Wednesday, November 15, 2023

முஹம்மது ஷமி & முஹம்மது சிராஜ்.....!

                           - முஹம்மது ஷமி எனும் இந்தியன் -


இந்திய மக்கள் தொகை கிட்டதட்ட 140 கோடியை நெருங்கியுள்ள நிலையில், அதில் சிறுபான்மையின மக்களாக வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 25 கோடியாக இருந்து வருகிறது. உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை நேசிப்பது போல, நாட்டையும் நேசித்து வருகிறார்கள். இஸ்லாத்தில்  சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை மதிப்பது அங்குள்ள சூழலை பாதுகாப்பது அந்த நாட்டுக்கு விசுவாசமாக நடப்பது போன்றவற்றையும் அது குறிக்கும்.

தேச எல்லைக்குள் வாழுகின்ற மனிதர்கள், மிருகங்கள், அங்கிருக்கும் தாவரங்கள், பறவைகள் போன்ற அனைவரும், அனைத்தும் ஏக இறைவனின் படைப்புகள் தான். அவர்கள் அனைவரும் எனது தேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அனைவரையும்  நான் நேசிக்க வேண்டும், உரிமைகளைக் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது எனது கடமை என்ற உணர்வின் அடுத்த பெயர்தான் நாட்டுப்பற்று என்பதாகும். எனவே தேசப்பற்றுள்ள ஒருவர், தனது தேசத்தில் பிறந்த எவருடனும் பகைமை பாராட்டமாட்டார். அங்குள்ள சூழலை நேசித்து தேச நிர்மாணத்தில் பங்கெடுப்பார்.

நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்கள்: ஈமானின் ஒரு பங்காக கருதப்படும் நாட்டுப்பற்றை  கொண்டு இந்திய முஸ்லிம்கள் அனைவரும், நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் நேசித்து அன்பு பாராட்டி சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன், நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், தங்கள் உண்மையான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத், மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப்,  மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், இஸ்ரோவில் சேவை ஆற்றிவரும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, பிரபல முஸ்லிம் தொழில் அதிபர்கள், வணிகர்கள், முஹம்மது அசாருத்தீன் போன்ற விளையாட்டு வீரர்கள் என நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் புகழை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்கும் உழைத்தவர்கள் ஏராளம். இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், தற்போதும் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அமைதியை சீர்குலைக்கும் இந்துத்துவ அமைப்புகள்: 

இப்படி, நாட்டின் நலனுக்காக உண்மையாக பணியாற்றும் முஸ்லிம்களை பார்த்து, பாசிச மற்றும் இந்த்துவ அமைப்புகள், தேச விரோதிகள் என குற்றம்சாட்டி வருகிறார்கள். ஒருசில சம்பவங்களை வைத்துக் கொண்டு, இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம்களையும் சந்தேகக் கண்களுடன் பார்த்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது வன்முறையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு போன்ற உண்மையான உரிமைகளை தங்களது அரசியல் அதிகாரம் மூலம் பறித்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் அமைதியை சீர்குலைக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும், இந்திய முஸ்லிம்கள் அமைதி காத்து, ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ஈமானின் ஒரு பங்காக கருதப்படும் நாட்டுப்பற்றை கையில் பிடித்துக் கொண்டு, தங்களது பணிகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். 

முஹம்மது ஷமி எனும் இந்தியன்: 

அறிவியில், தொழில், வணிகம், விளையாட்டு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் விளையாட்டு துறையிலும் முஸ்லிம்கள் தங்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி நாட்டின் புகழை ஓங்கச் செய்து வருகிறார்கள். பல்வேறு கடின உழைப்பு, மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் நல்ல திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இந்த வரிசையில் ஒருவர் தான் முஹம்மது ஷமி ஆவார். பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். ஒரு முஸ்லிம் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பதை, தற்போதை சூழ்நிலையில் நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ளலாம். முஹம்மது ஷமி, சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, நல்ல திறமைகளை வளர்த்துக் கொண்டு, அணியில் இடம் பிடித்தவர். அணியில் இடம் பிடித்தாலும், மற்ற வீரர்களால் அவருக்கு நல்ல ஊக்கம் அளிக்கப்படவில்லை. விராட் கோலி என்ற மனிதநேயர் மட்டுமே, முஹம்மது ஷமிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். 

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், அணியில் இடம் பெற்ற முஹம்மது ஷமிக்கு, ஆரம்ப போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு காரணம், முந்தைய போட்டிகளில் அவர், சரியாக  பந்துவீசவில்லை என்ற குற்றச்சாட்டாகும். விளையாட்டில் வெற்றி, தோல்வி இயல்பான ஒன்று என்ற சிந்தனை ஏனோ இந்திய அணிக்கு இல்லாமல் போய் விட்டதால், ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முஹம்மது ஷமி களம் இறக்கப்பட்டார். அந்த போட்டியில் 54 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தார் ஷமி. இதேபோன்று, அக்டோபர் 29ஆம் தேதி நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பறித்தார்.  அத்துடன் அவரது வேகம் நிற்கவில்லை. நவம்பர் 2ஆம் தேதி இலங்கைக்கு எதிரான நடந்த போட்டியில், முஹம்மது ஷமி, அதிரடியாக பந்துவீசி, 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மும்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் முஹம்மது ஷமி, தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள், உள் அரசியல் விளையாட்டுகள் ஆகிய அனைத்தையும் மறந்துவிட்டு, இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என ஒரே இலட்சியத்துடன் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போதைய உலகக் கோப்பை போட்டி தொடரில் முஹம்மது ஷமி, 6 போட்டிகளில் கலந்துகொண்டு, 23 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 

குவியும் பாராட்டுக்கள்: 

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய முஹம்மது ஷமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தியது உட்பட அவரது சிறப்பான ஆட்டம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது என அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். முன்பு, ஷமிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டவர்கள், தற்போது ஷமியின் சாதனைகளை கண்டு அதிர்ச்சி அடைந்து என்ன சொல்வது என தெரியாமல் தலை குனிந்து நின்றுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக முஹம்மது ஷமியை அவமானம் செய்த அவர்கள், இன்று அவரை பாராட்ட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

முஹம்மது சிராஜ்: 


இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு முஸ்லிம் வீரர் முஹம்மது சிராஜும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தனது நல்ல திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஆவார். தன்னுடைய ஆர்வம் மற்றும் முயற்சியால், இன்று இந்திய அணியில் இடம் பிடித்து, சிறப்பாக விளையாடி, உலக அரங்கில் நாட்டிற்கு புகழை தேடி தருகிறார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐந்து பேரின் பட்டியலிலும் முஹம்மது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில் அவர் 13 விக்கெட்டுகளை  வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். 

மனம் தளர்ந்துவிடக் கூடாது: 

முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ் ஆகிய இரண்டு இந்தியர்களின் வாழ்க்கை மூலம், முஸ்லிம்களுக்கு பல நல்ல படிப்பினைகள் கிடைத்துள்ளன. அது, எப்படிப்பட்ட அவமானங்கள், விமர்சனங்கள், நெருக்கடிகள், சாடல்கள் வந்தாலும் அதை கண்டு மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதாகும். பாசிச அமைப்புகள் முஸ்லிக்ளை குறிவைத்து, விமர்சனம் செய்தால், தங்களது திறமைகள், செயல்கள் மூலம், அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நாட்டின் நலன், முன்னேற்றம் ஒன்றே இலக்கு என்ற இலட்சியத்துடன் எப்போதும் முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும். அன்பால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும். நெருக்கடிகளை கண்டு, பயணத்தில் இருந்து பாதியிலேயே நின்றுவிடக் கூடாது. தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் இந்திய முஸ்லிம்களின் ஈமானின் ஒரு பங்காக எப்போதும் இருக்க வேண்டும். அப்படி தான், இந்திய முஸ்லிம்கள் தங்களது தாய் நாட்டு மீது உண்மையான பற்றுடன் இருந்து வருகிறார்கள். அதற்கு அண்மைக் கால எடுத்துக்காட்டுகள் முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ் என்றால் அது மிகையாகாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: