரு மாதம் வரை குறுஞ்செய்தி அனுப்புவதில்லை... அதனால் அவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம்...
துன்ப நேரங்களில் நண்பர்கள் இருந்தால், அந்த நேரத்தில் மகிழ்ச்சியான, சிரிப்பை வரவழைக்கும் சில ஜோக்குகளை கண்டிப்பாக அனுப்பி வைப்பதில்லை...
முடிந்தவரை, அந்த நண்பர்களின் துன்பங்களில் நேரில் பங்கேற்று ஆறுதல் கூற முயற்சி செய்வேன்...
பல நேரங்களில் நண்பர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன்... என்னுடைய குறுஞ்செய்திகள் உங்களுக்கு தொல்லை கொடுகிறதா...அப்படி இருந்தால் சொல்லுங்கள்... குறுஞ்செய்திகளை அனுப்புவதை நிறுத்தி விடுகிறேன்...
இப்படி, நேரடியாக கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இருப்பது இல்லை...
தோழர்களுக்கு அனுப்பும் ஒருசில குறுஞ்செய்திகளை தோழிகளுக்கு கண்டிப்பாக அனுப்புவதில்லை...
இப்படி பல நெறிமுறைகளை குறுஞ்செய்திகளை அனுப்பும்போது நான் கடைப்பிடிப்பது வழக்கம்...
பல நேரங்களில் தவறி குறுஞ்செய்தி அனுப்பி விட்டால், அந்த தவறுக்காக உடனே மன்னிப்பு கேட்டு விடுவதும் உண்டு...அதை கவுரவக் குறைவாக நினைப்பதே இல்லை...
ஆக, குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கதால் பல நண்பர்களின் நட்பு இன்னும் தொடர்கிறது...
பலர் பல்வேறு ஊர்களில், பணிகளில் இருக்கிறார்கள்...
ஆனால், எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ்செய்திகள் எங்களை நாள்தோறும் இணைக்கிறது...
உள்ளங்கள் இணைகின்றன....
பல மதங்கள், பல நிறங்கள், பல மார்க்கங்கள்... பல சிந்தனைகள்.... பல தொழில்கள்...
பல கொள்கைகள்...
ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள்...
ஆனால், எங்களை, ஒவ்வொரு நாளும் நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்... என்ற குறுஞ்செய்தி நிச்சயமாக இணைத்துக் கொண்டிருக்கிறது....
உள்ளங்கள் இணையட்டும்....சகோதரத்துவம் தழைக்கட்டும்....
அதற்கு, எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி துணையாக நிற்கட்டும்...
No comments:
Post a Comment