Thursday, November 23, 2023

ஏ.ஆர்.ஆரின் அக்கறை...!

சமூக அக்கறை....!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தற்போது கல்வி வணிக மயமாகிவிட்டது.

காசு, பணம், துட்டு கொடு கல்வியை பெற்றுக் கொள் என்கின்றனர் கல்வி நிறுவன அதிபர்கள்.

சரி, பணத்தை பெற்றுக் கொண்டு கல்வியை அளிக்கும் இந்த கல்வி  வணிகர்கள், படிப்பு முடிந்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்க முயற்சி செய்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

ஒருசில கல்வி நிறுவனங்கள் பெயரளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன.

அவ்வளவுதான்.

அதில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் நிறைவு அடைகிறார்கள் என்பது இன்னும்  கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை அண்மையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

அதில் தாம் நடத்தும் இசை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரின் ஒழுக்கம் மற்றும்  நல்ல பண்புகள் குறித்து அக்கறையுடன் பேசிய ரஹ்மான்,  தமது இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுதான் தமது கவலை என்றும் தெரிவித்தார்.

இசைத் துறையில் ஆர்வம் செலுத்தும் மாணவர்களுக்கு பிற துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை போன்று கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே தமது இசை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்ட வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளில் தாம் கடுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும் ரஹ்மான் கூறினார்.

தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனில் என்ன ஒரு அக்கறை இசைப்புயலுக்கு.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் சமூக அக்கறையை நாம் பாராட்டதான் வேண்டும்.

கல்வி நிறுவங்களை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் கல்வி வணிகர்கள் மத்தியில் ஏ.ஆர.ரஹ்மான் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: