பழைய
சோறு எனும் அமிர்தம்…..!
இந்திய கூட்டுக் குடும்பங்களில் பழைய சோறு என்ற உணவு உண்ணும் பழக்கம் ஒரு காலத்தில்
இருந்து வந்தது. மிகப்பெரிய கூட்டுக் குடும்பங்களில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள்,
பெண்கள் என அனைவரும் பழைய சோற்றுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.
முதல் நாள் இரவுவே பழைய சோறுக்காக முன்பதிவு நடைபெறும் வழக்கமும் இருந்தது. ஆனால்,
தற்போது நவீன நாகரிக உலகில், பழைய சோற்றின் அருமை ஏனோ இளம் தலைமுறையினருக்கு சரியாக
தெரியவில்லை. பழைய சோறு சாப்பிடுவது கவுரவக் குறைச்சல் என்ற மனப்பான்மை இளைஞர்கள் மத்தியில்
இருந்து வருகிறது. இதனால், பழைய சோற்றின் பக்கம் அவர்கள் கவனம் சிறிதும் செல்வதில்லை.
மாறிவரும் உணவுப் பழக்கங்களால், உடலுக்கு தீமை விளைவிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு,
பின்னர் அதன்மூலம் பல்வேறு உடல் நோய்களுக்கு இன்றைய இளைஞர் சமுதாயம் ஆளாகி பாதிக்கப்பட்டு
வருகிறது. உடலுக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியம் என்பதை ஏனோ இளைஞர்கள் உணர்ந்துகொள்ள
மறுக்கிறார்கள். வேகவேகமாக சாப்பிட்டு, விரைவு விரைவாக பணிகளுக்கு செல்லும் பழக்கம்
இருப்பதால், எப்போதும் ஒருவித மன உளைச்சலுக்கு இன்றைய இளைஞர் சமுதாயம் ஆளாகி வருகிறது.
சரி பழஞ்சோறு அதாவது பழைய சோறு என்பது என்ன? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? மனதிற்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்ன? என்பதை கொஞ்சம் தெரிந்துக் கொள்வோமா!
பழைய சோறு ஒரு அமிர்தம்:
பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும்
உணவாகும். குடும்பங்களில் சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்யும் வழக்கம் இருந்து
வந்தது. தற்போதும் ஒருசில குடும்பங்களில் இந்த வழக்கம் இருக்கிறது. குறிப்பாக, கிராமப்புற
மக்கள் பழைய சோறு உண்ணும் பழக்கத்தை இன்னும் கைவிடவில்லை. இதனால், அவர்கள் எப்போதும்
ஆரோக்கியமாகவும், தெம்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்கள். பொதுவாக, உழவர்கள்,
பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாக பழைய சோறு இருந்து வருகிறது. நன்மை விளைவிக்கும்
பாக்டீரியா `பழைய சோற்றில் அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள்
தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டு வந்தால், அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்
என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி
நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல்,
பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும்.
இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும்.
இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். `பழைய
சோறு சாப்பிடுவதன் மூலம் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமை குணப்படுத்தலாம் என்று மருத்துவ
ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நன்மையோ நன்மை:
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பல தலைமுறைகளாக வழக்கத்தில்
இருக்கும் உணவுதான் பழைய சாதம். பழைய சோறு ஒரு எளிய உணவுதான். ஆனால், இதிலுள்ள சத்துகள்
ஏராளம். பழைய சோற்றில் உள்ள
சத்துகள் நமக்கு முழுவதும் கிடைக்க வேண்டுமானால், அதற்காக நாம் சில முறைகளை கட்டாயம்
பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பழைய சோற்றில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும்.
இப்படி கிடைக்கும். சத்துக்கள் மூலம், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு
உருவாகும். சிலர் பழைய சோற்றை எடுத்துக் கொள்கிறேன் என்ற பெயரில், காலையில் வடிக்கும்
சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, பின்னர் மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி
சாப்பிடுவது அதிக பலனை தராது என பழைய சோறு குறித்து ஆய்வு செய்த சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
அதாவது, பழைய சோறு என்பது,
தண்ணீர் ஊற்றிவைக்கும் சாதம் நொதித்தலுக்கு உட்பட வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட
கால அவகாசம் தேவைப்படும். வடித்த சாதத்தை மண் பானையில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைக்க
வேண்டும். பானையை முழுவதுமாக மூடிவிடாமல் சிறிது காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள
வேண்டும். . சாதம் நொதிக்க வெயில் காலத்தில் 8 முதல் 10 மணிநேரமும், மழைக்காலத்தில்
10 முதல் 12 மணிநேரமும் எடுத்துக்கொள்ளும். பழைய சோற்றை நொதிக்க வைக்க மண்பாண்டமே சிறந்தது
என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது மண்பாண்டங்களை பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே
குறைந்து வருவது வேறு விஷயம். ஆனால், மண்பாண்டங்கள் மூலம் உணவுகளை தயாரித்து சாப்பிடுவது
எப்போதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனை தரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மண் பானையில் நொதிக்க வைத்த பழைய சாதத்தைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான
நீர்ச்சத்து கிடைக்கிறது. மேலும் நொதித்தலுக்கு உட்பட்ட சோற்றில் லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட
உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. தவிர இதில் வைட்டமின்கள்,
நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
உடல் பிரச்சினைகளுக்கு
தீர்வு:
பழைய சோறு நம் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்குச் சிறந்த உணவாக இருந்து அவற்றின்
எண்ணிக்கையைப் பெருக்குகிறது. தினமும் காலையில் ஏழு மணி முதல் எட்டரை மணிக்குள் காலை
உணவாகப் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என சித்த
மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். அத்துடன் பழைய சோற்றில் தான் பி6, பி12 ஏராளமாக
இருப்பதால், கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி அபரிமிதமாக பெருகும் என நாட்டு வைத்தியர்கள் சொல்வதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
காலையில் உணவாக இந்த பழைய சோற்றை சாப்பிட்டு வந்தால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.. இரவே
தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத்
தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். இதேபோன்று,,
பழைய சோற்றுத் தண்ணீ‘ரை அதாவது நீராகாரம் என்று அழைக்கப்படும் இந்த நீரை தினமும் குடித்துவந்தால்,
அது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். குளிர்ச்சியோடு,
எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம் என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது.
பழைய சோற்றில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுகிறது.
அத்துடன் உடலை சீராக இயங்கச் செய்கிறது. பழைய சோற்றை நாள் தோறும் சாப்பிட்டு வந்தால்,
இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறையும் என மருத்துவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுவதும் சோர்வின்றி வேலை
செய்ய பழைய சோறு மிகவும் உதவியாக இருக்கும் என்றும், .அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் கூட பழைய சோற்றை சாப்பிடுவதால்
சரியாகி விடும் என்றும் இந்திய பாரம்பரிய மருத்துவ உலகம் சொல்கிறது.
இனி கவுரவம் பார்க்க
வேண்டாம்:
நாள்தோறும் காலையில்
பழைய சோற்றை சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான
நோய்கள் குணமாகும். உடலில் அதிகமாக இருக்கும்
உடல் உஷ்ணத்தைப் போக்கும் தன்மை பழைய சோற்றுக்கு உண்டும். அலர்ஜி, ஒவ்வாமை போன்றப்
பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும் உணவாக பழைய சோறு
இருந்து வருகிறது.
இப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த அமிர்தமான பழைய சோற்றை உண்ணதான் தற்போது மேற்கிந்திய
நாடுகளின் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அங்குள்ள சில பிரபல உணவு விடுதிகளின்
உணவுப் பட்டியலில் பழைய சோறும் ஒன்றாக இருந்து வருகிறது. நம் நாட்டில் கூட ஒருசில நகரங்களில்
உள்ள உணவு விற்பனை நிலையங்களில் பழைய சோறு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் சாலையோர உணவு கடைகளில் கூட, பழைய சோறு மிகவும்
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள்
மிகவும் விரும்பி சாப்பிட்டு, தங்களது உடல்நலனை பாதுகாப்பதுடன், பொருளாதார நிலையையும்
சீர் செய்துக் கொள்கிறார்கள். சமூகத்தின் அடித்தள மக்கள், தொழிலாளர்கள், உடல் உழைப்பாளிகள்
சாப்பிடும் உணவு பழைய சோறு என்ற மனப்பான்மையில் இருந்து உடனடியாக விலகி, இந்த உணவை
சாப்பிடுவதில் நாம் கவனத்தை திருப்ப வேண்டும். சில விஷயங்களில் நாம் சிறிதும் கவுரவம்
பார்க்கவே கூடாது. அதில் ஒன்று தான் பழைய சோறாகும்.
பழைய சாதத்தை சாப்பிடும் விஷயத்தில் சிறிதும், கவுரவம் பார்க்கக் கூடாது என்பதை
எப்போதும் மனதில் நிலைநிறுத்துக் கொண்டு, இனி நாம் செயல்பட வேண்டும். பழைய சோறு சாப்பிடுவதை
கேவலமாக நினைத்தால், பின்னர் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி, சிகிச்சைக்காகவே
மருத்துவமனைகளுக்கு ஏராளமான பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும் என்பதை
மறந்துவிடாமல் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன இனி சிறிதும் கவுரவம்
பார்க்காமல், பழைய சோற்றை சாப்பிடும் பழக்கதை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் உடல்
ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக வாழ்வோமா…!
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment