கல்வியில் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை.....!
கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் எப்போதும் அழிக்க முடியாத பெரும் செல்வமாகும். நாம் சம்பாதிக்கும் பணம், வசதி, வாய்ப்புகள் அனைத்தும் நம்மை விட்டு பிரிந்தால் கூட, கல்வியறிவு மட்டும் நம்மிடையே எப்போதும் குடியிருக்கும். அதன்மூலம் நாம் ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். தற்போது மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, படிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞர்கள் மத்தியில், கல்வி குறித்த தேடல்கள் அதிகரித்து வருகிறது. எந்த படிப்புகளில் சேர்ந்தால், வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கலாம் என்ற ஆர்வம் இளைஞர்களிடையே இருந்து வருகிறது. அதன் காரணமாகதான் சிறந்த பல்கலைக்கழங்களை தேர்வு செய்யும் மனநிலை அவர்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எவை, அங்கு எப்படி கல்வி சொல்லித் தரப்படுகிறது. அதன்மூலம் கிடைக்கும் விசாலமான அறிவு என்ன, பயன் என்ன போன்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் இருப்பதை நாம் தற்போது காண முடிகிறது.
அதேநேரத்தில், படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், படிப்பு வாழ்க்கைக்கு எந்த பலனையும் தராது என்ற ஒரு சிந்தனை சிலரிடம் இருந்து வருகிறது. அந்த சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. எனவே, கல்வியில் ஆர்வம் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்யும் போக்கு தற்போது நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த மூளை சலவை செய்யும் நடவடிக்கைகளை இளைஞர்கள் புறக்கணித்துவிட்டு, தங்களுடையே முழு கவனத்தை கல்வியில் அதாவது படிப்பில் செலுத்த வேண்டும். அதற்காக ஆர்வம் கொண்டு, கடினமாக உழைத்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். கல்வியை தவறவிட்டவர்கள், தங்களுக்கு வயது ஆகிவிட்டது. இனி படித்து என்ன பயன் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. கல்வியில் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆந்திரா முதியவர் சாதனை:
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள போடோவரிபாலிம் கிராமத்தில் வசிப்பவர் ரவி ஸ்ரீனிவாஸ் ராவ். 53 வயதான இவரும், இவரது குடும்பமும் விவசாயத் தொழிலுடன் தொடர்புடையது. கிராமத்தில் பிறந்த வளர்ந்தாலும், ஸ்ரீனிவாஸ் ராவிற்கு கல்வி மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது பட்டப்படிப்பை அவர் கடந்த 1993ஆம் ஆண்டு முடித்தார். அறிவியலில் பட்டம் முடிந்த ராவ், மருத்துவமனை நிர்வாகத் துறையில் சேர்ந்து நெல்லூர், ஓங்கோல், கர்னூல் ஆகிய இடங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றினார். தற்போது விஜயவாடாவில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் கிளஸ்டர் தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.
அறிவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ராவ், தனது குழந்தைகளை உயர்கல்விக்கு ஆளாக்குவதில் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை. ராவின் மூத்த மகன் யஷ்வந்த் ஒரு மருத்துவர் அத்துடன் குழந்தை மருத்துவராகவும் பணிபுரிகிறார். அவரது இரண்டாவது மகன் கரண் ஐஐடி பாட்னாவில் பி.டெக் முடித்து தற்போது தரவு விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
792 ஆன்லைன் படிப்புகளை முடித்த சாதனை:
கற்றலுக்கு வயதை ஒரு தடையாக மக்கள் பார்க்கும் உலகில், 53 வயதான ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் ஆன்லைன் கற்றலில் மூலம் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். கல்வி மற்றும் கற்றல் மீதான அவரது ஆர்வம் காரணமாக, ராவ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 792 ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்து அனைத்துப் படிப்புகளிலும் நன்கு தேர்ச்சிப் பெற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்கள் வரை நடத்தும் இந்தப் படிப்புகளில் சேர்ந்த அவர் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.
அத்துடன், ரவி ஸ்ரீனிவாஸ் ராவின் கல்வி தாகம் குறையவில்லை. ஆயிரம் ஆன்லைன் படிப்புகளை முடிக்க வேண்டும் என்பது தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் டிஜிட்டல் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலக சுகாதார நிறுவனம், எம்ஐடி போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் படிப்புகளை ராவ் முடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவலாகும். அதுமட்டுமின்றி கேம்பிரிட்ஜ் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் ராவ் முடித்துள்ளார்.
'ஹெல்த்கேர் இண்டஸ்ட்ரியில் டிஜிட்டல் விளக்கம்' என்ற தலைப்பில் அவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தார். ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் தனது சாதனைகளின் மூலம் ஒரு கலங்கரை விளக்கமாக மாறினார், குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு கற்க ஆர்வம் இருந்தால், உலகில் உள்ள அனைத்து அறிவையும் கற்றுக்கொள்ளலாம் என்ற செய்தியை அவர் வழங்கியுள்ளார்.
குடும்பம் அளித்த ஊக்கம்:
தனது கல்வி ஆர்வம் மற்றும் ஆன்லைன் படிப்புகள் குறித்து கருத்து கூறியுள்ள ராவ், “தான் ஆன்லைன் படிப்புகளைப் படிக்கத் தொடங்கியபோது, தன்னுடையே குழந்தைகள் தன்னை ஊக்கப்படுத்தினர் என்றும் அவர்களும் தனக்கு வழிகாட்டினார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இன்று தான் எதைக் கற்றுக்கொண்டாலும், அதற்கு முக்கிய காரணம் தன் குழந்தைகளும் மனைவியும் தனக்கு அளித்த நிறைய உதவிகள், உற்சாகம், ஊக்கம் ஆகியவை முக்கிய காரணம் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுவரை 792 படிப்புகளை முடித்து இருப்பதாகவும்,. குறைந்தபட்சம் ஆயிரம் ஆன்லைன் படிப்புகளைக் கற்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் ராவ் கூறியுள்ளார். ஒருவர் விரும்பினால், உலகில் எதையும் சாதிக்கலாம் என்றும் அதற்கு தாமே நல்ல எடுத்துக்காட்டு என்றும் ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.
வயது தடையே இல்லை:
நாம் எந்தவொரு துறையிலும் சாதிக்க வேண்டுமானால், அதற்கு நல்ல கல்வி மிகவும் அவசியம். எனவே, நம் இளைஞர்கள் எப்போதும் கல்வி என்ற உயர்ந்த இலக்கை அடைய தொடர்ந்து ஆர்வம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் கற்றுக் கொண்டே இருப்பதில் தான் சுகம் அதிகம். கல்வியறிவு என்பது சமூகத்தில் ஒருவரை உயர்ந்த இடத்தில் கொண்டு சென்று வைக்கும் ஒரு ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வயதாகிவிட்டது, இனி படித்து என்ன பயன் என யாரும் நினைத்துவிடக் கூடாது. கல்வியில், படிப்பில் சுவை கண்ட மக்களை பார்த்து அதன் அருமை குறித்து கேட்டால், நீங்கள் ஆச்சரியம் அடையும் வகையில் உங்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். அதன்மூலம், கல்வி மீது உங்களுக்கே புதிய ஆர்வம் பிறந்துவிடும். அத்தகைய செல்வம்தான் கல்வி செல்வமாகும்.
வயது ஆகிவிட்டது எனவே ஒதுங்கிவிடலாம் என்று நினைக்காமல், ஓய்வு நேரங்களில், ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழ் தெரிந்தவர்கள் உர்தூ, அரபி, ஆங்கிலம் என பல மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தியா உட்பட உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள், ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல், தபால் மூலம் கூட மொழி குறித்த படிப்புகளை சொல்லித் தருகின்றன. இந்த படிப்புகளில் சேர்ந்து புதிய மொழிகளை அறிந்துகொள்வதுடன், அந்த மொழியில் சிறப்பு பெற்று பட்டங்களை பெறலாம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் பாடங்கள் மூலம் நமது அறிவு விசாலமாகி வாழ்க்கை மேன்மை அடையும். அதன்மூலம், உலகம் குறித்த நம்முடையே பார்வை, எண்ணங்கள் ஆகியவற்றில் நல்ல புரிதல் ஏற்பட்டு, மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் உருவாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment