Thursday, November 16, 2023

நன்மையை நோக்கி அழைப்பது.....!


தீமைகளைத் தடுத்து நன்மையை நோக்கி அழைப்பது

இஸ்லாமியர்களின் முக்கிய கடமை….!

 

ஏக இறைவனால் இந்த உலகம் அழகாகவும் அற்புதமாகவும் படைக்கப்பட்டுள்ளது. அழகான இந்த உலகத்தில் மனித சமுதாயம் அமைதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமும் நோக்கமுமாகும். எனவே தான், திருக்குர்ஆன் எனும் வேதநூலை இறைவன் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளான்.  அத்துடன் இறைத் தூதர்கள் மூலம் மனித சமுதாயத்திற்கு அழகான வாழ்க்கை நெறியை கற்றுத் தந்துள்ள ஏக இறைவன், அதன்படி, வாழ்ந்தால், மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும் என தெரிவித்துள்ளான்.

ஆனால், ஏனோ, இதனை மறந்துவிட்டு, மனிதன் தன்னுடைய போக்கில் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நெருக்கடிகள், பிரச்சினைகள் மூலம் தீமையின் பக்கம் மனிதனின் கவனம் செல்கிறது. அதன்மூலம் தீர்வு கண்டுவிடலாம் என அவன் தவறாக எண்ணிவிட்டு, செயல்படுகிறான். தீமையின் பக்கம் செல்லும் மனிதனுக்கு வசதி, வாய்ப்புகள் கிடைக்கலாம், ஆனால், மன நிம்மதி, மகிழ்ச்சி ஒருபோதும் வாழ்க்கையில் நிச்சயம் கிடைக்காது.

அதிகரிக்கும் தீமைகள்:

உலகில் மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க, தீமைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, குற்றங்கள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. குற்றவாளிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றன,. ஆனால், அதில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி கிடைப்பது இல்லை. இதனால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. கணினி யுகத்தில், நவீன முறையில் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இப்படி தீமைகள் அதிகரிக்க ஒரே காரணம் மனிதனின் பேராசை என உறுதியாக கூறலாம். ஏக இறைவனுக்கு பயந்து ஒழுக்கமான வாழ்க்கையை வாழ மனிதனின் மனம் ஏனோ விரும்புவதில்லை. இதனால், அவனிடத்தில் தீமைகள் குடி புகுந்துவிடுகின்றன. இதனை விட்டு விலக முடியாமல் மனிதன் தவித்துக் கொண்டே இருக்கிறான். நம்மில் பலருக்கு தீமையில் சிக்கியவர்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் கிடைத்து இருக்கும். அதனால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள், நரகத்திற்கு ஈடாக இருக்கும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சரி, தீமைகளை தடுக்க என்ன வழி? என நாம் சிந்தித்தால், அது நன்மையின் பக்கம் மனிதர்களை அழைப்பது தான் என புரிந்துகொள்ள முடியும். .

நன்மையின் பக்கம் அழைப்பு:

தீமைகளை தடுத்து நன்மையை நோக்கி அழைப்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் முக்கிய கடமை என மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. தீமைகளை பார்த்துவிட்டு, அமைதியாக சென்றுவிடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

ஏக இறைவன் தனது திருமுறையில் கூறுகிறான்: “மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் 2:110)

இதேபோன்று, மற்றொரு அத்தியாயத்தில், “நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள்” (திருக்குர்ஆன் 9:71) என்றும், “அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது” (அல்குர்ஆன் 22:41) என இறைவன் கூறியுள்ளான்.

மேலும் "(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்: (அல்குர்ஆன் 9:112) 

இதன்மூலம் மனிதன் சக மனிதர்களை நன்மையின் பக்கம் அழைப்பது முக்கிய கடமை என்பது  உறுதியாகதெரிய வருகிறது. Amr bi al-Mruf மற்றும் Nahi an al-Munkar என்பது குர்ஆனிய சொல். அதன் பொருள் நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் ஆகும். அம்பர் அல்-மஹரூபின் நோக்கம் மக்களைப் பயனுள்ள சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவது, மேலும் நஹி-அன்-உல்-முன்கர் நோக்கம் மக்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதாகும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதில் இருந்து தெரியவரும் உண்மை, ஏக இறைவனும், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்)  அவர்களும் தடை செய்த விஷயங்களிலிருந்து ஒரு நபர் விலகியே இருக்க வேண்டும் என்பதாகும்.  அத்துடன், தீமைகளில் இருந்து சமூகத்தின் மற்ற உறுப்பினர்களைத் தடுக்க முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாமியர்களின் கடமை:

அனைத்து மனிதர்களையும் சீர்திருத்துவதில் அக்கறை காட்டுவது முஸ்லிம் உம்மத்தின் முக்கிய கடமையாகும். இதற்காக ஏக இறைவன் மீது நாம் முழு நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியமாகும். நன்மையின் பக்கம் அழைக்கும் இந்த முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கை ஒரு முன்நிபந்தனையாகும். ஏனென்றால், நம்பிக்கை மட்டுமே ஒருவரைத் தொடர்ந்து நல்லதைக் கட்டளையிடவும், தவறானவற்றிலிருந்து தடுக்கவும், வழியில் வரும் பிரச்சனைகளைத் தாண்டிவிட்டு முன்னேறும் திறனை வளர்க்கும். அதனால்தான் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள்: “உங்களில் எந்தத் தீமைகளைக் கண்டாலும் அதை உங்கள் கையால் தடுத்துவிடுங்கள், உங்களுக்கு வலிமை இல்லையென்றால், உங்கள் நாவினால் அதை நிறுத்துங்கள். அதற்கும் உங்களிடம் வலிமை இல்லை எனில்,  அதை உங்கள் இதயத்தால் தீமையாகக் கருதுங்கள்

ஒரு தேசம் அல்லது குழு அதன் நிலைப்பாட்டை உணரும் வரை, அதன் யதார்த்தத்தையும் மதிப்பையும் அங்கீகரிக்க முடியாது. தேசத்தின் முக்கியமான பொறுப்பு முழு மனிதகுலத்தையும் வழிநடத்துவதும் ஆள்வதும் ஆகும், ஆனால் உரிமைகோரல்களால் மட்டுமே இந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. மாறாக, அவர் சரியான நம்பிக்கை, சரியான சிந்தனை, சரியான அறிவு, உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள், நிலையான குணாதிசயங்கள் மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையை மேற்கொண்டு அதனை மற்றவர்களுக்கு மாற்றுவது அவசியம். ஒவ்வொரு துறையிலும் ஒருவருக்கு உள்ள அறிவை மனித குலத்தின் நலனுக்காக பயன்படுத்தி பாடுபடுவதன் மூலம் தீமைகள் நாம் தடுக்க முடியும்.

எதிர்மறை, தீமை ஊழல், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் பல தெய்வ வாழ்க்கையில் இருந்து விலகி,  நன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதியை மேம்படுத்த முயற்சிப்பது இஸ்லாமியர்களின் கடமையாகும்.

நன்மையே மகிழ்ச்சி தரும்:

ஏக இறைவன் கூறுகிறான்: "உங்களில் சிலர் நன்மையை நோக்கி அழைக்கிறார்கள், நன்மையை ஏவுகிறார்கள், தீமையைத் தடுக்கிறார்கள். இதைச் செய்பவர்கள் வெற்றியடைவார்கள்.” (ஆல்-இம்ரான்: 104)

எனவே, நாம் வெற்றி அடைய வேண்டுமானால், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, நம்மால் முடிந்த அளவுக்கு நாம் தீமைகள் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன், முதல்படியாக, நம்மிடம் உள்ள தீமைகளை அகற்ற முயற்சிகளை செய்து அதில் வெற்றி அடைய வேண்டும். ஒரு மனிதனை தீமையில் இருந்து தடுப்பது எவ்வளவு பெரிய நல்ல செயலாக இருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள். இந்த சிந்தனையே உங்களை மகிழ்ச்சி அடையச் செய்துவிடும். நாம் மட்டும் நல்லவர்களாக வாழ்வதோடு மட்டுமல்லாமல், நம்மைச் சேர்ந்தவர்களும் நற்பண்புகள் கொண்டு வாழ்ந்தால், அந்த சமுதாயத்தில் ஆனந்தம் பிறக்கும் அல்லவா. எனவே, தீமைகளை தடுத்து, நன்மையை நோக்கி அழைக்கும் பணிகளை இன்றே தொடங்குவோம்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: